சென்னை: கூட்டணி முறிந்த நிலையில் அதிமுக, பாஜ இடையே போஸ்டர் யுத்தம் தொடங்கியுள்ளது. தூத்துக்குடியில் அதிமுகவினர் ஒட்டிய போஸ்டரில், ‘கூட்டணியாவது, கூந்தலாவது, நன்றி மீண்டும் வராதீர்கள்’ என்றும், மதுரையில் பாஜவினர் போஸ்டரில், ‘இனி பேச்சே கிடையாது வீச்சுதான்’ என்றும் வாசகங்கள் இடம் பெற்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக, பாஜ கூட்டணியில் இருந்து வந்தன. கூட்டணியில் பிரச்னை வரும்போதெல்லாம் ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து அதிமுகவை பாஜ பணிய வைத்து வருகிறது. குறிப்பாக தேர்தல் நேரங்களில் தொகுதி பங்கீடு பேச்சு எடுத்தாலே அதிமுக-பாஜ தலைவர்கள் வாய்க்கா தகராறு போல் மோதி கொள்கின்றனர்.
தமிழக பாஜ தலைவராக அண்ணாமலை பதவியேற்றதில் இருந்தே அதிமுகவுடன் கூட்டணி வேண்டாம். பாஜ தனித்து போட்டியிட வேண்டும் என்ற மனநிலையில் உள்ளார். கொங்கு மண்டலத்தில் நான்தான் பெரிய ஆள் என்று நினைத்து கொண்டு எடப்பாடி மற்றும் மாஜி அமைச்சர்களை தரக்குறைவாக பேசி மோதல் போக்கை அண்ணாமலை கடைபிடித்து வருகிறார். இதை அதிமுக தொண்டர்கள் முதல் 2ம் கட்ட தலைவர்கள் வரை ரசிக்கவில்லை. சமீப காலமாக ஜெயலலிதா தொடங்கி அண்ணா, பெரியார் குறித்து அண்ணாமலை சர்ச்சை பேச்சை தொடர்ந்து வருகிறார். இதற்கு அதிமுக மாஜி அமைச்சர்கள் காட்டமான பதிலடி கொடுத்தனர். இதனால் அதிமுக-பாஜ இடையே கடும் மோதல் ஏற்பட்ட நிலையில், நேற்று முன்தினம் நிருபர்களுக்கு பேட்டியளித்த ஜெயக்குமார், ‘அதிமுக கூட்டணியில் பாஜ இல்லை’ என்று பகிரங்கமாக அறிவித்தார்.
இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த அறிவிப்பு அதிமுக தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு பாஜ தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலையை நீக்கினால்தான் கூட்டணி பற்றி மறுபரிசீலனை என்று மேலிடத்துக்கு நிபந்தனை விதிப்பதற்கு தான் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். இதையடுத்து அதிமுகவினர், நன்றி மீண்டும் வராதீர்கள் என்று சமூக வலைதளங்களில் ஹேஸ்டேக் பரப்பிய நிலையில், தூத்துக்குடியில் தெற்கு மாவட்ட இளைஞரணி சார்பில் அண்ணாமலை பற்றி பரபரப்பு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
தூத்துக்குடி சிவன்கோயில் தெரு நுழைவுப் பகுதியிலும், ஜெயராஜ் ரோட்டிலும் வைக்கப்பட்டுள்ள தட்டி போர்டில், ‘ஐபிஎஸ் படித்தவனை, ஆடு மேய்க்க விட்ட இயக்கம் அல்ல… ஆடு மேய்த்தவனை ஐபிஎஸ் ஆக்கிய அண்ணா பெயரில் இயங்கும், இயக்கம்தான் அதிமுக. கூட்டணியாவது… கூந்தலாவது… நன்றி! மீண்டும் வராதீர்கள்…’ என்றும், மற்றொரு போஸ்டரில், ‘அதிமுக கூட்டணியில் பாஜ இல்லை, விநாயகர் சதுர்த்தி அன்று பிள்ளையார் சுழி போட்டாச்சு, நாளை நமதே, 40ம் நமதே’ என்றும் வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த போஸ்டர்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவின் போஸ்டருக்கு பதிலடி தரும் வகையில் மதுரையில் பல்வேறு இடங்களில் பாஜவினர் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். அந்த போஸ்டரில், ‘ஒரு அளவுக்கு மேல நம்மகிட்ட பேச்சே கிடையாது வீச்சுதான்’ என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளது. இந்த போஸ்டரை பாஜ தகவல் தொழில்நுட்ப பிரிவின் மாநில செயலாளர் ஆர்.விஷ்ணு பிரசாத் வெளியிட்டுள்ளார். பிரதமர் மோடி, தமிழ்நாடு பாஜ தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் படங்களும் இதில் இடம்பெற்றுள்ளன.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கட்சி மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் மா.கணேசன் கூறுகையில், ‘வன்முறையை தூண்டும் வகையில் இந்த போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது. ஒன்றிய பாஜ அரசின் மக்கள் விரோத செயல்பாடுகளை விமர்சிக்கும் அரசியல் கட்சிகளை மிரட்டும் வகையில் ஜனநாயக சக்திகளை அச்சுறுத்தும் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இதை வெளியிட்ட நபர்கள் மீது மதுரை மாநகர் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக பாஜ தலைமை வருத்தம் தெரிவிக்க வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.
