×

தஞ்சாவூரில் செயற்கையாக உருவாக்கப்பட்ட புது ஆறு 1,232 கி.மீ கல்லணை கால்வாயில் சீறிப்பாயும் தண்ணீர்: கழிவு நீரும், காட்டாற்று வெள்ளமும் கலக்காத அதிசயம்

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் செயற்கையாக உருவாக்கப்பட்ட புது ஆறு என்றழைக்கப்படும் கல்லணை கால்வாய் 1,232 கி.மீ தூரம் தடையின்றி செல்கிறது. மேடான பகுதிக்குள் புகுந்து கடைமடை வரை பாய்கிறது. கழிவு நீரும், காட்டாற்று வெள்ளமும் கலந்து விடாதபடி தொழில்நுட்பத்துடன் இந்த செயற்கை ஆறு உருவாக்கப்பட்டு இருப்பது அதிசயமாக இருந்து வருகிறது. தஞ்சாவூர் பெரிய கோயிலையொட்டி புது ஆறு ஓடுகிறது. இந்த புது ஆறு 30 ஆடி ஆழத்திலும், ஒரத்தநாடு திருவோணம் அருகே 30 அடி உயரத்திலும் செல்கிறது. கட்டிடக்கலையின் உன்னதம் தஞ்சாவூர் பெரிய கோயில் என்றால், பாசன பொறியியலின் உன்னதம் இந்த புது ஆறு என்றால் மிகையில்லை.

இது விவசாயத்துக்காக மனிதனால் வெட்டப்பட்டது. ஒரு சொட்டு நீரும் அனுமதி இல்லாமல் இதில் கலக்க முடியாது என்பதும் இதன் பெருமை. தமிழகத்தில் மேட்டூர் அணை கட்டப்பட்ட போது தஞ்சாவூர் மாவட்டத்தில் வானம் பார்த்த பூமியாக இருந்தவை ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, மதுக்கூர், அதிராம்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி. மழை பெய்தால் மட்டுமே 2.50லட்சம் ஏக்கர் நிலங்கள் விவசாயம் நடக்கும். மழை பொய்த்தால் விவசாயம் நடக்காது. இப்பகுதிகள் வளம்பெற வேண்டியும், இந்த பகுதிகளுக்கு தண்ணீர் கிடைத்து சாகுபடி நடக்க வேண்டும் என்பதற்காகவும் வெட்டப்பட்டது தான் புது ஆறு என்று அழைக்கப்படும் கல்லணை கால்வாய்.

இந்த புது ஆற்றை அன்றைய பிரிட்டிஷ் அரசின் ராணுவ பொறியாளர் கர்னல் டபிள்யூ.எம்.எல்லிஸ் என்பவர் வடிவமைத்துள்ளார். கல்லணை தலைப்பில் தொடங்கி புதுக்கோட்டை மாவட்டம் தொண்டியில் உள்ள மும்பாலை வரை 149 கி.மீ. நீளமுள்ள இந்த ஆற்றில், 109 கி.மீ. நீளம் பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் வெட்டப்பட்டது. மீதம் உள்ளவை சுதந்திரம் பெற்ற பின்னர் இந்திய அரசால் வெட்டப்பட்டது. இந்த ‘ஏ’ கால்வாயிலிருந்து பி, சி, டி, இ என வெட்டப்பட்ட 337 கிளை வாய்க்கால்களின் மொத்த நீளம் 1,232 கி.மீ ஆகும். 28.8.1934ல் இந்த புது ஆறு (கல்லணைக்கால்வாய்) திறக்கப்பட்டது.

இந்த செயற்கை ஆறுக்கு தற்போது 89 வயது ஆகிறது. இந்த ஆற்றில் எங்குமே கழிவுநீரும், காட்டாற்று தண்ணீரும் கலக்க முடியாது. ஆற்றின் குறுக்கே சைபன் எனப்படும் சுரங்கங்கள், மேலே சூப்பர் பேஸேஜஸ் எனப்படும் மேல்நிலை கால்வாய்களும், பெருவெள்ள காலங்களில் காட்டாற்று தண்ணீரை உள்வாங்கி வெளியேற்ற அக்யுடக்ட் எனப்படும் கால்வாய் சுரங்கங்களும் தண்ணீரின் விசையை சீராக வைத்துக்கொள்ள 505 இடங்களில் டிராப் எனப்படும் நீரொழுங்கிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘இந்த ஆறு, முழுக்க முழுக்க பாசனத்துக்காக மட்டுமே வெட்டப்பட்டதாகும். இயற்கையான ஆறுகள் பள்ளத்தை நோக்கியே ஓடும். ஆனால் இந்த ஆறு, மேடான பகுதிகளுக்குள்ளும் புகுந்து செல்லும். கடைமடை வரை தண்ணீரை தடையில்லாமல் கொண்டு செல்லும் வகையில் கடல் மட்டத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட அடி உயரம் கொண்ட நிலப்பகுதிகளை வரைகோடுகள் மூலம் துல்லியமாக இணைத்து அதற்கேற்ப மேடான பகுதிகளை வெட்டி உருவாக்கப்பட்ட சமஉயர் கால்வாயாகும்.

தஞ்சாவூர் பெரிய கோயிலையொட்டி இந்த புது ஆறு 30 ஆடி ஆழத்திலும், ஒரத்தநாடு திருவோணம் அருகே 30 அடி உயரத்திலும் செல்லும் என்பதே இதற்கு சாட்சியாக இருந்து வருகிறது. மேலே பார்ப்பதற்கு நீரோட்டம் சலனமின்றி தெரிந்தாலும், அடி நீரோட்டம் அதிவேகமாக இருக்கும். அதுமேலே தெரிவதை விட கீழே 3 மடங்கு அதிகமாக இருக்கும். செயற்கையாக உருவாக்கப்பட்டாலும் கடைமடை வரை தண்ணீர் செல்லும் வகையில் துல்லியமாக இந்த புது ஆறு அமைக்கப்பட்டுள்ளது’ என்றனர்.

The post தஞ்சாவூரில் செயற்கையாக உருவாக்கப்பட்ட புது ஆறு 1,232 கி.மீ கல்லணை கால்வாயில் சீறிப்பாயும் தண்ணீர்: கழிவு நீரும், காட்டாற்று வெள்ளமும் கலக்காத அதிசயம் appeared first on Dinakaran.

Tags : Thanjavur ,Pudu Aru ,Kallani Canal ,Medana… ,Pudu River ,Kallanai Canal ,Dinakaran ,
× RELATED தஞ்சாவூர் கைவினை கலைப்பொருள்...