×

மேலிடம் சொல்லிதான் அண்ணாமலை இப்படி பேசுவதாக நினைக்கிறோம் அதிமுக கூட்டணியில் பாஜ இல்லை: கட்சி தலைமை முடிவு செய்துள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

சென்னை: டெல்லி பாஜ மேலிட தலைவர்கள் சொல்லி தான் அண்ணாமலை இப்படி பேசுவதாக நாங்கள் நினைக்கிறோம். தமிழகத்தில் பாஜ எக்ஸ்ட்ரா லக்கேஜ் இல்லை, வேஸ்ட் லக்கேஜ். அதிமுக கூட்டணியில் பாஜ இல்லை என்று கட்சி தலைமை முடிவு செய்துள்ளதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அதிரடியாக கூறினார். தமிழகத்தில் அதிமுக – பாஜ கூட்டணி கட்சிகளாக உள்ளது. ஆனால், தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை அதிமுக தலைவர்களை தொடர்ந்து விமர்சித்து வருகிறார். அதிமுக முன்னாள் அமைச்சர்களின் ஊழல் பற்றி கருத்து தெரிவித்து வருகிறார். இதற்கு அதிமுகவின் 2ம் கட்ட தலைவர்கள் பதிலடி கொடுத்தாலும், அண்ணாமலை கண்டுகொள்ளவில்லை. அதேநேரம், பாஜ கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேற முடியாமல் டெல்லி பாஜ தலைமை மிரட்டி வருகிறது. இதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி அண்ணாமலை போகிற இடங்களில் எல்லாம் அதிமுக தலைவர்களை விமர்சனம் செய்து வருகிறார்.

இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேற்று சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது: ஜெயலலிதாவை விமர்சித்து அண்ணாமலை கூறிய கருத்துக்கு அதிமுக தொண்டர்கள் கடுமையான கண்டனத்தை அன்றைக்கு தெரிவித்தார்கள். அப்போது தலைமை கழகம் சார்பில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஒரு கண்டன தீர்மானம்கூட நிறைவேற்றப்பட்டது. அந்த கண்டன தீர்மானத்தை அன்றைய தினம் நடந்த பத்திரிகையாளர்கள் கூட்டத்தில்கூட எடப்பாடி பழனிசாமி வாசித்தார். கடுமையான அளவுக்கு ஜெயலலிதா பற்றி விமர்சித்த பிறகு, எங்களுடைய கண்டனத்தை தெரிவித்தபிறகு அண்ணாமலை திருந்திவிட்டார் என்று பார்த்தால் கொஞ்சம் கூட அண்ணாமலை திருந்தவில்லை.

தமிழகத்தில் பாஜவைவிட அண்ணாமலை தன்னை முன்னிலைப்படுத்த வேண்டும் என்பதற்காக, ஜெயலலிதாவை விமர்சனம் செய்து, எங்களிடம் நன்றாக வாங்கிக் கட்டிக்கொண்டார். அதன்பிறகு ஒரு அந்தர் பல்டி அடித்து, நான் ஜெயலலிதாவை மிகவும் மதிக்கிறேன், நான் அப்படி சொல்லவே இல்லை என்று மன்னிப்பு கேட்டார். அதன்பிறகு, பேரறிஞர் அண்ணாவை பற்றி தற்போது விமர்சித்துள்ளார். அண்ணாவுடைய வரலாறு என்ன? அண்ணாவை பொறுத்தவரை தமிழ்நாடு மட்டுமல்ல, உலகம் முழுவதும் போற்றக்கூடிய மிகப்பெரிய அறிஞர். எந்த கேள்வியை எப்போது, எந்த மொழியில் கேட்டாலும் பதில் சொல்லக்கூடிய ஒரு பன்மொழி தன்மை வாய்ந்தவர். தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்து, தாழ்ந்த நிலையில் இருந்த தமிழகத்தை உயர்ந்த நிலைக்கு கொண்டு போனவர் அண்ணா.

