×

ராணிப்பேட்டை அருகே கலப்படம் செய்யப்பட்டதா? ஆவின் குளிரூட்டும் நிலையத்தில் சென்னை விஜிலென்ஸ் ரெய்டு: ஆய்வுக்கு மாதிரிகளை சேகரித்து சென்றனர்

வேலூர்: ராணிப்பேட்டை அருகே கொடைக்கல் கிராமத்தில் உள்ள ஆவின் பால் குளிரூட்டும் நிலையத்தில் கலப்படம் செய்யப்பட்டதா? என்பது குறித்து சென்னை விஜிலென்ஸ் குழுவினர் அதிரடி சோதனை நடத்தி மாதிரிகளை ஆய்வுக்கு சேகரித்து சென்றுள்ளனர். வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 3 மாவட்டங்களை ஒருங்கிணைத்து, கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியமான ஆவின் அலுவலகம், வேலூர் சத்துவாச்சாரியில் இயங்கி வருகிறது. ஆவின் மூலம் 3 மாவட்டங்களிலும் சுமார் 800 பால் உற்பத்தியாளர்களிடமிருந்து தினமும் 70 ஆயிரம் லிட்டருக்கும் அதிகமான பால் கொள்முதல் செய்யப்படுகிறது. பால் பொருட்களின் தேவைக்கு போக மீதமுள்ள பால் சென்னைக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. மேலும் தயிர், மோர், வெண்ணெய், ஐஸ்கிரீம், பால்கோவா உள்ளிட்ட பால் பொருட்களும் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் கொடைக்கல் ஆவின் பால் குளிரூட்டும் நிலையத்தில் பாலில் கலப்படம் செய்வதாக ஆவின் விஜிலென்ஸ் அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தது. இதையடுத்து, கடந்த 2 நாட்களுக்கு முன்பு சென்னையில் இருந்து வந்த ஆவின் விஜிலென்ஸ் குழுவினர் அங்கு அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். மேலும் பால் மாதிரிகளை ஆய்வுக்கு எடுத்து சென்றனர். ஆய்வு முடிவில், பாலில் கலப்படம் செய்யப்பட்டிருப்பது உறுதியானால், சம்பந்தப்பட்டவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என ஆவின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே சோளிங்கர் அடுத்த ஜானகாபுரம் கிராமத்தில் பாலில் கலப்படம் செய்யப்படுவதாக வந்த புகாரின்பேரில், கடந்த 2ம் தேதி சென்னை ஆவின் விஜிலென்ஸ் குழுவினர் ஆய்வு செய்தனர். அப்போது, விவசாயிகளிடம் பால் சேகரித்து ஆவினுக்கு அனுப்பும் தயாளனின் வீட்டில் சோதனை நடத்தினர். இதில் பாலில் கலப்படம் செய்வதற்காக 6 மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்த 140 கிலோ பால் பவுடர் மற்றும் 150 கிலோ வெண்ணெய் ஆகியவற்றை பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது. தற்போது மேலும் ஒரு இடத்தில் கலப்படம் தொடர்பான புகாரில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி மாதிரியை சேகரித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post ராணிப்பேட்டை அருகே கலப்படம் செய்யப்பட்டதா? ஆவின் குளிரூட்டும் நிலையத்தில் சென்னை விஜிலென்ஸ் ரெய்டு: ஆய்வுக்கு மாதிரிகளை சேகரித்து சென்றனர் appeared first on Dinakaran.

Tags : Ranipet ,Chennai ,Aavin Cooling Station ,Aavin ,Kodaikal ,
× RELATED பூவிருந்தவல்லியில் 11 செ.மீ. மழை பதிவு