*தன்மானத்தை விடமாட்டோம்: வேலுமணி
கோவையில் நடந்த அதிமுக ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், கோவை புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளருமான எஸ்.பி.வேலுமணி பேசுகையில், ‘எடப்பாடி பழனிசாமி, கிணற்றில் குதிக்க சொன்னாலும் நாங்கள் குதிப்போம். வேலுமணி, தங்கமணி ஆகியோர் பாஜ பற்றி ஏன் பேசவில்லை? என சிலர் சொல்கிறார்கள். கூட்டணிக்காக நாங்கள் ஒருபோதும் தன்மானத்தை விட்டுக்கொடுக்க மாட்டோம்.
அண்ணாமலை, கூட்டணியில் இருந்துகொண்டு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பற்றி கேவலமாக பேசக்கூடாது. ஜெயலலிதா பற்றி பேச அண்ணாமலைக்கு தகுதி இல்லை. அவர் அண்ணா பற்றி பேச வேண்டிய அவசியமும் இல்லை. உண்மைக்கு புறம்பான பல விஷயங்களை அண்ணாமலை பேசி வருகிறார். இது, ஒரு கட்சி தலைவருக்கு அழகு அல்ல. அண்ணாமலை பக்குவம் இல்லாமல் பேசுகிறார். சீண்டி விடும் வேலையை சில பாஜவினர் செய்து வருகிறார்கள்’ என்றார்.
*வரலாறு இல்லாதவர்கள் வரலாறு பற்றி பேசலாமா?உதயகுமார்
மதுரையில் நேற்று முன்னாள் அமைச்சர் உதயகுமார் அளித்த பேட்டியில், ‘வரலாறு இல்லாதவர்கள் வரலாறு குறித்து பேசுவது சர்ச்சையாக உள்ளது. தேசிய வரலாறு தெரியாதவர்கள், அதைப்பற்றி படிக்காதவர்கள், கருத்து சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. கட்சியின் தலைவராக இருப்பவர்களுக்கு பொறுமை, கடமை கண்ணியம், கட்டுப்பாடு அவசியம் வேண்டும்’ என்று அண்ணாமலை பெயரை குறிப்பிடாமல் பதிலடி கொடுத்துள்ளார்.
*அண்ணாமலை தகுதியில்லாதவர்: புதுவை அதிமுக
புதுவை மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் கூறுகையில், ‘பிரதமராக மோடி வரக்கூடாது என்ற சதி செயலில் அண்ணாமலை செயல்படுகிறார். மாநில தலைவராக செயல்படக்கூடிய தகுதியோ, திராணியோ அண்ணாமலைக்கு இல்லை. அதிமுகவுடன் கூட்டணி இல்லையென்றால் தென்னிந்தியாவிலேயே பாஜ என்ற ஒரு கட்சி இடம் தெரியாமல் போயிருக்கும். புதுச்சேரியில் கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெறாததற்கு பாஜதான் காரணம், எங்களை பொறுத்தவரை என்.ஆர்.காங்கிரசுடன் கூட்டணி தொடரும். தலைமை கூறியபடி பாஜவுடன் கூட்டணி இல்லை. இந்த செய்தி மிகுந்த சந்தோஷமான செய்தி’ என்றார்.
The post கூட்டணி முறிந்த நிலையில் போஸ்டர் யுத்தம் தொடங்கியது கூட்டணியாவது… கூந்தலாவது… – அதிமுக இனி பேச்சே கிடையாது வீச்சுதான் – பாஜ appeared first on Dinakaran.
