×

நாடாளுமன்றம், சட்டமன்றத்தில் மகளிருக்கு 33% இடஒதுக்கீட்டுக்கு ஒப்புதல்? பிரதமர் மோடி தலைமையில் நடந்த ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு; இன்று மசோதா தாக்கலாக வாய்ப்பு

புதுடெல்லி: நாடாளுமன்றம், மாநில சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடங்களை ஒதுக்க வழிவகை செய்யும் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு பிரதமர் மோடி தலைமையில் நடந்த ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த மசோதா நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடரில் இன்று தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 11ம் தேதி முடிவடைந்த நிலையில், செப்டம்பர் 18 முதல் 22ம் தேதி வரை 5 நாட்களுக்கு சிறப்பு கூட்டத்தொடர் நடத்தப்படுவதாக ஒன்றிய அரசு கடந்த மாதம் 31ம் தேதி அறிவித்தது.

சிறப்பு கூட்டத்தொடர் எதற்காக என்பதை ஒன்றிய அரசு தெரிவிக்காததால், பொது சிவில் சட்டம், ஒரே நாடு ஒரே தேர்தல், இந்தியாவின் பெயரை பாரதம் என மாற்றுவது உள்ளிட்ட சர்ச்சைக்குரிய மசோதாக்களை நிறைவேற்ற சிறப்பு கூட்டத்தொடர் கூட்டப்பட்டிருப்பதாக பல்வேறு தகவல்கள் வெளியாகின. இதற்கிடையே, புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு அலுவல்கள் முறைப்படி மாற்றப்படுவதையொட்டி, 75 ஆண்டு கால நாடாளுமன்ற பயணம் குறித்து விவாதம் நடத்தவும், தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள் நியமனம் உள்ளிட்ட 4 மசோதாக்கள் நிறைவேற்றவும் சிறப்பு கூட்டத்தொடர் கூட்டப்பட்டிருப்பதாக ஒன்றிய அரசு கூறியது. ஆனால் அவசரமில்லாத இந்த மசோதாக்களை தாண்டி வேறு சில ரகசிய திட்டங்கள் இருக்கலாம் என எதிர்க்கட்சிகள் கூறி வந்தன.

இந்நிலையில், பல்வேறு யூகங்களுக்கு மத்தியில் நாடாளுமன்றத்தின் 5 நாள் சிறப்பு கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரின் முதல் நாள் அமர்வு நேற்று மாலை 6 மணிக்கு முடிந்த பிறகு, மாலை 6.30 மணி அளவில் பிரதமர் மோடி தலைமையில் ஒன்றிய அமைச்சரவை கூட்டம் நடந்தது. இதில், ஒன்றிய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பங்கேற்றனர். அடுத்த 4 நாட்களில் சிறப்பு கூட்டத்தொடரில் கொண்டு வரப்படக் கூடிய முக்கிய மசோதாக்கள் குறித்து அமைச்சரவையில் முடிவு செய்யப்படலாம் என தகவல்கள் வெளியான நிலையில், சுமார் 2 மணி நேரம் கூட்டம் நடந்ததால் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியது.

வழக்கமாக கூட்டம் முடிந்ததும், அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து ஒன்றிய அமைச்சர்கள் செய்தியாளர்களிடம் விளக்குவார்கள். ஆனால் நேற்றைய கூட்டம் முடிந்ததும் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தப்படவில்லை. கூட்டத்தில் என்ன விவாதிக்கப்பட்டது என்பது ரகசியமாகவே வைக்கப்பட்டது. அதே சமயம், தலைமை தேர்தல் ஆணையர் நியமன மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவிப்பதால் அம்மசோதாவை சிறப்பு கூட்டத்தொடரில் கொண்டு வர அரசு விரும்பவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும், மக்களவை தேர்தலை குறிவைத்து, நாடாளுமன்றம், மாநில சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வழி செய்யும் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த மசோதா இன்றே நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது. முன்னதாக மக்களவை கூட்டம் நேற்று காலையில் தொடங்கியதும், ‘75 ஆண்டு கால நாடாளுமன்ற பயணத்தின் சாதனைகள், அனுபவங்கள், நினைவுகள் மற்றும் கற்றுக்கொண்ட பாடங்கள்’ என்ற தலைப்பில் பழைய நாடாளுமன்றத்திற்கு விடை தரும் விவாதம் நடந்தது.

