பண்ருட்டி, செப். 20: பண்ருட்டி அருகே உள்ள திராசு கிராமத்தை சேர்ந்தவர் ஏழை பெருமாள்(44), விவசாயி. இவர் கடந்த 14ம் தேதி தனது வீட்டில் செல்போனை சார்ஜ் போட்டுவிட்டு உறங்கி கொண்டிருந்தார். இதே போல் இவரது மகனும் செல்போனுக்கு சார்ஜ் போட்டு இருந்தார். மறுநாள் அதிகாலையில் எழுந்து பார்த்தபோது செல்போன்களை காணவில்லை பல்வேறு இடங்களில் தேடி பார்த்த போது கிடைக்கவில்லை இதே போல் அருகில் உள்ள வீடுகளிலும் செல்போன்கள் காணாமல் போயிருந்தது. இது குறித்து ஏழை பெருமாள், பண்ருட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து செல்போன் திருடிய நபரை தேடி வந்தனர்.
இந்நிலையில், ஏழை பெருமாள் தனது போனுக்கு போன் செய்தார். அப்போது போனை எடுத்து பேசியவர், ரூ. 15 ஆயிரம் பணம் கொடுத்தால், போனை ஒப்படைப்பதாக கூறியுள்ளார். இதையடுத்து நடந்த சம்பவத்தை காவல்துறையிடம் தெரிவித்தார். இதையடுத்து இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையிலான குழுவினர், பணத்தை தயார் செய்து போனை திருடியவர் சொல்லும் இடத்திற்கு கொண்டு செல்லுமாறு ஏழை பெருமாளிடம் கூறினர். அதன்பேரில் ஏழை பெருமாள் பணத்தை கொண்டு சென்று, செல்போன் திருடியவர் சொன்ன இடத்தில் வைத்தார். அப்போது பணத்தை எடுக்க வந்தவரை, அப்பகுதியில் மறைந்திருந்த போலீசார் பிடித்து கைது செய்தனர். விசாரணையில், திண்டிவனம் அருகே ஆச்சிப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த புருஷோத்தமன் மகன் ஐயனார் (37) என தெரிந்தது. இதையடுத்து அவரிடம் இருந்த செல்போன், பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
The post வீடுகளில் செல்போன் திருடியவர் கைது appeared first on Dinakaran.
