×

கொடைக்கானலில் யானைகள் அட்டகாசம் பைன் பாரஸ்ட், தூண் பாறை குணா குகைக்கு செல்ல தடை

கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் முக்கிய சுற்றுலாத்தலமான மோயர் பாய்ண்ட் பகுதியில் நேற்று முன்தினம் இரவு யானைக்கூட்டம் புகுந்தது. இவை சுற்றுலாத்தலத்தில் உள்ள கடைகளை இடித்து சேதப்படுத்தின. இதுகுறித்து தகவல் அறிந்ததும் வனத்துறையினர் மோயர் பாய்ண்ட் பகுதிக்கு சென்று யானைகளின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இதுகுறித்து கொடைக்கானல் உதவி வனப்பாதுகாவலர் சக்திவேல் கூறுகையில், ‘‘யானைக்கூட்டம் பேரிஜம் வனப்பகுதியில் தொடர்ந்து முகாமிட்டுள்ளது. அவற்றின் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து வருகிறோம்.

இந்த யானைக்கூட்டம் அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்றவுடன் பேரிஜம் ஏரிக்கு செல்ல சுற்றுலாப்பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள். மேலும் மோயர் பாய்ண்ட், பைன் மரக்காடுகள், குணா குகை, தூண் பாறை ஆகிய சுற்றுலா இடங்களுக்கு செல்ல சுற்றுலாப்பயணிகளுக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது’’ என்றார். இந்நிலையில் பேரிஜம் வனப்பகுதியில் தொடர்ந்து யானைகள் முகாமிட்டுள்ளதால் அப்பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல 9வது நாளாக வனத்துறையினர் தடை விதித்து உள்ளனர். இதனால் கொடைக்கானல் வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

The post கொடைக்கானலில் யானைகள் அட்டகாசம் பைன் பாரஸ்ட், தூண் பாறை குணா குகைக்கு செல்ல தடை appeared first on Dinakaran.

Tags : Kodaikanal ,Atakasam Pine Frost ,Pillar Rock ,Guna Cave ,Elephant Kodaikanal ,Moir Point, Kodaikanal ,Dinakaran ,
× RELATED கோடை விடுமுறையையொட்டி, கொடைக்கானலில்...