×

ஒரே விமானத்தில் 113 கடத்தல் ‘குருவிகள்’ கைது எதிரொலி 20 சுங்கத்துறை அதிகாரிகள் திடீர் இடமாற்றம்: முதன்மை ஆணையர் அதிரடி,சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு

சென்னை: சென்னை விமான நிலையத்தில், ஒரே விமானத்தில் வந்த 113 கடத்தல் குருவிகள் கைது செய்யப்பட்டு, ரூ.14 கோடி மதிப்புடைய கடத்தல் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவத்தின் எதிரொலியாக, பணியில் இருந்த 20 சுங்கத்துறை அதிகாரிகள் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை சர்வதேச விமான நிலையத்தில், கடந்த 14ம் தேதி காலை 8 மணியளவில், மஸ்கட்டில் இருந்து ஓமன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் வந்தது. அந்த விமானத்தில் மிகப்பெரிய அளவில் கடத்தல் பொருட்கள் வருவதாக, சென்னை தி.நகரில் உள்ள மத்திய வருவாய் புலனாய்வு துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மத்திய வருவாய் புலனாய்வு தனிப்படையினர் சென்னை விமான நிலையத்திற்கு விரைந்தனர்.

விமானத்தில் வந்த 186 பயணிகளையும் நிறுத்தி வைத்து சோதனை நடத்தினர். நீண்ட நேர சோதனைக்கு பிறகு, அதில் 113 பயணிகள் கடத்தல் குருவிகள் என்பது தெரியவந்தது. அதன்பின்பு மற்ற பயணிகளை அதிகாரிகள் வெளியே அனுப்பினர். இதையடுத்து 113 பேரையும் தனித்தனியாக, தனி அறைகளில் வைத்து முழுமையாக சோதனை நடத்தினர். அப்போது அவர்களிடம் இருந்து 13 கிலோ தங்கம், 120 ஐபோன்கள் உட்பட 204 செல்போன்கள், லேப்டாப்புகள், சிகரெட் பண்டல்கள், பதப்படுத்தப்பட்ட குங்குமப்பூக்கள் உள்ளிட்ட கடத்தல் பொருட்களை, அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதன் சர்வதேச மதிப்பு ரூ.14 கோடி. இதையடுத்து 113 கடத்தல் குருவிகள் மீதும் சுங்கத்துறை சட்ட விதிகளின்படி வழக்குகள் பதிவு செய்து, அவர்களை சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

இச்சம்பவம், மத்திய வருவாய் புலனாய்வு துறை உயர் அதிகாரிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கடத்தல் சம்பவத்தில் சென்னை விமான நிலையத்தில், பணியில் உள்ள சிலர் உடந்தையாக இருக்கலாம் என்ற தகவல் வெளியானது. இதையடுத்து டெல்லியில் உள்ள உயர் அதிகாரிகள், இதுகுறித்து முழுமையாக விசாரித்து தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவு பிறப்பித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில், கடந்த 14ம் தேதி ஓமன் ஏர்லைன்ஸ் விமானம் வந்து தரை இறங்கிய போது, சென்னை விமான நிலைய சுங்கத்துறை பிரிவில் இருந்த 4 சுங்கத்துறை சூப்பிரண்டுகள், 16 இன்ஸ்பெக்டர்கள் என மொத்தம் 20 அதிகாரிகள் ஒட்டுமொத்தமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் சென்னை விமான நிலையத்தில் இருந்து உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டு, சென்னையில் உள்ள சுங்கத்துறை தலைமை அலுவலகத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். மேலும் இவர்கள் 20 பேரும் உடனடியாக, சென்னை விமான நிலைய பணியிலிருந்து தங்களை விடுவித்துக் கொண்டு சுங்கத்துறை தலைமை அலுவலகத்திற்கு செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவை சென்னை விமான நிலைய சுங்கத்துறை முதன்மை ஆணையர் பிறப்பித்துள்ளார்.

இதற்கிடையே சென்னை விமான நிலையத்தில், சுங்கத்துறையில் பணியில் இருந்த உதவி ஆணையர்கள், துணை ஆணையர்கள் சிலரையும், சுங்கத்துறை தலைமை முதன்மை ஆணையர் இடமாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. ஒரே விமானத்தில் வந்த, 113 கடத்தல் குருவிகள் கைது செய்யப்பட்டதன் எதிரொலியாக, பணியில் இருந்த சுங்கத்துறை அதிகாரிகள் 20 பேர் ஒட்டு மொத்தமாக ஒரே நேரத்தில் பணியிட மாற்றம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post ஒரே விமானத்தில் 113 கடத்தல் ‘குருவிகள்’ கைது எதிரொலி 20 சுங்கத்துறை அதிகாரிகள் திடீர் இடமாற்றம்: முதன்மை ஆணையர் அதிரடி,சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai airport ,Chennai ,Dinakaran ,
× RELATED மழைநீர் தேங்கியதால் மூடப்பட்ட சென்னை...