இதில் பிரதமர் மோடி 52 நிமிடங்கள் ஆற்றிய உரையில் கூறியதாவது: இன்று நாம் இந்த வரலாற்று சிறப்புமிக்க கட்டிடத்தில் இருந்து விடைபெறுகிறோம். சுதந்திரத்திற்கு முன் ஆங்கிலேயர்களின் ஏகாதிபத்திய சட்டமன்றமாக இருந்த இந்த கட்டிடம், சுதந்திரத்திற்குப் பின் நாடாளுமன்றமானது. இந்த கட்டிடத்தை ஆங்கிலேயர்கள் கட்டியிருக்கலாம். ஆனால் கட்டுமானத்திற்கான உழைப்பு, பணம் நம் நாட்டு மக்களுடையது என்பதை பெருமையுடன் சொல்லிக் கொள்ளலாம். இந்த கட்டிடம் குறித்து நம் மனதில் பல நினைவுகள், உணர்வுகள் நிறைந்துள்ளன. பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை தூக்கத்தில் இருந்து எழுப்ப, பகத் சிங்கும், படுகேஷ்வர் தத்துடன் நாடாளுமன்றம் மீது துணிச்சலுடன் குண்டுகளை வீசினர். அந்த வெடிகுண்டின் சத்தம், நாட்டிற்கு நன்மை செய்ய விரும்புவோருக்கு இன்னும் தூக்கமில்லாத இரவுகளுடன் விழிப்புடன் வைத்துள்ளது.

இதே நாடாளுமன்றத்தில்தான் ஜவகர்லால் நேரு, லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி, பிவி. நரசிம்மராவ், அடல் பிகாரி வாஜ்பாய் போன்ற முன்னாள் பிரதமர்கள் தங்கள் தலைமையின் கீழ் தேசத்திற்கு புதிய திசையை காட்டினர். இங்கு, ஜவகர்லால் நேரு நள்ளிரவில் ஆற்றிய ‘விதியுடன் ஓர் ஒப்பந்தம்’ என்கிற உரை இன்றும் நம் அனைவரையும் ஊக்கப்படுத்திக் கொண்டிருக்கிறது. அதே போல, ‘அரசாங்கங்கள் வரலாம் போகலாம், கட்சிகள் உருவாகலாம் கலையலாம். ஆனால் இந்த தேசம் வாழ வேண்டும்’ என்ற வாஜ்பாயின் வார்த்தைகள் இன்றும் எதிரொலிக்கின்றன. இவ்வாறு ஜனநாயகத்திற்கு பெருமை சேர்த்த முன்னாள் பிரதமர்களை பாராட்டுவதற்கான ஒரு சந்தர்ப்பம் இது.

சுதந்திர இந்தியாவின் முதல் அரசு அமைந்த போது நாட்டின் சமூக நீதியை கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்ட அம்பேத்கரின் தொலைநோக்கு பார்வை இன்றும் ஒவ்வொரு கொள்கையிலும் தொடர்கிறது. ஆட்சியில் இருக்கும் போதே இறந்த நேரு, லால்பகதூர், சாஸ்திரி, இந்திரா காந்தி ஆகிய பிரதமர்களை இந்த நாடாளுமன்றம் சிறந்த அஞ்சலி செலுத்தி உள்ளது. ராஜேந்திர பிரசாத், அப்துல் கலாம், ராம்நாத் கோவிந்த் மற்றும் திரவுபதி முர்மு வரையிலான ஜனாதிபதிகளின் உரைகளாலும் சபை பயனடைந்துள்ளது.

கொண்டாட்டங்களைப் போலவே சில கசப்பான நினைவுகளையும் இந்த நாடாளுமன்றம் நினைவுபடுத்துகிறது. வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் ஜார்க்கண்ட், உத்தரகாண்ட், சட்டீஸ்கர் ஆகிய 3 புதிய மாநிலங்கள் உருவான போது எல்லா இடங்களிலும் கொண்டாட்டங்கள் இருந்தன. ஆனால், ஆந்திராவில் இருந்து தெலங்கானா பிரிக்கப்பட்ட போது இரு மாநிலத்திலும் கசப்பும், வெறுப்பும் மட்டுமே நீடித்தது. இந்திரா காந்தியின் தலைமையில் வங்கதேச விடுதலைக்கு இந்த சபை ஆதரவு அளித்தது. அதேநேரம், அவசரநிலைக் காலத்தில் ஜனநாயகத்தின் மீதான தாக்குதலையும் இந்த அவை கண்டது.

