×

பலத்த போலீஸ் பாதுகாப்புடன் புதுவை சட்டசபை இன்று கூடுகிறது: பாஜ எம்எல்ஏ ரூ.50 கோடி நில மோசடி பிரச்னையை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்

புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபை இன்று கூடுகிறது. அப்போது ரூ..50 கோடி காமாட்சியம்மன் கோயில் நில மோசடியில் பாஜ எம்எல்ஏ ஜான்குமார் தொடர்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளனர்.
புதுச்சேரி சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. அப்போது முதல்வர் ரங்கசாமி 2023-2024ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். தொடர்ந்து 10 நாட்களுக்கு கூட்டம் நடைபெற்ற நிலையில் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டது. இதனிடையே ஒவ்வொரு நிதியாண்டும் 6 மாதத்துக்கு ஒருமுறை சட்டசபை கூட்டப்பட வேண்டுமென்ற விதியின்படி இன்று (20ம்தேதி) காலை 9.30க்கு புதுச்சேரி சட்டசபை கூடுகிறது.

கவர்னரின் செயல்பாடுகள் மற்றும் அறிவித்த பல திட்டங்களை செயல்படுத்தாதது பற்றி பிரச்னை எழுப்ப எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளனர். மேலும் புதுவையில் பரபரப்பை ஏற்படுத்திய ரூ.50 கோடி காமாட்சியம்மன் கோயில் நில மோசடியில் பாஜ எம்எல்ஏ ஜான்குமார் தொடர்பு விவகாரம், அதிகரிக்கும் ரவுடிகளின் மாமூல் மிரட்டல்கள், மருத்துவ மாணவர் சேர்க்கை தாமதம் உள்ளிட்ட பிரச்னைகளை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளனர். இதையொட்டி சட்டசபையை சுற்றிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. டிஜிபி ஸ்ரீனிவாஸ் உத்தரவின்பேரில் சீனியர் எஸ்பி நாரா.சைதன்யா மேற்பார்வையில் எஸ்பிக்கள் தலைமையில் கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது.

* ஆளுநர் பதவி ராஜினாமாவா? – தமிழிசை பரபரப்பு பேட்டி
புதுச்சேரியில் ஆளுநர் தமிழிசை நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ‘துணைநிலை ஆளுநராக உண்மையாக மக்களுக்காக பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். பெண்களுக்கான உதவித்தொகை குறித்து, என்னிடம் வரும் கோப்புகளின் அடிப்படையிலும், அதிகாரிகளிடம் இருந்து கிடைக்கும் தகவல்களின் அடிப்படையிலும் கூறுகிறேன். அதற்காக பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஆளுநராக மக்கள் பணியை தான் செய்து கொண்டிருக்கிறேன்’ என்றார். தொடர்ந்து புதுவை, தமிழக கவர்னர்கள் பிரதமருக்கு அடியாட்களாக செயல்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டு குறித்து நிருபர்கள் கேட்டபோது, ‘அவர்கள் குற்றச்சாட்டுகளுக்கு பதில் கூறினால் நேரம் ஆகிவிடும். இப்போது ஒரு குற்றச்சாட்டுக்கு பதில் கூறியாச்சு, மற்ற குற்றச்சாட்டுகளுக்கு பிறகு கூறுகிறேன்’ என கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றுவிட்டார்.

The post பலத்த போலீஸ் பாதுகாப்புடன் புதுவை சட்டசபை இன்று கூடுகிறது: பாஜ எம்எல்ஏ ரூ.50 கோடி நில மோசடி பிரச்னையை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டம் appeared first on Dinakaran.

Tags : Puduvai assembly ,Opposition ,BJP ,Puducherry ,Puducherry Assembly ,MLA ,Jankumar ,BJP MLA ,Dinakaran ,
× RELATED ஒப்பந்ததாரருக்கு கொலை மிரட்டல் – ஒன்றிய பா.ஜ.க. தலைவர் கைது