×

உளுந்தூர்பேட்டை அருகே கார் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்து புதுச்சேரியை சேர்ந்தவர் உயிரிழப்பு

உளுந்தூர்பேட்டை, செப். 20: புதுச்சேரி மாநிலம் முத்தியால்பேட்டையில் வசித்து வந்தவர் தியாகராஜன் (62). இவர் தனது உறவினர்களுடன் ஒரு காரில் சபரிமலைக்கு சென்றுவிட்டு மீண்டும் புதுச்சேரி நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்த காரை கள்ளக்குறிச்சி மாவட்டம் வி.அகரம் கிராமத்தை சேர்ந்த கந்தசாமி மகன் வெங்கடேசன் (38) என்பவர் ஓட்டிச் சென்றார். காரில் அழகப்பன் மகன் ஜெயபாண்டியன், நாராயணன், வெங்கடேசன் மகன் அமுல்யா உள்ளிட்டவர்கள் சென்றுள்ளனர். இந்த கார் நேற்று காலை உளுந்தூர்பேட்டை அருகே ஆசனூர் பெட்ரோல் பங்க் எதிரில் சென்ற போது திடீரென நிலைத்தடுமாறி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் சென்ற தியாகராஜன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

காரை ஓட்டிச் சென்ற டிரைவர் உள்ளிட்ட 4 பேர் படுகாயம் அடைந்தனர். உடனடியாக தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற எடைக்கல் காவல்நிலைய போலீசார், படுகாயம் அடைந்தவர்களை மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டது. உயிரிழந்த தியாகராஜன் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து எடைக்கல் காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சபரிமலை கோயிலுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பும் போது கார் கவிழ்ந்து தியாகராஜன் உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

The post உளுந்தூர்பேட்டை அருகே கார் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்து புதுச்சேரியை சேர்ந்தவர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Puducherry ,Ulundurpet ,Thiagarajan ,Muthialpet, Puducherry ,Dinakaran ,
× RELATED குடிநீர் குழாயில் உடைப்பு: புதுச்சேரி...