×

அள்ளிக்கொடுக்கும் ஐந்தாளு தோட்டம்!

5.75 ஏக்கர் நிலம்தான். அதில் இருந்து லட்சக்கணக்கில் லாபம் பார்க்கிறார் சேலம் மாவட்டம், வேடப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மோகன். ஏற்காடு மலை அடிவாரத்தில் தென்றல் தவழ்ந்து வரும் ஒரு அழகிய தோட்டமாக விளங்குகிறது மோகனின் வயல்காடு. இதில் பீர்க்கன், கோவைக்காய், காக்கட்டான், நந்தியாவட்டை என பயிர்களை சாகுபடி செய்து வருகிறார். வயலில் பராமரிப்பு பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மோகனைச் சந்தித்தோம்.எங்க கொள்ளு தாத்தா வாங்கியதுதான் இந்த நிலம். இதை ஐந்தாளு தோட்டம் என்று சொல்வார்கள். அவர் வாங்கி, அவரது வாரிசுகள் 5 பேருக்கு பிரித்து கொடுத்ததால் இதற்கு ஐந்தாளு தோட்டம் என்று பெயர் வந்தது. இதில் ஐந்தே முக்கால் ஏக்கர் நிலத்தில் பீர்க்கன், மலேசியன் கோவை, அவரை போன்ற காய்கறி வகைகளையும், குண்டுமல்லி, நந்தியாவட்டை, காக்கட்டான் போன்ற மலர்ச்செடிகளையும் சாகுபடி செய்து வருகிறேன். தோட்டக்கலைத்துறை அறிவுரையின்படி அரசு மானியம் பெற்று சொட்டு நீர் பாசனத்தோடு பயிரிட்டு, பந்தல் அமைத்து விவசாயம் செய்து வருகிறோம். இதற்கு முன்பு கிழங்கு, மஞ்சள், கரும்பு போன்றவற்றை பயிரிட்டு வந்தோம். இதற்கு அதிக பராமரிப்பு, ஆட்தேவைகள் இருக்கும். அதனால் கடந்த 5 வருடமாக காய்கறி, பூச்செடி விவசாயம் பார்த்து வருகிறோம். இதில் அரை ஏக்கரில் பீர்க்கன், ஒரு ஏக்கரில் கோவை, ஒரு ஏக்கரில் நந்தியாவட்டை, அரை ஏக்கரில் காக்கட்டான் பயிரிட்டு இருக்கிறோம். மீதமுள்ள இடத்தில் குண்டுமல்லி, அவரை சாகுபடி செய்கிறோம்.

தற்போது அரை ஏக்கர் பரப்பளவில் பீர்க்கனைப் பயிரிட்டுள்ளோம். பீர்க்கனைப் பொருத்தவரையில் 30 நாட்களில் பூக்கள் வரத்தொடங்கிவிடும். அதனால் குறுகிய காலத்திலேயே நல்ல மகசூல் கிடைக்க தொடங்கிவிடும். அரை ஏக்கர் நிலத்திற்கு 200 கிராம் விதை இருந்தாலே போதுமானதாக இருக்கும். 50 கிராம் விதை பாக்கெட்டில் 280 விதைகள் வரை இருக்கும். ஒரு பாக்கெட்டின் விலை ரூ.650 ஆகும். விதைகளை தோட்டக்கலைத்துறை மற்றும் தனியாரிடம் இருந்து வாங்கிக் கொள்கிறோம். வாழப்பாடி, சேலம் மூன்று ரோடு பகுதிகளிலிருந்து வாங்குகிறோம். விதைகளை ஊன்றுவதற்கு முன்பு நிலத்தை 4 முதல் 5 வரை கலப்பை கொண்டு நன்றாக உழவு செய்ய வேண்டும். எங்களுடையது செம்மண் பூமி என்பதால் 4 முறை உழுதாலே போதுமானது. இப்படி உழுவதன் மூலம் மண் பொலபொலப்பாகிவிடும். வேர்கள் நன்கு ஊன்றி வளர்வதற்கு ஏதுவாக இருக்கும். இதனைத்தொடர்ந்து சொட்டுநீர்ப் பாசனம் மூலம் தண்ணீர் விட்டு நிலத்தை ஈரப்பதமாக ஆக்கிக் கொள்வோம். விதை ஊன்றுவதற்கு முன்பு 5 டன் தொழு உரம், 200 கிலோ கடலை புண்ணாக்கு, வேப்பம் புண்ணாக்கு ஆகியவற்றை தூவி எங்களுடைய செம்மண் பூமியை தயார் செய்து கொள்வோம். இதே நேரத்தில் பீர்க்கன் கொடி வளர்ந்து காய்கள் தொங்குவதற்கான பந்தலையும் அமைத்துக் கொள்ள வேண்டும். 7 அடி இடைவெளியில் சவுக்கு குச்சிகளை ஊன்றி அதன்மேல் இரும்பினால் ஆன கட்டுக்கம்பிகளைக் கொண்டு பந்தல் அமைப்போம். கயிறு மூலம் பந்தல் அமைக்கலாம். ஆனால் மூன்று மாதத்தில் கயிறுகள் அறுந்துவிடும். இதனால் நாங்கள் கட்டுக்கம்பியை பயன்படுத்துகிறோம். குறைந்தது 30 வருடம் வரை இது தாங்கும். இதற்கு அரசு மானியமும் கிடைக்கும். அதனால் நம்பிக்கையுடன் இரும்பு கட்டுக்கம்பி பந்தல் அமைக்கலாம்.

