×

தாமரை கட்சியோடு தகராறு வந்ததில் தேனியும் குக்கரும் குஷியாகி இருப்பதை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘கேள்விகளுக்கு பயந்து விழாவையே புறக்கணிச்சுட்டாராமே மாஜி மந்திரி..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘கடலோர மாவட்டத்துல பெரியார் பிறந்த நாள் விழா பல்வேறு அமைப்புகள் சார்பா கொண்டாடப்பட்டது. இலை கட்சியில சேலம்காரர் அணி சார்பில் பெரியார் பிறந்த நாள் விழா கொண்டாட முதல்நாள் தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தாங்க.. இதற்காக மாஜி அமைச்சரும் மாவட்ட செயலாளருமான மணியானவர் மாவட்ட கட்சி அலுவலகத்திற்கு காலை 10 மணிக்கே வந்துடுறேன்னு மாவட்ட நிர்வாகிங்ககிட்ட முதல்நாள் இரவு சொல்லியிருந்தாராம். இதனால தொண்டர்கள் சொந்த வேலையை ஒதுக்கிட்டு காலையிலே அலுவலகத்திற்கு வந்துட்டாங்க. ஆனால் மாஜி அமைச்சரோ சொன்ன நேரத்தை தாண்டியும் வரவில்லை. இதனால மாஜியின் மீது உச்சக்கட்ட கோபத்துக்கு சென்ற தொண்டர்கள் சொன்ன நேரத்திற்கு மணியானவர் எப்போது வந்திருக்குறாரு. அமைச்சரா இருந்தப்பவும் இப்புடிதான் பண்ணுனாரு. எங்களுக்கு வேலை வெட்டி இல்லையா. இவருக்காக நாங்கள் காத்துக்கிடக்கணுமா என புலம்பி தள்ளினர். பின்னர் அலுவலகத்தில் இருந்த நிர்வாகிகள் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து எளிமையாக கொண்டாடினர். மாவட்ட அலுவலகத்திற்கு மணியானவர் வந்தால் தொண்டர்களை பார்த்து ஏதாவது பேச வேண்டியது இருக்கும். இதை தொண்டர்கள் வேறுவிதமாக கற்பனை செய்து சேலத்துகாரருக்கு புகாராக மாற்றி கொண்டு சென்று விடுகின்றனர். ஏற்கனவே தனது மாவட்ட செயலாளர் பதவி தலைமேல் கத்தி போல் தொங்கி கொண்டு இருக்கிறது. இந்த நேரத்தில் இது வேறு எனக்கு எதற்கு தலைவலி என கூறி பெரியார் சிலைக்கு மாலை அணிவிப்பதை புறக்கணித்திருக்குறாரு… இதனால் தான் மாவட்ட அலுவலகத்திற்கு மணியானவர் வரவில்லை என அவரது விசுவாசிகள் சொல்கின்றனர்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘தாமரை கட்சியோடு தகராறு வந்ததுல தேனியும் குக்கரும் குஷியாகி இருக்காமே…’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘இலைக்கட்சி மாஜி மந்திரிகளும், பிரதர் மவுண்டைனும் தொடர்ந்து வார்த்தைப்போரில் ஈடுபட்டு வருகின்றனர். கூட்டணியே முறியும் அளவுக்கு இருதரப்பு பேச்சு வார்த்தைகளும் கடினமாக இருந்து வருகின்றன. நாக்ைக வெட்டுவேன், குத்துவேன், குடைவேன் என மாறி, மாறி பேசிக் கொள்கின்றனர். இதனால் தென்மாவட்டத்தில் உள்ள தேனிக்காரர் தரப்பும், அவர்களுடன் சமீபத்தில் கூட்டாக செயல்படும் குக்கர்காரர் குரூப்பும் சந்தோஷத்தில் உள்ளனராம். ஏற்கனவே, இலைக்கட்சி பல பிரிவுகளாக இருக்கிறது. இந்த சூழலில் கூட்டணி உடைந்தால், இலைக்கட்சிக்கு கடும் சிக்கல் ஏற்படும். காரணம், கடந்த சட்டமன்ற தேர்தலில் கூட்டணியில் இருந்த எந்த கட்சிகளும் தற்போது இலைக்கட்சியோடு தொடர்பில் இல்லை. கிட்டத்தட்ட தனித்து விடப்பட்ட நிலையில்தான் இலைக்கட்சி இருக்கிறது. வரும் எம்பி தேர்தலில் முக்கிய கட்சிகள் இல்லாமல் போட்டியிடும் நிலை ஏற்படும். மீண்டும் இலைக்கட்சி மரண தோல்வி அடையும். தொண்டர்களின் கேள்விக்கு பதில் தர முடியாது. ஏற்கனவே, எம்பி, சட்டமன்ற, உள்ளாட்சி தேர்தல்களில் இக்கட்சி படுதோல்வி அடைந்தது. மேலும், தாமரைக்கட்சியை விரட்டியடித்தால், அக்கட்சி மாஜி மந்திரிகள் மீது அதிரடி ரெய்டுகள் நடத்தப்படும். இதன்மூலம் இலைக்கட்சி செல்வாக்கு கடுமையாக சரியுமென தேனிக்காரர் – குக்கர்காரர் ஆதரவாளர்கள் பரபரப்பாக பேசிக் கொள்கின்றனர். தேர்தல் நெருங்க நெருங்க பரபரப்பு காட்சிகளுக்கு பஞ்சமிருக்காது…’’ என்றார் விக்கியானந்தா.
