சென்னை: “கொரோனா குமார்” பட விவகாரத்தில் ரூ.1 கோடியை திரும்ப செலுத்த தேவையில்லை என நீதிமன்றத்தில் சிம்பு பதில் அளித்துள்ளார். கொரோனா குமார் பட தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் சிம்பு பதில் அளித்தார். நடிகர் சிம்புவை கதாநாயகனாக வைத்து கொரோனா குமார் என்ற படத்தை எடுப்பதற்கு வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷ்னல் முடிவு செய்திருந்தது. 2021ம் ஆண்டு அட்வான்ஸ் பணம் கொடுக்கப்பட்ட நிலையில், படத்தை முடித்துக் கொடுக்கவில்லை என்று வேல்ஸ் பிலிம் தரப்பில் சிம்புவுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.
மேலும் முன்பணமாக கொடுத்த 1 கோடி ரூபாயை திருப்பி செலுத்த வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு இன்று நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பாக விசாரணைக்கு வந்தபோது, சிம்பு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டு வாதங்கள் முன்வைக்கப்பட்டது. அப்போது, 2021ம் ஆண்டு ஜூலை மாதம் ஒப்பந்தம் போடப்பட்டதாகவும், ஒப்பந்தம் போடப்பட்ட ஓராண்டிற்குள் படத்தை எடுத்து முடிக்காவிட்டால் அந்த தொகையை திருப்பி செலுத்த வேண்டியதில்லை என குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறி ஒப்பந்த நகலை வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன் தாக்கல் செய்தார்.
சிம்பு மீது தவறு இல்லாததால் பணத்தை திருப்பிச் செலுத்த தேவையில்லை என்றும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலை மறைத்து இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் வழக்கறிஞர் தெரிவித்தார். இதனையடுத்து நடிகர் சிலம்பரசனின் பதில் மனுவிற்கு பதிலளிக்க வேல்ஸ் நிறுவனம் சார்பில் அவகாசம் கோரப்பட்டது.
இதனை பதிவு செய்துகொண்ட நீதிபதி, வேல்ஸ் நிறுவனம் தொடர்ந்தபடி 1 கோடி ரூபாய் செலுத்த வேண்டுமா? வேண்டாமா? என்பது குறித்து முடிவு செய்வதற்காக வழக்கின் விசாரணையை வரும் 6ம் தேதி தள்ளிவைத்தார். அன்றைய தினம் சிம்பு தரப்பில் தெரிவிக்கப்பட்ட கருத்து ஏற்றுக்கொள்ளப்படுகிறதா? அல்லது 1 கோடி ரூபாய் செலுத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிடப்போகிறதா? என்பது தெரியவரும்.
The post “கொரோனா குமார்” பட விவகாரத்தில் ரூ.1 கோடியை திரும்ப செலுத்த தேவையில்லை: நீதிமன்றத்தில் நடிகர் சிம்பு பதில் appeared first on Dinakaran.