தயார் செய்து வைத்துள்ள நிலத்தின் மீது 3 அடி இடைவெளிகளில் மேட்டுப்பாத்தி அமைப்போம். மேட்டுப்பாத்தியில் மல்ச்சீங் பேப்பரை போர்த்தி விடுவோம். பிறகு 3 அடி இடைவெளிகளில் ஓட்டை போட்டு அதில் கால் அடிக்கும் குறைவாக குழியெடுத்து இரண்டிலிருந்து மூன்று விதைகளை ஊன்றுவோம். அதேபோல் விதை ஊன்றிய இடத்திற்கு அருகிலேயே சொட்டுநீர் பாசனம் மூலம் தண்ணீர் விடுவோம். விதை ஊன்றிய 3 லிருந்து 4 வது நாளில் விதையில் இருந்து முளைப்பு வரத்தொடங்கிவிடும். சீரான இடைவெளியில் ஜீவாமிர்தத்தை தண்ணீரோடு கலந்து கொடுப்பதால் கொடிகள் 10 வது நாளில் நன்கு வளர்ந்து வந்துவிடும். இந்த தருணத்தில் சணல் கொடிகளை பந்தலில் கட்டி விடுவோம்.

25 லிருந்து 30 நாட்களில் கொடிகளில் இருந்து பூக்கள் வரத்தொடங்கிவிடும். விதை ஊன்றிய 45வது நாளில் காய்கள் வரத்தொடங்கிவிடும். பீர்க்கன் 120 நாள் பயிர் என்பதால் இதற்கு கவாத்து செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. பந்தல் போட்டு வளர்ப்பதால் நீளமான பீர்க்கன் காய்கள் கிடைக்கிறது. இதற்கிடையில் வாரம் ஒருமுறை ஜீவாமிர்த கரைசலை கொடிகளுக்கு கொடுப்போம். ஒரு நாளைக்கு 130 லிருந்து 200 கிலோ வரை அறுவடை எடுக்கலாம். பீர்க்கன் காய்களை என் மனைவி ரேவதி, அம்மா செல்லம்மாள் துணையோடு அறுவடை செய்து நானே அஸ்தம்பட்டி, அம்மாபேட்டை உழவர் சந்தைக்கு சென்று வியாபாரிகளுக்கு விற்பனை செய்வேன். சீசனைப் பொருத்து விலை கிடைக்கும். ஒரு கிலோ பீர்க்கனை ரூ.25 லிருந்து ரூ.40 வரை விற்பனை செய்கிறேன். சீசனைப் பொருத்து ரூ.50 வரை விலை போகும். அரை ஏக்கருக்கு 4 லிருந்து 8 டன் வரை பீர்க்கன் கிடைக்கும். சராசரியாக 4 மாதத்தில் 6 டன் பீர்க்கன் காய்கள் கிடைக்கும். சராசரியாக 1 கிலோ பீர்க்கன் ரூ.28 என விற்பனை செய்கிறேன். இதன்மூலம் நான்கு மாதத்தில் எங்களுக்கு ரூ.1 லட்சத்து 68 ஆயிரம் வருமானமாக கிடைக்கிறது. இதில் உரச்செலவு, பராமரிப்பு செலவு என ரூ.25 ஆயிரம் போக ரூ.1 லட்சத்து 43 ஆயிரம் லாபமாக கிடைக்கிறது. குறைந்த நிலத்தில் பீர்க்கனில் அதிக லாபம் கிடைப்பதால் அடுத்த போகம் 1 லிருந்து 2 ஏக்கர் வரை பயிரிடலாம் என முடிவு செய்திருக்கிறேன்” என்று கணக்கு கூறிய மோகன் தொடர்ந்து கோவக்காய், மலர் சாகுபடி குறித்து நம்மிடம் பேசத்துவங்கினார்.