இதே கட்டிடத்தின் மீது தீவிரவாதிகள் பயங்கர தாக்குதலை நடத்தி உள்ளனர். அது ஜனநாயகத்தின் தாய் மீது நடத்தப்பட்ட தாக்குதல். இந்தியாவின் ஆன்மா மீதான தாக்குதல். தீவிரவாதிகளுடன் போரிட்டு சபையையும் அதன் உறுப்பினர்களையும் காப்பாற்ற மார்பில் குண்டுகளை எதிர்கொண்டவர்களுக்கு இந்த தருணத்தில் வணக்கம் செலுத்துகிறேன். சுதந்திரத்திற்குப் பிறகு, பல கற்றறிந்தவர்கள் இந்தியாவைப் பற்றி பல்வேறு கவலைகளை எழுப்பினர். ‘இந்தியா செழிக்க முடியுமா, ஒற்றுமையாக இருக்குமா, இந்தியாவில் ஜனநாயகம் நிலைத்திருக்குமா’ என்று அவர்கள் அச்சங்களை தெரிவித்தனர். ஆனால், இந்த நாடாளுமன்றத்தின் சக்திதான் உலகம் நினைத்தது தவறு என்று நிரூபித்தது. எல்லா சந்தேகங்களையும் இருளையும் மீறி இந்தியா செழித்தது.

நான் முதல் முறையாக இங்கு எம்பியாக உள்ளே நுழையும் போது ஜனநாயகத்தின் கோயிலை வணங்கி மரியாதை செய்தேன். அது எனக்கு உணர்ச்சிகரமான தருணம். ரயில்வே பிளாட்பாரத்தில் வசிக்கும் ஏழைக் குடும்பத்தின் மகன் ஒருவன் நாடாளுமன்றத்தில் நுழைய முடிந்தது. இதுவே இந்திய ஜனநாயகத்தின் பலம், ஜனநாயகத்தின் மீதான ஒவ்வொரு சாமானியனின் நம்பிக்கையின் பிரதிபலிப்பு. இந்த சபையில் இதுவரை 7,500 எம்பிக்கள் பங்களித்துள்ளனர். அவர்களின் குரல் இந்த சபையை புனிதமாக மாற்றி உள்ளதாக கருதுகிறேன்.

சமீபகாலமாக பல வரலாற்று சிறப்புமிக்க முடிவுகள் இங்கு எடுக்கப்பட்டுள்ளன. சட்டப்பிரிவு 370 ரத்து, ஜிஎஸ்டி அமல், பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு, ஒரே பதவி ஒரே பென்சன் போன்ற சட்ட மசோதாக்கள் முதல் முறையாக எந்த சர்ச்சையின்றி வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளன. நாடாளுமன்றத்தின் மீது சாமானியர்களின் நம்பிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதுதான் இந்த 75 ஆண்டுகளில் மிகப்பெரிய சாதனை. நாம் புதிய கட்டிடத்திற்கு மாறலாம். ஆனால் இந்த பழைய கட்டிடம் எப்போதும் வரும் தலைமுறைகளுக்கு ஊக்கமளிக்கும்.

இதே போல, இந்திய பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் புதிய நாடாளுமன்ற கட்டடம் கட்டப்பட்டுள்ளது. அது நாட்டின் பன்முகத் தன்மையை காட்டுகிறது. அனைத்து தரப்பையும் உள்ளடக்கிய இடமாக நாடாளுமன்றம் இருக்கும். நாம் புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு புதிய நம்பிக்கையுடனும், புதிய எதிர்பார்ப்புகளுடனும் செல்வோம். இந்த அமர்வு குறுகியகால கூட்டத் தொடராக இருந்தாலும், வரலாற்று சிறப்புமிக்க முடிவுகளுடன் மதிப்பு வாய்ந்ததாக இருக்கும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார். பிரதமரின் பேச்சால் சர்ச்சைக்குரிய மசோதாக்கள் நிறைவேற்றம் குறித்த யூகங்களை மேலும் அதிகரித்துள்ளது.