எங்கள் கட்சியின் பெயரிலேயே அண்ணா தாங்கி இருக்கும் நிலையில், அவரை சிறுமைப்படுத்தும் நிலையில் அவர்கூறும் கருத்துக்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்திருந்த நிலையில், அதற்கும்கூட திருந்தாமல் திரும்பவும் தன்னை முன்னிலைப்படுத்த வேண்டும் என்பதற்காக நேற்றைய தினம் அளித்த பேட்டியில் தந்தை பெரியார் அடி வாங்கினதை சொல்கிறார். அப்புறம் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எப்படி பதவி வாங்கினார் என்று கூறுகிறார். தகுதிக்கு மீறிய பதவி. ஒரு ஐபிஎஸ் ஆபீசராக இருந்துகொண்டு எதுக்கு இதை வாங்கிட்டு வந்தாருன்னு எனக்கு தெரியாது. அதுபற்றி கிளறினாதான் இவரைப்பற்றி தெரியும்.

அதிமுக என்ற சிங்கக் கூட்டத்தை பார்த்து சிறுநரி அண்ணாமலை ஊளையிடுது. தனியாக போய் நிற்கட்டும். நோட்டாவுக்கு கீழதான் அண்ணாமலை ஓட்டு வாங்குவாரே தவிர, நோட்டாவை தாண்ட மாட்டார். தன்னை முன்னிலைப்படுத்த வேண்டும் என்பதற்காகவே அண்ணாமலை எங்கள் தலைவர்களை கொச்சைப்படுத்தி பேசி வருகிறார். இனி எங்க (அதிமுக) ஆளுங்க விட மாட்டாங்க. இனிமே அண்ணாமலையை தாறுமாறா ஐடி விங்க் கடுமையாக விமர்சிக்கும். டெல்லி பாஜ மேலிடத்தில் ஏற்கனவே சொல்லிவிட்டோம். கூட்டணியில் இருக்கிறோம்.

அவரை (அண்ணாமலையை) திருத்துங்க, இதுபோன்று பேசக்கூடாது என்று சொல்லுங்கள் என்று சொல்லிவிட்டோம். பாஜ தொண்டர்கள் அதிமுக கூட்டணியை விரும்புகிறார்கள். ஆனால் அண்ணாமலை விரும்பவில்லை. அவர் விரும்பாமல் இருக்கும் சூழ்நிலையில், இப்படி கூட்டணியில் இருந்து கொண்டு அண்ணாமலை சொல்லும் விமர்சனங்கள் நாங்கள் (அதிமுக) ஏற்றுக்கொள்ள வேண்டுமா? அப்படி எங்களுக்கு என்ன அவசியம் இருக்கிறது. உங்களை (பாஜ) சுமக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு என்ன இருக்கு.

பாஜவுக்கு காலே தமிழகத்தில் கிடையாது. அண்ணாமலைக்கு காலே கிடையாது. தமிழகத்தில் பாஜ காலூன்ற முடியாது. அப்படிப்பட்ட நிலைமைதான் இன்று தமிழகத்தில் பாஜவுக்கு இருக்கிறது என்று எங்களுக்கும் தெரியும். அதிமுகவை வைத்துதான் தமிழகத்தில் பாஜவுக்கு அடையாளமே. அப்படி இருக்கும் நிலையில், தன்மானம் உள்ள ஒரு அதிமுக தொண்டன்கூட இந்த விமர்சனத்தை ஏற்றுக்கொள்ள முடியாத சூழ்நிலைதான் உள்ளது. இதுபற்றி டெல்லி மேலிடத்திலும் நாங்கள் சொல்லி விட்டோம். அண்ணாமலையை கட்டுப்படுத்தி வையுங்கள், ஒரு கூட்டணியில் இருந்து கொண்டு இதுபோன்று பேசுவது தப்பு. கள அளவில் தொண்டர்கள், பாஜ தொண்டர்கள் எப்படி ஒற்றுமையாக வேலை செய்ய முடியும். திரும்ப, திரும்ப அப்படி பேசினால், இனியும் பொறுத்துக்கொள்கிற மாதிரி இல்லை.