“இரண்டு வருடப்பயிரான கோவைக்காயை 1 ஏக்கர் நிலத்தில் பயிரிட்டு இருக்கிறேன். ஒரு ஏக்கருக்கு 400 செடிகள் வரை நடவு செய்யலாம். நடவுச்செடிகளை தோட்டக்கலை துறையிடம் இருந்தும், தேனி மாவட்டத்தில் உள்ள தனியாரிடம் இருந்தும் வாங்கி நடவு செய்திருக்கிறேன். ஒரு பதியம் ரூ.28 என வாங்கி வந்தேன். செடிகளை நடவு செய்வதற்கு முன்பு 1 ஏக்கர் நிலத்தில் 10 டன் தொழு உரம், 200 கிலோ வேப்பங்கொட்டை புண்ணாக்கு, நிலக்கடலை புண்ணாக்கு போட்டு, நிலத்தை தயார் செய்து கொள்வோம். மண்ணை மல்ச்சிங் ஷீட் கொண்டு மூடி 10 அடிக்கு ஒரு பதியம் என நடவு செய்வோம். நிலத்தை தயார் செய்யும் முன்பே பந்தல் அமைத்துக்கொள்வது நல்லது. அரை அடிக்கு குழிபோட்டு அதில் பதியத்தை நடவு செய்வோம். பதியம் வைத்த பின்பு வாரம் ஒருமுறை ஜீவாமிர்தம் தெளிப்போம். 15வது நாளில் கொடிகளை சணல் கொண்டு பந்தலில் கட்டி விடுவோம். 30 லிருந்து 35 வது நாளில் கொடிகளில் இருந்து பூக்கள் வரத்தொடங்கிவிடும். இதுவும் பீர்க்கன் போலவே 45 வது நாளில் கொடியில் இருந்து காய்கள் வரத்தொடங்கி விடும். கோவைக்காயை பொருத்தவரையில் வருடம் ஒருமுறை கவாத்து செய்வோம். இப்படி கவாத்து செய்வதன் மூலம் அதிகளவில் காய்கள் வரும். வருடத்திற்கு 1 ஏக்கருக்கு 10 லிருந்து 15 டன் வரை கோவைக்காய் கிடைக்கிறது. இதனை வியாபாரிகளுக்கு ரூ.23 லிருந்து ரூ.35 வரை விற்பனை செய்கிறோம். சீசனை பொருத்து ரூ.45 வரை விற்பனையாகும். வருடத்திற்கு சராசரியாக 12 டன் வரை கோவக்காய் கிடைக்கிறது. சராசரியாக கிலோ ரூ.30க்கு வியாபாரிகளுக்கு விற்பனை செய்கிறோம். இதன்மூலம் வருடத்திற்கு ரூ.3 லட்சத்து 60 ஆயிரம் லாபமாக கிடைக்கிறது. இதில் பராமரிப்பு, உரம் என ரூ.40 ஆயிரம் வரை செலவாகும். அதுபோக வருடத்திற்கு ரூ.3 லட்சத்து 20 ஆயிரம் லாபமாக கிடைக்கிறது.