* தமிழ்நாட்டில் பெண்களுக்கு 13 எம்.பி., 77 எம்எல்ஏ
மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டால், தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவை தொகுதிகளில் 13 பெண்களுக்கு ஒதுக்கப்படும். அதே போல் 234 சட்டப்பேரவை தொகுதிகளில் 77ல் பெண்கள் மட்டுமே போட்டியிட முடியும்.

* 543 எம்.பி.க்களில் 179 பெண்கள்
மக்களவையில் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 543. அதில் 179 தொகுதிகள் பெண்களுக்கு ஒதுக்கப்படும். மாநிலங்களவையில் மகளிருக்கு இடஒதுக்கீடு கிடையாது. மாநில சட்டப்பேரவைகளில் உள்ள 4,126 தொகுதிகளில் 1,362 பெண்களுக்கு ஒதுக்கப்படும்.

* இன்று முதல் புதிய நாடாளுமன்றம்
இன்று முதல் புதிய நாடாளுமன்ற கட்டிடம் பயன்பாட்டிற்கு வர உள்ளது. அடுத்த 4 நாள் சிறப்பு கூட்டத்தொடரும் புதிய நாடாளுமன்றத்தில் நடத்தப்படும். முதல் நாள் என்பதால் இன்று காலை 9.30 மணிக்கு புதிய நாடாளுமன்றத்தில் அனைத்து எம்பிக்களும் குழு புகைப்படம் எடுத்துக் கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து உறுதிமொழி எடுப்பு நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் பிற்பகல் 1.15 மணிக்கு மக்களவையும், பிற்பகல் 2.15 மணிக்கு மாநிலங்களவையும் கூட உள்ளது.

* ‘மக்கள் மனதில் அச்சம்’: ஆதிர் ரஞ்சன் விளாசல்
பிரதமர் மோடியின் உரைக்கு பதிலளித்து பேசிய மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, ‘‘இந்தியா பன்முகத்தன்மை கொண்ட நாடு. இங்கு அனைவரின் கருத்துக்கும் மதிப்பளிக்கப்பட வேண்டும். ஆனால் இப்போது ஒரு கட்சியின் சர்வாதிகாரம் திணிக்கப்படுவதைப் பற்றி மக்கள் மனதில் அச்சம் உள்ளது. இங்கு எத்தனை எம்பிக்கள் சிறுபான்மை சமூகத்தை சேர்ந்தவர்கள்?. பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்தில் இந்தியா-அமெரிக்கா இடையே அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தம் இல்லாவிட்டால், இன்று அமெரிக்காவுடன் இவ்வளவு நெருக்கமான உறவை கொண்டிருக்க முடியாது.

தகவல் அறியும் உரிமைச் சட்டம், உணவு உரிமைச் சட்டம், கல்வி உரிமைச் சட்டம் ஆகியவை காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்டவை. முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி ஆட்சியில்தான் தகவல் தொழில்நுட்ப புரட்சி கொண்டு வரப்பட்டது. பஞ்சாயத்து ராஜ் சட்டத்தை கொண்டு வர அவர் முக்கிய காரணமாக இருந்தார். அதேசமயம், 2016ல் பாஜ அரசு கொண்டு வந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை, 2019ல் காஷ்மீரை 2 யூனியன் பிரதேசமாக பிரித்தது. 370 சட்டப்பிரிவு நீக்கம் மற்றும் குடியுரிமை திருத்த சட்டம் ஆகியவை எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தின’’ என்றார். பிரதமர் மோடியின் பேச்சு ஒருபக்க சார்பாக இருந்ததாக பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

* 15 ஆண்டுகளுக்கு இடஒதுக்கீடு
2010ம் ஆண்டு மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாபடி, மொத்தம் 3 பொதுத் தேர்தல்களுக்கு அதாவது 15 ஆண்டுகளுக்கு மட்டுமே பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படும்.

