
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- வட கிழக்கு பருவமழை
- முதல் அமைச்சர்
- சென்னை
- மு.கே ஸ்டாலின்
- வடகிழக்கு பருவமழை…
- வட கிழக்கு பருவமழை
சென்னை: சென்னையில் நடந்து வரும் மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடக்கும் ஆலோசனையில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், அதிகாரிகள் பங்கேற்றனர். பருவமழையால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்வது உள்ளிட்டவை குறித்து முதல்வர் ஆலோசித்தார். பிறகு கூட்டத்தில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்,
வடகிழக்கு பருவமழையை நம்பியே தமிழ்நாடு உள்ளது:
பொதுமக்களின் அபாயத்தை எதிர்கொள்ளும் திறமையை ஏற்படுத்த அரசு தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அனைத்து விதமான பேரிடர்களை திறம்பட எதிர்கொண்டு திறன்மிக்க சமுதாயத்தை உருவாக்க அரசு உறுதிபூண்டுள்ளது என முதல்வர் தெரிவித்தார்.
பருவமழை காலத்தில் பாதிப்பு ஏற்படாத வகையில் அரசு நடவடிக்கை:
பருவமழை காலத்தில் பாதிப்பு ஏற்படாத வகையில் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் எடுக்கப்பட்ட சிறப்பு ஏற்பாடுகளால் மழை பாதிப்புகளில் இருந்து மக்கள் பாதுகாக்கப்பட்டுள்ளனர் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
திமுக அரசின் நடவடிக்கையால் வெள்ள பாதிப்பு குறைந்துள்ளது:
திமுக அரசு எடுத்த நடவடிக்கைகளால் வெள்ள பாதிப்பு குறைந்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கடந்தாண்டுகளில் ரூ.716 கோடி மதிப்பில் வெள்ள தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த ஆண்டும் சிறப்பாக திட்டமிட்டு பருவமழையை எதிர்கொள்ள வேண்டும். பேரிடர் அபாயங்களை குறைக்க தணிப்பு திட்டங்களை அரசு செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை கொள்கைகளை மேம்படுத்தி அரசு வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு மாநில பேரிடம் மேலாண்மை குழு 3 முக்கிய அம்சங்கள் கொண்டது என முதல்வர் குறிப்பிட்டார்.
பேரிடர் பாதிப்பு பகுதிகள் குறைந்துள்ளன:
பாதிப்புகளை கண்டறிந்து பேரிடர்களின் சேதத்தை குறைப்பதற்கும் பாதிப்புகளை தவிர்க்கவும் ரூ.716 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அரசின் வெள்ளத் தடுப்பு நடவடிக்கையால் 4,399-ஆக இருந்த பேரிடர் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகள் 3,770-ஆக குறைந்துள்ளன. பருவமழை பலன்களை அதிகமாக பெற, அதனால் ஏற்படும் இழப்பு, சேதங்களை குறைப்பது அவசியம். நிவாரண முகாம்களில் ஆட்சியர்கள் அனைத்து வசதிகளையும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கினார்.
மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்:
சென்னையில் நடைபெறும் மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வாருவதோடு, கரைகளையும் பலப்படுத்த வேண்டும். மழை நீர் வெளியேறும் பாதைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என முதல்வர் கூறினார்.
பருவமழை பாதிப்புகளை தடுக்க தயாராக வேண்டும்:
தமிழகத்திற்கு கிடைக்கும் மழையில் 48% அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரை கிடைக்கிறது. கடந்த கால அனுபவங்களை கருத்தில் கொண்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். பருவமழை பாதிப்புகளை தடுக்க தயாராக வேண்டும் என அதிகாரிகளுக்கு முதல்வர் அறிவுறுத்தினார்.
அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை:
சென்னை போன்ற பகுதிகளில் சாலைகள் நிலை மோசமாக உள்ளதாக எனக்கு தொடர்ந்து புகார்கள் வருகின்றன. சாலைகள் சரியில்லாததால் மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். சாலைகள் பாதிக்கப்பட்டால் வாகனஓட்டிகளுக்கு விபத்து ஏற்படும் என்பதால் பணிகளை முடிக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டார்.
கட்டுப்பாட்டு மையங்களை மக்கள் தொடர்பு கொள்ளலாம்:
24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு மையங்களை மக்கள் தொடர்பு கொள்ளலாம். பருவமழை காலத்தில் நோய்த்தொற்று ஏற்படாமல் பாதுகாக்க வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு வலியுறுத்தினார்.
The post வடகிழக்கு பருவமழையை நம்பியே தமிழ்நாடு உள்ளது: சென்னையில் நடைபெறும் மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு முதல்வர் அறிவுறுத்தல்..!! appeared first on Dinakaran.