×

கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கான புதிய இணையதளம்.. குடும்ப அட்டை எண்ணை பதிவிட்டு விண்ணப்பித்தின் நிலையை அறியலாம்!!

சென்னை: கலைஞர் மகளிர் உரிமை திட்ட விண்ணப்பித்தின் நிலையை அறிய புதிய இணையதளத்தை தமிழக அரசு தொடங்கியது. திமுக ஆட்சி பொறுப்பேற்றதும், தேர்தல் வாக்குறுதிபடி மக்கள் மத்தியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திட்டமான மகளிருக்கு ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டமானது, பேரறிஞர் அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15ம்தேதி தொடங்கப்படும் என்று 2023-24ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் தமிழ்நாடு அரசு அறிவித்தது. இந்த திட்டத்துக்காக பெண்கள் விண்ணப்பிக்கும் முகாமை கடந்த ஜூலை மாதம் 24ம் தேதி தர்மபுரி மாவட்டம் தொப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இதையடுத்து, கலைஞர் மகளிர் உரிமை திட்டத்துக்கு தமிழ்நாடு முழுவதும் 35 ஆயிரத்து 925 முகாம்கள் நடத்தப்பட்டன. இந்த பணியில், 68 ஆயிரத்து 190 தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். இந்த திட்டத்தில் சேர ஒரு கோடியே 63 லட்சம் பெண்கள் விண்ணப்பித்தனர். விண்ணப்பித்த ஒவ்வொரு விண்ணப்பதாரருக்கும் அவர்களது விண்ணப்பம் பெறப்பட்டதாக கைபேசிகளுக்கு குறுஞ்செய்தி அனுப்பி வைக்கப்பட்டது. அதன்பிறகு கள ஆய்வுகள் செய்யப்பட்டு அதில் ஒரு கோடியே 6 லட்சத்து 55 ஆயிரம் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. எஞ்சிய விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. ஏற்றுக் கொள்ளப்பட்ட விண்ணப்பதாரர்கள் அனைவருக்கும் அவர்களது வங்கி கணக்குகளுக்கு உரிமைத் தொகை அனுப்பப்பட்டது.

மக்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த திட்டத்தை, அண்ணாவின் 115வது பிறந்த நாளான கடந்த 15ம்தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் காஞ்சிபுரத்தில் தொடங்கி வைத்தார். இந்நிலையில், விண்ணப்பத்தவர்களில் 56.60 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது. அவர்களில் பலர் தங்களது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளனர். எனவே, அவர்களது சந்தேகத்தை போக்கும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. நேற்று முதல் நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் செல்போனுக்கு குறுஞ்செய்தி அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

அந்த குறுஞ்செய்தி கிடைத்த 30 நாட்களுக்குள் இணையதளம் வழியாக மேல்முறையீடு செய்யலாம். இந்த நிலையில், விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பங்கள் குறித்த விவரம் அறிய, தமிழக அரசு புதிய இணையதளம் ஒன்றை தொடங்கி உள்ளது. இதுவரை ரூ.1000 கிடைக்காதவர்கள் www.kmut.tn.gov.in என்ற இணையதளத்தில் குடும்ப அட்டை எண்ணை பதிவிட்டு விண்ணப்பித்தின் நிலையை விண்ணப்பதாரர்கள் அறிய முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கான புதிய இணையதளம்.. குடும்ப அட்டை எண்ணை பதிவிட்டு விண்ணப்பித்தின் நிலையை அறியலாம்!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Government of Tamil Nadu ,Dinakaran ,
× RELATED 5 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு