ஐதராபாத்: இந்தியா கூட்டணி கட்சிகள் இடையேயான தொகுதி பங்கீடு குறித்து சட்டமன்ற தேர்தலுக்கு பின் பேசலாம் என்று காங்கிரஸ் தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர். வரும் 2024 மக்களவை தேர்தலில் பாஜ.வை வீழ்த்த அனைத்து எதிர்கட்சிகளும் இந்தியா என்ற கூட்டணி அமைத்து வியூகம் வகுத்து வருகின்றன. ஐக்கிய ஜனதா தளத் தலைவர் நிதிஷ், திரிணாமுல் தலைவர் மம்தா, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் இந்தியா கூட்டணி கட்சிகள் தொகுதி பங்கீட்டை செப்டம்பர் இறுதிக்குள் முடிக்க வலியுறுத்தி வருகின்றனர்.
இதற்கிடையே டெல்லி, பஞ்சாபை சேர்ந்த காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினர்கள் செயற்குழு கூட்டம் கடந்த சனி, ஞாயிறு கிழமைகளில் ஐதராபாத்தில் நடந்தது. அப்போது காங்கிரஸ், இந்தியா கூட்டணியை வலுப்படுத்த காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியா, ராகுல் கேட்டுக் கொண்டனர். இந்த கூட்டத்தில் பேசிய முன்னாள் ஒன்றிய அமைச்சர் அஜய் மக்கன், மூத்த தலைவர்கள் அல்கா லம்பா மற்றும் பிரதாப் சிங் பஜ்வா உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள், ஆம் ஆத்மி கட்சியினர் காங்கிரஸ் கட்சி, தலைவர்களை தொடர்ந்து சீண்டி வருகின்றனர். இது நிறுத்தப்பட வேண்டும் என்று அதிருப்தி மற்றும் ஆட்சேபனை தெரிவித்தனர்.
மேலும், இந்தியா கூட்டணி கட்சிகளுடனான தொகுதி பங்கீடு குறித்து தற்போது எந்த அவசர முடிவும் எடுக்க வேண்டாம். அடுத்த மாத இறுதியில் அல்லது நவம்பர் மாதம் நடைபெற இருக்கும் 5 மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல் முடிவுக்கு பிறகு பேசிக் கொள்ளலாம் என்று மூத்த தலைவர்கள் கட்சி தலைமையிடம் வலியுறுத்தி உள்ளனர். இதைத் தொடர்ந்து, தேர்தல் ஒப்பந்தங்கள் குறித்த எந்த முடிவும் கட்சியின் மாநில பிரிவுகளுடன் கலந்தாலோசித்த பிறகே எடுக்கப்படும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அறிவித்தார்.
The post இந்தியா கூட்டணி இடையே தொகுதி பங்கீடு பற்றி 5 மாநில சட்டமன்ற தேர்தலுக்கு பின் பேசலாம்: காங்கிரஸ் தலைவர்கள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.