×

கனடாவில் ஹர்தீப் சிங் நிஜரின் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பா?: சீக்கியத் தலைவர் கொலையால் இந்தியா – கனடா உறவில் மீண்டும் விரிசல்

கனடா: சீக்கிய தலைவர் ஹர்தீப் சிங் நிஜரின் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டி கனடாவில் இருந்து இந்திய தூதரக உயர் அதிகாரி வெளியேற்றப்பட்டதால் இரு நாட்டு உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் சீக்கியர்களுக்கு தனி நாடு கோரும் காலீஸ்தான் ஆதரவாளர்கள் கனடா மற்றும் இங்கிலாந்தில் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்திய தூதரகத்தை தாக்குவது இந்து கோயிலை சேதப்படுத்துவது என்று இந்தியாவுக்கு நெருக்கடி தரும் வகையில் கனடாவில் அவ்வப்போது வன்முறைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். காலிஸ்தான் ஆதரவாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி கனடாவிடம் இந்தியா வலியுறுத்தி வருகிறது.

தங்கள் மண்ணில் இருந்து இந்தியாவுக்கு எதிரான வன்முறை செயல்களை அனுமதிக்க மாட்டோம் என கனடா அரசு அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த வாரம் டெல்லியில் நடைபெற்ற ஜி20 மாநாட்டில் பங்கேற்க வந்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிடம் காலீஸ்தான் ஆதரவாளர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தினார். மேலும், காலீஸ்தான் விவகாரத்தில் கனடாவுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்ததாகவும் கூறப்பட்டது. இதனால் இரு நாட்டு உறவில் விரிசல் ஏற்பட்ட நிலையில் கனடா வர்த்தகத்துறை அமைச்சர் மேரி இந்தியா வருவதை திடீரென ஒத்திவைத்தார். இந்த நிலையில் கடந்த ஜூன் 18-ம் தேதி காலிஸ்தான் டைகர் பிரிவின் தலைவர் ஹர்தீப் சிங் நிஜர் கொல்லப்பட்ட வழக்கில் இந்தியாவுக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்து பாதுகாப்புத்துறை விசாரணை நடத்தி வருவதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய கனடா வெளியுறவுத்துறை அமைச்சர் மிலானி ஜூலி தங்கள் நாட்டு குடியுரிமை பெற்ற ஹர்தீப் சிங் நிஜரின் கொலை வழக்கில் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும், கனடாவில் இருந்து இந்திய தூதரக உயர் அதிகாரியை வெளியேற்றி உள்ளதாகவும் தெரிவித்தார். இதனிடையே ஹர்தீப் சிங் நிஜரின் கொலையில் கனடாவின் புகாரை நிராகரித்துள்ள இந்தியா இது அடிப்படை ஆதாரமற்ற அபத்தமான குற்றச்சாட்டு என கண்டனம் தெரிவித்துள்ளது. கனடாவில் இந்தியாவுக்கு எதிராக தொடரும் தேச துரோக செயல்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வெளியுறவு அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.

The post கனடாவில் ஹர்தீப் சிங் நிஜரின் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பா?: சீக்கியத் தலைவர் கொலையால் இந்தியா – கனடா உறவில் மீண்டும் விரிசல் appeared first on Dinakaran.

Tags : Hardeep Singh Nijar ,Canada ,India ,
× RELATED கனடாவில் இந்தி படம் ஓடிக்கொண்டிருந்த...