×

புவிவட்ட பாதையில் இருந்து பிரிந்தது ஆதித்யா எல் 1..சூரியனின் லாக்ராஞ்சியன் புள்ளி எல் 1 -ஐ நோக்கி விண்கலம் பயணம்!!

சென்னை: புவிவட்ட பாதையில் இருந்து பிரிந்து சூரியனின் லெக்ராஞ்சியன் பாயிண்ட் எல் 1 -ஐ நோக்கி ஆதித்யா விண்கலம் பயணம் தொடங்கி உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. சூரியனை ஆய்வு செய்யும் நோக்கத்துடன் ஆதித்யா எல் -1 திட்டத்தை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ தற்போது செயல்படுத்தியுள்ளது. லெக்ராஞ்சியன் பாயிண்ட் என்ற இடத்தை மையமாக கொண்டு ஹெலோ ஆர்பிட் எனப்படும் ஒளிவட்ட பாதையில் பயணித்து ஆதித்யா விண்கலம் ஆய்வுகளை மேற்கொள்ளும்.

ஆய்விற்காக புவிவட்டப்பாதையில் தனது பயணத்தை தொடங்கிய விண்கலத்தின் உயரம் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வருகிறது.செப்டம்பர் 3, 5, 10 மற்றும் 15 ஆகிய தேதிகளில் 4 முறை சுற்றுவட்ட பாதை உயர்த்தப்பட்டது. குறைந்தபட்சம் 256 கிலோ மீட்டர் தொலைவும் அதிகப்பட்சம் ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 973 கிலோ மீட்டர் தொலைவும் கொண்ட சுற்றுப்பாதையில் ஆதித்யா பயணித்து வந்தது.இந்நிலையில், இன்று அதிகாலை 2 மணியளவில், 5வது முறையாக விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதை உயர்த்தப்பட்டது.

தொடர்ந்து புவிவட்ட பாதையில் இருந்து பிரிந்த ஆதித்யா விண்கலம் சூரியனின் லெக்ராஞ்சியன் புள்ளி எல் 1 ஐ நோக்கி பயணிக்க தொடங்கியுள்ளது. இது சுமார் 110 நாட்கள் பயணித்து லெக்ராஞ்சியன் புள்ளி 1 ஐ அடைந்து அங்கிருந்து சூரியனை ஆய்வு செய்யும். இதுதொடர்பாக இஸ்ரோ தனது எக்ஸ் சமூக வலைதளத்தில், “ஆதித்யா-எல்1 மிஷன்: சன்-எர்த் எல்1 பாயிண்டிற்குச் சென்றது..Trans-Lagrangean Point 1 Insertion (TL1I) சுற்றுப்பாதை வெற்றிகரமாக அதிகரிக்கப்பட்டது. விண்கலம் இப்போது சூரியன்-பூமி L1 புள்ளிக்கு எடுத்துச் செல்லும் பாதையில் உள்ளது. இது சுமார் 110 நாட்களுக்குப் பிறகு ஒரு முயற்சியின் மூலம் எல்1 சுற்றுப்பாதையில் செலுத்தப்படும்.” என்று அதில் பதிவிடப்பட்டுள்ளது.

முன்னதாக ஆதித்யா எல்-1 விண்கலம் அறிவியல் தரவுகளை சேகரிக்கத் தொடங்கியதாக இஸ்ரோ நேற்று அறிவித்தது இது குறித்து இஸ்ரோ வெளியிட்ட டிவிட்டர் பதிவு: ஆதித்ய சோலார் விண்ட் பார்ட்டிகல் எக்ஸ்பெரிமென்ட் (ASPEX) பேலோடின் ஒரு பகுதியான சூப்ரா தெர்மல் & எனர்ஜிடிக் பார்ட்டிகல் ஸ்பெக்ட்ரோமீட்டர் (STEPS) கருவி அறிவியல் தரவுகளை சேகரிக்க தொடங்கியுள்ளது. எஸ்டிஇபிஎஸ் (STEPS) கருவியின் சென்சார்கள் பூமியில் இருந்து 50,000 கிமீ தொலைவில் உள்ள அதிவெப்ப மற்றும் ஆற்றல் அயனிகள் மற்றும் எலக்ட்ரான்களை அளவிட தொடங்கியுள்ளன. இந்த தரவு விஞ்ஞானிகள் பூமியைச் சுற்றியுள்ள துகள்களின் நடத்தையை ஆய்வு செய்ய உதவும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

The post புவிவட்ட பாதையில் இருந்து பிரிந்தது ஆதித்யா எல் 1..சூரியனின் லாக்ராஞ்சியன் புள்ளி எல் 1 -ஐ நோக்கி விண்கலம் பயணம்!! appeared first on Dinakaran.

Tags : Aditya L 1 ,Earth ,Sun's Lagrangian point L ,Chennai ,Aditya ,Sun's Lagrangian point ,Sun's Lagrangian point L1 ,
× RELATED சூரியனை ஆய்வு செய்வதற்காக...