* மாநிலங்களவையில் 2010ல் நிறைவேற்றம்
மகளிர் இடஒதுக்கீடு மசோதா கடந்த 2010ம் ஆண்டு மார்ச் 9ம் தேதி மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. ஆனால், மக்களவையில் நிறைவேற்ற முடியவில்லை. இப்போது 13 ஆண்டுகளுக்கு பிறகு மகளிர் இடஒதுக்கீடு மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற வாய்ப்பு உள்ளது.

* ஒரு சிறப்பும் இல்லை டி.ஆர்.பாலு பதிலடி
திமுக மக்களவை குழு தலைவர் டி.ஆர்.பாலு பேசுகையில், ‘‘இந்த சிறப்பு கூட்டத்தொடரில் எந்த சிறப்பும் இல்லை. மற்ற அமர்வுகளைப் போலவே இதுவும் உள்ளது. முந்தைய அரசில் பல பிரதமர்கள் நாட்டின் வளர்ச்சிக்கு பங்களித்துள்ளனர். முன்னாள் பிரதமர் வி.பி.சிங் ஆட்சிக் காலத்தில்தான் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு தந்து சமூக நீதி வழங்கப்பட்டது. 1963ம் ஆண்டு முதல் திமுக தனது பிரதிநிதிகளை நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வருகிறது. பல அரசுகளிலும் நாங்கள் அங்கம்வகித்துள்ளோம். நாட்டின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் அனைவரும் பங்களித்துள்ளனர்’’ என்றார்.

மாநிலங்களவையில் திமுக எம்பி திருச்சி சிவா பேசுகையில், ‘‘நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்பிக்களுக்கான வாய்ப்புகள் சுருங்கிக் கொண்டே போகிறது. நாடாளுமன்றத்தில் அரசின் பொறுப்புகளில் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் சட்டங்களை கொண்டு வருவதை விட அவசர சட்டங்களையே அரசு அதிகம் நாடுகிறது’’ என்றார். மக்களவையில் விடுதலைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவனும் மாநிலங்களவையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும் பேசினர்.

* முன்கூட்டியே மோப்பம் பிடித்த காங்.
மாநிலங்களவை கூடிய போது, முன்னாள் பிரதமர் மன்மோகன் சக்கர நாற்காலியில் அவைக்கு வந்தார். 90 வயதான மன்மோகன் சிங், 75 ஆண்டுகால நாடாளுமன்ற பயணம் குறித்த விவாதத்தில் ஒன்றிய அமைச்சர் பியூஸ் கோயல், மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவரான காங்கிரசின் மல்லிகார்ஜூனா கார்கே ஆகியோர் பேசியதை சுமார் 1 மணி நேரம் கேட்டார். கார்கே பேசிய போது, இத்தொடரில் பெண்களுக்கான 33% இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற வேண்டுமென வலியுறுத்தினார். நேற்றிரவு நடந்த ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில் பெண்களுக்கு இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க உள்ள தகவல் அறிந்து நாடாளுமன்றத்தில் கார்கே முன்கூட்டியே பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

* ஜி20 வெற்றி மக்களுக்கானது…
பிரதமர் மோடி பேசுகையில், ‘‘சமீபத்தில் இந்தியா ஜி20 அமைப்பிற்கு தலைமை ஏற்று, ஜி20 மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி உலக அளவில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. இந்த வெற்றியானது தனிப்பட்ட நபருக்கோ, ஒரு கட்சிக்கானதோ அல்ல. இது 140 கோடி நாட்டு மக்களுக்கும் சொந்தமானது. இது தேசத்தின் வெற்றி. இதை நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் கொண்டாட வேண்டும்’’ என்றார்.

The post நாடாளுமன்றம், சட்டமன்றத்தில் மகளிருக்கு 33% இடஒதுக்கீட்டுக்கு ஒப்புதல்? பிரதமர் மோடி தலைமையில் நடந்த ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு; இன்று மசோதா தாக்கலாக வாய்ப்பு appeared first on Dinakaran.

Tags : Parliament ,Union ,Cabinet ,Modi ,New Delhi ,State Assemblies ,Legislative Assembly ,Union Cabinet ,Dinakaran ,
× RELATED ஒன்றிய அரசு செயலாளர்கள் மாற்றம்