×

கேரள அமைச்சருக்கு கோவிலில் தீண்டாமை கொடுமை… பணத்தில் இல்லாமல் மனிதர்களிடம் மட்டுமே தீண்டாமை பார்க்கும் பூசாரிகள் என விமர்சனம்!!

திருவனந்தபுரம் : கேரளாவில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த அமைச்சர் ராதாகிருஷ்ணனுக்கு கோவிலிலேயே தீண்டாமை கொடுமை நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கேரள அரசில் பட்டியல், பழங்குடியினர் மற்றும் இந்து அறநிலையத்துறை அமைச்சராக இருப்பவர் கே.ராதாகிருஷ்ணன். இவர் கேரளாவின் கோட்டயத்தில் பாரதிய வேலன் சேவை சங்கம் (பிவிஎஸ்) ஏற்பாடு செய்து இருந்த நிகழ்ச்சியில் உரையாற்றினார். அப்போது பையனூர் கோவில் விழாவில் பங்கேற்றபோது தனக்கு இழைக்கப்பட்ட தீண்டாமை கொடுமை குறித்து சுட்டிக் காட்டி வேதனை தெரிவித்துள்ளார். கண்ணூர் மாவட்டத்தில் உள்ள பையனூரில் சிவன் கோவிலில் நடைபெற்ற நடை பந்தலை அமைச்சர் ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்.

திறப்பு விழாவின் போது, குத்துவிளக்கு ஏற்றுவதற்கான தீபத்தை தனது கையில் தராமல் பூசாரி அவமதித்ததாக வருத்தம் தெரிவித்தார்.திறப்பு விழாவுக்கான தீபத்தை ஏற்றிய தலைமை பூசாரி, மற்றொரு பூசாரியிடம் தீபத்தை தந்து குத்துவிளக்கை ஏற்றச் செய்ததாகவும் குத்துவிளக்கு ஏற்ற காத்திருந்த தன்னிடம் தீபத்தை தராமல் தரையில் வைத்துவிட்டதாகவும் அவர் விளக்கம் அளித்தார்.தரையில் இருந்து தானே தீபத்தை எடுத்து ஏற்றுவேன் என பூசாரி கருதினார். ஆனால் அதனை நான் எடுக்கவில்லை என்றும் பின்னர் கோவில் செயல் அதிகாரி தீபத்தை எடுத்து தந்ததாகவும் ஆனால் அதனை வாங்க மறுத்துவிட்டதாகவும் அமைச்சர் எடுத்துரைத்தார்.அமைச்சருக்கு இழைக்கப்பட்ட தீண்டாமை கொடுமையால் உடன் வந்த எம்எல்ஏவும் குத்து விளக்கு ஏற்ற மறுத்துள்ளார்.

மேலும் அவர் பேசியதாவது, “தன் பணத்தில் தீண்டாமை பார்க்காத பூசாரிகள் தனக்கு எதிராக மட்டும் தீண்டாமை கடைபிடிப்பது ஏன்?.மீன் வியாபாரி உள்பட பலரிடம் கைமாறும் பணத்தில் தீண்டாமை பார்க்காத பூசாரிகள் அவர்களிடம் மட்டும் பார்க்கின்றனர்.நிலவுக்கு சந்திரயான் விண்கலம் அனுப்பியவர்களை விட ஜாதி கட்டமைப்பை உருவாக்கியவர்கள் திட்டமிட்டு செயல்பட்டுள்ளனர்.மக்களை எப்படி பிரித்து பார்ப்பது என்பது ஜாதி கட்டமைப்பை உருவாக்கியவர்களுக்கு தெரிந்துள்ளது.ஜாதி கட்டமைப்பை உருவாக்கியவர்கள் மற்ற ஜாதிகளை விட தாங்கள் மேலானவர்கள் என நினைத்துக் கொண்டு இருக்கின்றனர். ஒவ்வொரு ஜாதியினரையும் தங்களுக்கு கீழ் உள்ள சாதியினரைவிட தாங்கள் சிறந்தவர்கள் என்ற எண்ணத்தை உருவாக்கி உள்ளனர்,”என்றார்.

The post கேரள அமைச்சருக்கு கோவிலில் தீண்டாமை கொடுமை… பணத்தில் இல்லாமல் மனிதர்களிடம் மட்டுமே தீண்டாமை பார்க்கும் பூசாரிகள் என விமர்சனம்!! appeared first on Dinakaran.

Tags : Kerala ,Thiruvananthapuram ,caste minister ,Radhakrishnan ,Kerala government ,
× RELATED கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம்...