அதனால் ஒன்று சொல்கிறேன், கூட்டணியை பொறுத்தவரையில் அதிமுகவுடன் பாஜ கூட்டணியில் இல்லை. (அப்போது ஜெயக்குமாருடன் கூடி இருந்த ஏராளமான அதிமுக தொண்டர்கள் கைதட்டி வரவேற்றனர்.) தேர்தல் வரும்போதுதான் அதுபற்றி முடிவு செய்ய முடியும். தற்போதைய நிலையில் நாங்கள் பாஜவுடன் கூட்டணியில் இல்லை. அதுதான் தற்போது அதிமுகவின் நிலைப்பாடு. எப்போதும், நான் என்னுடைய கருத்துகளை பத்திரிகையாளர்களிடம் சொல்வது இல்லை. தற்போதும் கட்சி தலைமையின் கருத்தைதான் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்துள்ளேன். கட்சி என்ன முடிவு எடுக்கிறதோ அதைத்தான் நான் பேசுவேன். அதிமுக கட்சியின் முடிவை பொறுத்தவரை, இப்போதைக்கு பாஜவுடன் கூட்டணி கிடையாது. இனிமேல், அண்ணாமலை எங்கள் தலைவர்களை விமர்சனம் செய்தால் கடுமையான விமர்சனங்களை அவர் சந்திக்க நேரிடும்.

அண்ணாமலை பற்றி டெல்லி பாஜ தலைமையிடம் புகார் அளித்தும், அவர் அடங்காமல் அதிமுக கட்சி பற்றியும், முன்னாள் தலைவர்கள் பற்றியும் விமர்சித்து வருகிறார். அப்படியென்றால் மேலிடம் சொல்லித்தான் அண்ணாமலை இப்படி பேசுகிறார் என்று நாங்கள் நினைக்கிறோம். பாஜவுடன் கூட்டணி இல்லையென்றால் அதிமுகவுக்கு இழப்பு இல்லை. பாஜவுக்குத்தான் இழப்பு. தமிழகத்தில் பாஜ எக்ஸ்ட்ரா லக்கேஜ் இல்லை, வேஸ்ட் லக்கேஜ். அதிமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்களை தூண்டிவிடும் கோழைகள் என்று அண்ணாமலை கூறுகிறார். கோழைக்கு தான் கோழை புத்தி வரும். அண்ணாமலை வீரன் இல்லை. அண்ணாமலை தனியாக நின்று ஒரு தொகுதியில் வெற்றி பெற முடியுமா? நோட்டோவுடன்தான் அவர் போட்டியிட முடியும்.

* ஆர்எஸ்எஸ் தலையீடு
அண்ணாமலையின் வீட்டுக்கு பாஜ அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம் நேற்று மாலை சென்றார். அதிமுகவுடன் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினை குறித்து பேசியுள்ளார். ஆர்.எஸ்.எஸ். சார்பில், அண்ணாமலைக்கு சில ரகசிய உத்தரவுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு கட்டமாகத்தான் கேவச விநாயகம் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார். இதனால் இந்த விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு பணிந்து அண்ணாமலை பேசாமல் இருப்பாரா அல்லது அதிமுகவுக்கு தொடர்ந்து பதிலடி கொடுப்பாரா என்ற பரபரப்பு எழுந்துள்ளது. அவருடைய முடிவைப் பொறுத்துதான் ஆர்எஸ்எஸ் என்ன மனநிலையில் உள்ளது என்பது தெரியும் என்கின்றனர் அதிமுக நிர்வாகிகள்.

* கூட்டணி முறிவு அறிவிப்பு டிரெண்டிங்
அதிமுகவுக்கும் பாஜவுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. இந்நிலையில் அதிமுக கூட்டணியில் பாஜ இல்லை என்று கூறி ஜெயக்குமார் அறிவித்து விட்டார். இந்தநிலையில், ‘‘நன்றி மீண்டும் வராதீர்கள்’’ என்று அதிமுக சார்பில் வெளியிட்டுள்ள ஹேஸ்டாக் டிரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது. இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post மேலிடம் சொல்லிதான் அண்ணாமலை இப்படி பேசுவதாக நினைக்கிறோம் அதிமுக கூட்டணியில் பாஜ இல்லை: கட்சி தலைமை முடிவு செய்துள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி appeared first on Dinakaran.

Tags : anamalai ,minister ,jayakumar ,Chennai ,Delhi Baja ,Tamil Nadu ,Baja ,Alliance ,
× RELATED ஜெயக்குமார் ஆரூடம் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் மெகா கூட்டணி