×

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எடப்பாடியை தொடர்புபடுத்தி பேச தனபாலுக்கு தடை கோரி வழக்கு தொடர அனுமதி : உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை:கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிச்சாமியை தொடர்புபடுத்தி பேச, கனகராஜின் சகோதரர் தனபாலுக்கு தடை விதிக்க கோரி வழக்கு தொடர சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, சாலை விபத்தில் கனகராஜ் உயிரிழந்தார். அவரது சகோதரர் தனபால், சமீப காலமாக அந்த வழக்கு தொடர்பாக பேட்டியளித்து வருகிறார். அந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி பேச தனபாலுக்கு தடை விதிக்க கோரியும், ரூ.1 கோடியே 10 லட்சம் மான நஷ்ட ஈடு வழங்க கோரியும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, சென்னை உயர் நீதின்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், ‘கட்சியின் பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுள்ள நிலையில், என் நற்பெயருக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் தனபால் பொய்யான தகவல்களை கூறி வருகிறார். அடுத்தாண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கட்சிக்கு மக்கள் மத்தியில் இருக்கும் செல்வாக்கை சீர்குலைக்கும் நோக்கத்தில் தனபால் இதுபோல் பேட்டி அளித்து வருகிறார்.

கொடநாடு வழக்கில் சாட்சிகளை கலைத்ததாக கைது செய்யப்பட்ட தனபால், மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி ஜாமீன் பெற்றுள்ளார். எனவே, முன்னுக்குப்பின் முரணான, பொய்யான தகவல்களை தெரிவித்து வரும் தனபால், கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் என்னை தொடர்புபடுத்தி பேச தடை விதிக்க வேண்டும். அவர் ரூ.1 கோடியே 10 லட்சம் வழங்குமாறு உத்தரவிட வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

இந்த மனு நீதிபதி மஞ்சுளா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் எஸ்.ஆர்.ராஜகோபால் ஆஜராகி, ‘மனுதாரர் மீது தொடர்ந்து தவறான கருத்துக்களை தனபால் சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகிறார்’ என்றார். இதையடுத்து நீதிபதி, ‘எதிர் மனுதாரர் உயர்நீதிமன்றத்தின் அதிகார வரம்பு பகுதிக்கு வெளியே உள்ளார். அவர் சென்னையில் இல்லை. எனவே அவருக்கு இந்த வழக்கு குறித்து தெரியப்படுத்த வேண்டும். நஷ்டஈடு கோரி வழக்கு தொடர மனுதாரருக்கு அனுமதி வழங்கப்படுகிறது’ என்று கூறி விசாரணையை தள்ளி வைத்தார்.

The post கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எடப்பாடியை தொடர்புபடுத்தி பேச தனபாலுக்கு தடை கோரி வழக்கு தொடர அனுமதி : உயர்நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Kodanadu ,Kanapal ,Edappadi ,Chennai ,Kanakaraj ,Thanapal ,Tangapal ,Edapadi ,Dinakaran ,
× RELATED கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில்...