
மும்பை: 2023 உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆட உள்ளது. இந்தப் தொடருக்கான அணியில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட உலகக்கோப்பை அணியில் இடம் பெற்று இருக்கும் வீரர்களுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், உலகக்கோப்பையில் இல்லாத பல வீரர்களுக்கு அணியில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதில் யாருமே எதிர்பாராத வகையில் கடந்த 18 மாதங்களாக ஒருநாள் அணியில் இடம் பெறாத சுழற் பந்துவீச்சாளர் அஸ்வினுக்கு அணியில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
உலகக்கோப்பையில் இடம் பெற்றுள்ள வீரர்களில் சுழற் பந்துவீச்சு ஆல்-ரவுண்டரான அக்சர் படேலுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த ஆசிய கோப்பை தொடரில் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் அவருக்கு காயம் ஏற்பட்டது. அவர் உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக அணிக்கு திரும்ப வாய்ப்பு உள்ளது. ஆனால், அவருக்கு மாற்றாக ஒரு சுழற்பந்துவீச்சு ஆல்-ரவுண்டர் தேவை என்பதில் தெளிவாக இருந்த கேப்டன் ரோகித் சர்மா, ஆசிய கோப்பை தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னதாக வாஷிங்டன் சுந்தரை அணியில் சேர்த்தார். அவருக்கு இறுதிப் போட்டியில் ஆடும் வாய்ப்பும் கிடைத்தது. ஆனால், இந்திய அணி சுழற் பந்துவீச்சு ஆல் – ரவுண்டர் தான் தேவை என்பதில் தெளிவாக இருப்பதால், ஒருவேளை சுந்தருக்கும் உலகக்கோப்பை தொடரில் காயம் ஏற்பட்டால் என்ன செய்வது என முன்னெச்சரிக்கையாக சிந்திக்கத் தொடங்கியது. அதன் காரணமாகவே அஸ்வினை இந்திய அணியில் சேர்க்க முடிவு செய்யப்பட்டது.
இந்த முடிவு ஆசிய கோப்பை தொடரில் ஆட வாஷிங்டன் சுந்தரை அழைத்த போதே எடுக்கப்பட்டுவிட்டதாக தற்போது தெரிய வந்துள்ளது. குறிப்பாக, நீண்ட நாட்கள் அணியில் ஆடாத அஸ்வினை உலகக்கோப்பை அணிக்கான அறிவிக்கப்படாத ரிசர்வ் வீரராக தேர்வு செய்ய காரணம் அவரது அனுபவம் தான். அவர் தொடர்ந்து டிஎன்பிஎல், ஐபிஎல் போன்ற டி20 தொடர்களிலும் பங்கேற்று வருகிறார். எனவே அஸ்வின் உலகக்கோப்பை தொடருக்கு முன் ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில் வாய்ப்பு பெற முக்கிய காரணம், கேப்டன் ரோகித் சர்மாவின் உலகக்கோப்பை பயம் தான் என கூறப்படுகிறது. அக்சர் படேல் ஆடாத நிலையில் நிச்சயம் வாஷிங்டன் சுந்தர் தான் அந்த இடத்துக்கான அணியின் முதன்மை தேர்வாக இருப்பார். அவரும் ஆட முடியாத நிலை ஏற்பட்டால் மட்டுமே அஸ்வினுக்கு உலகக்கோப்பை அணியில் இடம் கிடைக்கும்.
அஸ்வினின் அனுபவம் நிச்சயம் கைகொடுக்கும்
செய்தியாளர்கள் சந்திப்பில் கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில், “அஸ்வின் மிகச்சிறந்த வீரர். அவர் 150 ஒரு நாள் போட்டிகளுக்கு மேல் விளையாடி இருக்கிறார். அஸ்வினின் அனுபவம் இந்திய அணிக்கு நிச்சயம் கை கொடுக்கும். எனினும் இது முன்னால் நடந்தது. தற்போது உள்ள சூழலுக்கு தொடர்பு கிடையாது என்பதை ஒப்புக் கொள்கிறேன். ஆனால் அஸ்வின் தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளிலும், டி20 போட்டிகளிலும் விளையாடுவதால் அவர் ஒரு நாள் போட்டிக்கு தயாராக தான் இருப்பார். மேலும் அஸ்வினின் கிரிக்கெட் அறிவு நிச்சயம் இந்தியாவுக்கு வெற்றியை தேடி தரும் என்று நான் நம்புகிறேன் என்றார். தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர் கூறுகையில், “உலக கோப்பை தொடரில் அஸ்வின் இடம்பெறுவாரா இல்லையா என்பது குறித்து தற்போது அறிவிக்க தேவையில்லை. அக்சர் படேல் முழு உடல் தகுதியை எட்டும் வரை அதுபற்றி எதுவும் கூறமுடியாது’’ என்றார்.
The post அஸ்வினை தேர்வு செய்ய ரோகித்தே காரணம்: புதிய தகவல் appeared first on Dinakaran.