×

தாம்பரம் அருகே பரபரப்பு பாஜ பிரமுகர் வெட்டிக்கொலை: சிதம்பரம் அருகே 4 பேர் கைது போலீசார் தீவிர விசாரணை

தாம்பரம், செப்.20: தாம்பரம் அருகே பாஜ பிரமுகரை வெட்டிக்கொலை செய்த 4 பேரை, போலீசார் சிதம்பரம் அருகே சுற்றி வளைத்து கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தாம்பரம் அடுத்த பழைய பெருங்களத்தூர் குட்வில் நகர் பகுதியில் காலி நிலத்தில் வெட்டு காயங்களுடன் சடலம் ஒன்று கிடப்பதாக பீர்க்கன்காரணை காவல் நிலைய போலீசாருக்கு நேற்று காலை தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், முகம் சிதைந்த நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த அடையாளம் தெரியாத ஆணின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு, தாம்பரம் மாநகர காவல் துணை ஆணையர் பவன்குமார் தலைமையில் தனிப்படை போலீசார் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.

இதில், கொலை செய்யப்பட்ட நபர் பழைய பெருங்களத்தூர், காமராஜர் தெருவைச் சேர்ந்த பீரி வெங்கடேசன் (33) என்பது தெரிய வந்தது. 2015ம் ஆண்டு கொலை வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்ட இவர், பீர்க்கன்காரணை காவல் நிலையத்தில் சரித்திரப்பதிவேடு குற்றவாளியாக உள்ளார். இவர் தற்போது பாஜ பெருங்களத்தூர் மண்டல எஸ்சி அணி தலைவராக இருந்து வந்ததும் தெரியவந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வெங்கடேசனை காரில் கடத்தி வந்த மர்ம நபர்கள் அவரை கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதில், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை சேகரித்த போலீசார், பீரி வெங்கடேசன் கடத்திவரப்பட்ட காரின் விவரங்களையும் சேகரித்து கொலையாளிகளை சிதம்பரம் அருகே கைது செய்ததாக கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட நபர்களும், பீரி வெங்கடேசனும் நண்பர்களாக இருந்ததும், பின்னர் அவர்களுக்குள் ஏற்பட்ட முன் விரோதத்தால் இந்த கொலை நடைபெற்றதும் விசாரணையில் தெரியவந்தது.

இருப்பினும் கொலையாளிகளை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்திய பின்னர்தான் கொலைக்கான முழு விவரங்கள் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். இந்நிலையில் கொலை செய்யப்பட்ட பீரி வெங்கடேசன், பெருங்களத்தூர் மண்டல பாஜ எஸ்சி அணி தலைவர் என்பதால் நேற்று மாலை செங்கல்பட்டு வடக்கு மாவட்ட பாஜ தலைவர் செம்பாக்கம் வேத சுப்பிரமணியம் தலைமையில், 200க்கும் மேற்பட்ட பாஜவினர் தாம்பரம் மாநகர துணை ஆணையர் அலுவலகத்தில் திரண்டு கொலை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி புகார் அளித்தனர்.

அப்போது மாவட்டத் தலைவர் செம்பாக்கம் வேத சுப்பிரமணியத்திடம், கொலை குற்றவாளிகள் 4 பேர் கைது செய்யப்பட்டதாக தாம்பரம் மாநகர காவல் துணை ஆணையர் பவன் குமார் தெரிவித்ததையடுத்து அவர்கள் புகார் அளிக்காமல் திரும்பி வந்தனர். பின்னர் மாவட்டத் தலைவர் செம்பாக்கம் வேதசுப்பிரமணியம் நிருபர்களிடம் கூறுகையில், பீரி வெங்கடேசன் கொலை வழக்கில் 4 பேரை கைது செய்ததாக துணை ஆணையர் கூறியதால் நாங்கள் திரும்பிச் செல்கிறோம். குற்றவாளிகள் சிதம்பரத்தில் இருந்து போலீசாரால் காரில் அழைத்து வரப்படுகின்றனர். அதன்பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தெரியப்படுத்துவதாக போலீசார் கூறினர். பீரி வெங்கடேசனின் நண்பர்கள்தான் அவரை கொலை செய்ததாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். இந்த கொலை அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக நடைபெற்றதா என காவல்துறையினர் விசாரிக்க வேண்டும் என்றார்.

The post தாம்பரம் அருகே பரபரப்பு பாஜ பிரமுகர் வெட்டிக்கொலை: சிதம்பரம் அருகே 4 பேர் கைது போலீசார் தீவிர விசாரணை appeared first on Dinakaran.

Tags : BJP ,Chidambaram ,Tambaram ,Dinakaran ,
× RELATED பரம்பரை சொத்துவரிக்கு எதிரான...