‘‘போஸ்டர் ஒட்டி கொண்டாடிட்டு இருக்காங்க போல..’’ என சிரித்தார் பீட்டர் மாமா.
‘‘தேசிய கட்சியை இலை கட்சி கூட்டணியில் இருந்து கழற்றி விடுவதற்கு முத்து மாவட்டத்தினர் பட்டாசு போடாத குறையாக கொண்டாடி வருகின்றனர். தேசிய கட்சி கூட்டணிக்கு முழுக்கு போட்டதாக அறிவிப்பு வெளியானதற்கு, விநாயகர் சதுர்த்தி அன்று கூட்டணியில் இல்லை என பிள்ளையார் சுழி போட்டாச்சு என்றும், ஐபிஎஸ்சை ஆடு மேய்க்க விட்ட இயக்கமல்ல, ஆடு மேய்த்தவனை ஐபிஎஸ் ஆக்கிய இயக்கம், நன்றி, மீண்டும் வராதீர்கள் என்றும் ஊர் முழுக்க போஸ்டர் அடித்து ஒட்டி பரபரப்பை கிளப்பியிருக்கின்றனர். கடந்தமுறை முத்து நகர் தொகுதியை தேசிய கட்சிக்கு தாரைவார்த்ததால் இந்த தொகுதியின் மீது குறி வைத்திருந்த இலை கட்சியினர் கடும் ஆத்திரத்தில் இருந்தனர். இதனால் தேசிய கட்சியை எப்படியாவது கூட்டணியில் இருந்து கழற்றி விட்டால் போதும். வரும் மக்களவை தொகுதியிலாவது இரண்டு விரலை காட்டலாம் என இலை கட்சியினர் எண்ணினர். தற்போது தேசிய கட்சி கூட்டணிக்கு வேட்டு வைத்து விட்டதால் அந்த கட்சி மீது இருந்த கோபம் முழுவதையும் போஸ்டர்களாக அடித்து கொட்டித் தீர்த்துள்ளனர் இலை கட்சியினர்’’ என்றார் விக்கியானந்தா.
‘‘மாஜி எம்எல்ஏ மகள் அரசியல் கனவில் தடபுடலா செலவு செய்யுறதா சொல்றாங்களே.. என்னா மேட்டர்..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘கடைக்கோடி மாவட்டத்தில் இலை கட்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. மகளுக்கும் எம்.எல்.ஏ. ஆசை வந்து விட்டதாம். கட்சியின் பூத் கமிட்டி கூட்டம், சமீபத்தில் நடந்துள்ளது. மாஜி எம்.எல்.ஏ.வின் மகள் தான் அந்த பகுதி மண்டல பொறுப்பாளராக உள்ளாராம். அவரது மண்டலத்துக்குட்பட்ட பூத் கமிட்டி கூட்டம் என்பதால் மண்டப வாடகை, கொடி, தோரணங்கள் செலவு, கூட்டத்துக்கு வந்த நிர்வாகிகள், கட்சிக்காரங்களுக்கு காபி, சாப்பாடு செலவு என எல்லாம் தடபுடலாக செய்துள்ளார். இது மட்டுமில்லாமல் தூங்கா நகரில் சமீபத்தில் நடந்த இலை கட்சி மாநாட்டுக்கு அதிக வேன் இவர் தான் பிடித்தாராம். அதை பாராட்டி பூத் கமிட்டி கூட்டத்தில் தீர்மானம் போட்டுள்ளார்கள். மேலும் முக்கிய நிர்வாகி பேசும் போது, மாஜி. எம்.எல்.ஏ., மகளை பாராட்டி கட்சிக்கு நீ தான் அடுத்த எம்.எல்.ஏ. வேட்பாளர் என அறிவித்து விட்டாராம். இதனால் இன்னும் அதிகளவில் மாஜி எம்.எல்.ஏ. கட்சிக்காக செலவு செய்வாரு என ஆவலுடன் எதிர்பார்த்து ரத்தத்தின் ரத்தங்கள் உள்ளார்களாம். சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் இரண்டு வருடத்துக்கு மேல் உள்ளது. இருந்தாலும் இப்போதே தனக்கு வேட்பாளர் ஆசைய காட்டினால் தான் கட்சிக்காக இன்னும் அதிகளவில் பணத்தை மாஜி இறக்குவாரு என கட்சிக்காரங்க கூறும் நிலையில், எம்.எல்.ஏ. வேட்பாளராக அறிவித்து விட்டதால் மாஜி எம்.எல்.ஏ.வின் மகளுக்கு புதிய தெம்பு வந்து விட்டதாம். கூட்டம் முடிந்த தினத்தில் இருந்து அவர் எம்.எல்.ஏ. கனவில் மிதக்க தொடங்கி விட்டதாகவும் பேசிக்கிறாங்க’’ என்றார் விக்கியானந்தா.

The post தாமரை கட்சியோடு தகராறு வந்ததில் தேனியும் குக்கரும் குஷியாகி இருப்பதை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : Theni ,Kukkar ,Yananda ,Uncle ,Peter ,Periyar ,Katalora district ,Kukar ,
× RELATED தேனி புதிய பஸ்ஸ்டாண்டில் அதிகரிக்கும் ஆக்கிரமிப்பு