×

பெண்கள் இடஒதுக்கீடு

நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் ஒருமுறை பெண்கள் இடஒதுக்கீடு மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த முறை பிரதமராக மோடி இருக்கிறார். இரு அவைகளிலும் மசோதாவை நிறைவேற்றக்கூடிய பலம் பா.ஜ தலைமையிலான கூட்டணி அரசுக்கு இருக்கிறது. நினைத்தால் நினைத்த நொடி நேரத்தில் இந்த மசோதாவை நிறைவேற்றி விட முடியும். ஆனால் தள்ளிப்போடப்பட்டு இருக்கிறது. இப்படித்தான் காலங்காலமாக இந்த மசோதா தள்ளிப்போடப்பட்டு வந்துள்ளது. பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று சிந்தித்தவர் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி. கடந்த 1987ல், ராஜிவ் பிரதமராக இருந்த போது பெண்களின் நிலையை மேம்படுத்துவதற்கான பரிந்துரைகளை வழங்க அப்போதைய அமைச்சர் மார்க்ரெட் ஆல்வா தலைமையில் 14 பேர் கொண்ட குழுவை அமைத்தார்.

அந்த குழுவின் பரிந்துரை அடிப்படையில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இடஒதுக்கீடு வழங்குவதற்கான அரசியலமைப்பு திருத்த மசோதாவை ராஜிவ் காந்தி அறிமுகப்படுத்தினார். இந்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. ஆனால் 1989ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மாநிலங்களவையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்ட போது நிறைவேற்றப்படவில்லை. 1992ல் பிரதமர் பி.வி.நரசிம்ம ராவின் அரசு 73 மற்றும் 74வது அரசியலமைப்பு திருத்தச் சட்டங்களை நிறைவேற்றியது. இந்த பிரிவு மூலம் உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33.3 சதவீத இடஒதுக்கீட்டை கட்டாயமாக்கியது.

அதை தொடர்ந்து நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதா முதன்முதலில் எச்.டி.தேவகவுடா தலைமையிலான அரசால், அரசியலமைப்பு 81வது திருத்த மசோதா 1996 என 11வது மக்களவையில் 1996ம் ஆண்டு செப்டம்பர் 12 அன்று அறிமுகப்படுத்தியது. பின்னர் அது நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக் குழுவுக்கு அனுப்பப்பட்டது. ஆனால் 11வது மக்களவை கலைக்கப்பட்டவுடன் இந்த மசோதா காலாவதியானது. அதை தொடர்ந்து 2010 மார்ச் 9ல் இந்திய அரசியலமைப்பில் அனைத்து இடங்களிலும் மூன்றில் ஒருபங்கு இடங்களை பெண்களுக்கு ஒதுக்க வழிவகை செய்யும் இடஒதுக்கீடு மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மீண்டும் தாக்கல் செய்யப்பட்டது. அன்று மாநிலங்களவையில் மசோதா நிறைவேறியது.

ஆனால் மக்களவையில் நிறைவேறவில்லை. தற்போது மீண்டும் மோடி அரசு புதிய நாடாளுமன்றத்தில் அறிமுக மசோதாவாக மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்துள்ளது. இந்த மசோதாவை மோடி விரும்பினால் உடனே நிறைவேற்ற முடியும். பெரும்பான்மை பலம் அவர்களுக்கு இருக்கிறது. ஆனால் மசோதா நிறைவேறுவதை தள்ளிப்போட்டு இருக்கிறார்கள். அதாவது மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிந்த பிறகுதான் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ள புதிய மகளிர் இட ஒதுக்கீடு மசோதா அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் ஒருமுறை பாரம்பரிய முறைப்படி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும். இந்த முறை 2023ம் ஆண்டு முடிய உள்ள தருவாயில் கூட அதற்கான பணிகள் தொடங்கப்படவில்லை. அடுத்த ஆண்டு தேர்தல் முடிந்து இனி 2025ல் தான் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி தொடங்க வாய்ப்பு உள்ளது. அப்படியானால் 2024 மக்களவை தேர்தலில் மகளிர் இடஒதுக்கீடு அமல்படுத்தப்படாது என்பது தான் பிரதமர் மோடி தலைமையிலான அரசு கூறும் செய்தி.

The post பெண்கள் இடஒதுக்கீடு appeared first on Dinakaran.

Tags : Prime ,Dinakaran ,
× RELATED பிணையில் இருந்த பெண்களுக்கு பாலியல்...