புதுடெல்லி: ஆசிய விளையாட்டு போட்டித் தொடரின் ஆண்கள் ஹாக்கியில் இந்திய அணி பதக்கம் வெல்லும் என்று கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார். சீனாவில் நடைபெறும் 19வது ஆசிய விளையாட்டு போட்டித் தொடரில் பங்கேற்கும் இந்திய ஹாக்கி அணி வீரர்கள் நேற்று விமானம் மூலம் ஹாங்சோ நகருக்கு பயணமாகினர். இந்த தொடரின் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஜப்பான், வங்கதேசம், சிங்கப்பூர், உஸ்பெகிஸ்தான் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ன. பி பிரிவில் கொரியா, மலேசியா, சீனா, ஓமன், தாய்லாந்து, இந்தோனேசியா ஆகிய அணிகள் உள்ளன. ரவுண்டு ராபின் முறையில் நடைபெற உள்ள லீக் சுற்று ஆட்டங்கள் செப்.24ம் தேதி ஹாங்சோ நகரில் தொடங்குகிறது. இந்தியா தனது முதல் ஆட்டத்தில் உஸ்பெகிஸ்தானை எதிர்கொள்கிறது.
ஏ, பி பிரிவுகளில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். அரையிறுதி ஆட்டங்கள் அக்.4ம் தேதி நடக்கும். வெண்கலப் பதக்கத்துக்கான 3வது இடத்துக்கான ஆட்டமும், தங்கம், வெள்ளி பதக்கங்களுக்கான பைனலும் அக்.6ம் தேதி நடக்க உள்ளன. இந்தப் போட்டியில் பங்கேற்க உள்ள ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி நேற்று விமானம் மூலம் சீனா புறப்பட்டுச் சென்றது. வீரர்களை இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணைய நிர்வாகிகள், ஹாக்கி இந்தியா நிர்வாகிகள் வழி அனுப்பி வைத்தனர்.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய கேப்டன் ஹர்மன்பிரீத் சிங், ‘ஆசிய விளையாட்டு போட்டிக்காக நாங்கள் கடினமாக உழைத்து தயாராகி உள்ளோம். சென்னையில் சமீபத்தில் நடந்த ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி போட்டியில் சிறப்பாக விளையாடி கோப்பையை கைப்பற்றினோம். அதே அளவிலான செயல்திறனைத் தக்கவைத்துக் கொள்வதே குறிக்கோள். நாங்கள் இடம் பெற்றுள்ள பிரிவில் சில வலுவான எதிரிகள் உள்ளனர். எனினும், முழுவீச்சில் தயாராகி உள்ளதால் வீரர்கள் எத்தகைய சவாலையும் எதிர்கொள்ளத் தயாராக உள்ளனர். பதக்கத்துடன் திரும்புவோம் என்று நம்புகிறேன்’ என்றார்.
The post ஆசிய விளையாட்டு போட்டி பதக்கம் வெல்வோம்… ஹர்மன்பிரீத் உற்சாகம் appeared first on Dinakaran.