×

இந்து அறநிலையத்துறை அதிரடி பாஜ நிர்வாகி ஆக்கிரமித்த ரூ.100 கோடி நிலம் மீட்பு: அதிகாரிகளுடன் வாக்குவாதம், பண்ருட்டியில் பரபரப்பு

பண்ருட்டி: பண்ருட்டியில் பாஜ நிர்வாகி ஆக்கிரமித்திருந்த ரூ.100 கோடி மதிப்பிலான கோயில் இடத்தை இந்து அறநிலைய துறை அதிகாரிகள் மீட்டனர். கடலூர் மாவட்டம், பண்ருட்டி நகர், வடகைலாசம், குருலட்சுமி அம்மாள் அறக்கட்டளைக்கு சொந்தமான ஒரு ஏக்கர் 80 சென்ட் வணிக மனை மற்றும் கட்டிடங்கள் பண்ருட்டி பாஜ நகர செயலாளர் ராமச்சந்திரன், தனது உறவினர் பெயரில் ஆக்கிரமித்து, கடைகளை கட்டி பல ஆண்டுகளாக வாடகைக்கு விட்டதாக கூறப்படுகிறது. இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் காலி செய்யாமல் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த ஆக்கிரமிப்பை அகற்றிட சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, கடலூர் மண்டல இணை ஆணையர் ஜெ.பரணிதரன் தலைமையில், கடலூர் உதவி ஆணையர் (கூடுதல் பொறுப்பு) முத்துராமன் முன்னிலையில் வருவாய்துறை, காவல்துறை மற்றும் மின்சாரத்துறை அலுவலர்களின் உதவியோடு ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு நேற்று அங்கு சென்றனர். ஆக்கிரமிப்பு இடத்தில் உள்ள நுழைவு கேட்டின் பூட்டை அதிகாரிகள் உடைத்து உள்ளே சென்றனர். அப்போது பாஜ நகர செயலாளர் ராமச்சந்திரன், கட்சி நிர்வாகிகள் மற்றும் ஆக்கிரமிப்பு கடைக்கார்கள் அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அதை பொருட்படுத்தாத அதிகாரிகள், ஷட்டர் போட்டு பூட்டு போட்டிருந்த கடைகளுக்கு சீல் வைத்தனர். தற்காலிக ஷெட் போட்டிருந்த கடைகளை பொக்லைன் இயந்திரம் மூலமாக அகற்றினர். ‘இது இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இடம், யாரும் ஆக்கிரமிப்பு செய்யக்கூடாது, மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என எச்சரிக்கை பலகையை பல இடங்களில் வைத்தனர். அந்த நிலம் அறக்கட்டளை வசம் சுவாதீனம் பெறப்பட்டது. மீட்கப்பட்ட வணிக மனைகள் மற்றும் கட்டிடங்களின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ.100 கோடி என்று இந்து அறநிலையத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்த பாஜ செயலாளர் மீது போலீசில் புகார் செய்து வழக்குப்பதிவு செய்யவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

The post இந்து அறநிலையத்துறை அதிரடி பாஜ நிர்வாகி ஆக்கிரமித்த ரூ.100 கோடி நிலம் மீட்பு: அதிகாரிகளுடன் வாக்குவாதம், பண்ருட்டியில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Hindu Endowment Department ,BJP ,Panrutti ,Panruti ,Hindu Charitable Department ,
× RELATED பாஜக ஒன்றிய அரசு அரசியல் ஆதாயம் தேடும்...