தருமபுரி மாவட்டத்தில் இருந்து காக்கட்டான் செடிகளை வாங்கி வந்து நடவு செய்தோம். காக்கட்டான் பூச்செடி பனிக்கால பயிர் என்பதால் ஆடி முதல் தை வரை நல்ல மகசூல் கிடைக்கும். சீசனைப் பொருத்து நாளொன்றுக்கு 4 லிருந்து 6 கிலோ வரை பூக்கள் கிடைக்கும். இந்த செடிகளை 5 அடிக்கு 1 என்று நடவு செய்தால் நல்ல மகசூல் கிடைக்கும். இந்த பூவினை 1 கிலோ ரூ.300 என்று சந்தையில் வியாபாரிகளுக்கு விற்பனை செய்கிறோம். சராசரியாக ஒரு நாளைக்கு 5 கிலோ பூக்கள் கிடைக்கும். இதன்மூலம் ஒரு நாளைக்கு ரூ.1500 வருமானமாக கிடைக்கிறது. ஒரு மாதத்தில் ரூ.45 ஆயிரம் கிடைக்கிறது. 6 மாதத்திற்கு என்று பார்க்கும் போது ரூ.2 லட்சத்து 70 ஆயிரம் வருமானமாக கிடைக்கிறது.இதில் செலவுகள் ரூ.50 ஆயிரம் போக ரூ.2 லட்சத்து 20 ஆயிரம் வரை லாபமாக கிடைக்கிறது. அதேபோல் 1 ஏக்கரில் நந்தியாவட்டை நடவு செய்திருக்கிறேன். நந்தியாவட்டை பூக்களை மல்லிக்கு மாற்றாக விசேஷசங்களில் பயன்படுத்துகிறார்கள். ஒரு ஆண்டுக்கு 4 டன் வரை பூக்கள் கிடைக்கும். ஒரு கிலோ பூவினை சீசனைப் பொருத்து சராசரியாக ரூ.90க்கு விற்பனை செய்கிறோம். நந்தியாவட்டை பனிகாலப்பயிர்தான். ஆடி முதல் தை வரை நல்ல மகசூல் கிடைக்கும். இதன்மூலம் வருடத்திற்கு ரூ.3 லட்சத்து 60 ஆயிரம் வருமானமாக கிடைக்கிறது. செலவுகள் ரூ.55 ஆயிரம் போக ரூ.3 லட்சத்து 5 ஆயிரம் வரை லாபமாக கிடைக்கிறது.

விவசாயிகள் தங்கள் நிலங்களில் ஒரே பயிரை சாகுபடி செய்வதை தவிர்த்து பலபயிர் சாகுபடி செய்தால் நல்ல வருமானம் ஈட்ட முடியும். தோட்டக்கலை உதவி இயக்குனர்கள் ஆர்.குமரவேல், கே.கலைவாணி, தோட்டக்கலை உதவி அலுவலர் பி.குமார் ஆகியோர் எனக்கு இந்த பலபயிர் சாகுபடி குறித்து ஆலோசனை வழங்கியதோடு, மானியம் பெறுவது, பந்தல் அமைப்பது குறித்தும் பல்வேறு தகவல்களைக் கூறி உற்சாகப்படுத்தினர். இதனால் நான் தொடர்ந்து பல பயிர் சாகுபடியில் ஈடுபட முடிகிறது ‘’ என கூறி முடித்தார்.
தொடர்புக்கு:
மோகன்: 99420 58797

The post அள்ளிக்கொடுக்கும் ஐந்தாளு தோட்டம்! appeared first on Dinakaran.

Tags : Mohan ,Vedapatti ,Salem ,Yercaud ,Ainthalu Garden ,
× RELATED வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள கல்லூரியில் கலெக்டர் நேரில் ஆய்வு