×

கொடைக்கானலில் ஓட்டல் அதிபருக்கு கொலை மிரட்டல் பாபி சிம்ஹா, கேஜிஎப் வில்லன் மீது வழக்கு

கொடைக்கானல்: கொடைக்கானலில் ஓட்டல் அதிபருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக நடிகர் பாபி சிம்ஹா, கேஜிஎப் வில்லன் நடிகர் உட்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வில்பட்டி ஊராட்சி, பேத்துப்பாறை கிராமத்தில், பிரபல நடிகரான பாபி சிம்ஹா பங்களா கட்டி வருகிறார். கட்டுமான பணிகளை ஒப்பந்த அடிப்படையில் கொடைக்கானல் மூஞ்சிக்கல் பகுதியை சேர்ந்த ஜமீர் மேற்கொண்டார். இதில் 90 சதவீத பணிகள் முடிந்ததாக கூறப்படுகிறது. பாபி சிம்ஹாவிற்கும், ஒப்பந்ததாரர் ஜமீருக்கும் முரண்பாடுகள் ஏற்பட்டதால் கட்டிட பணிகள் நிறுத்தப்பட்டன. மேலும் பாபி சிம்ஹா, ஜமீருக்கு பல லட்சம் பணம் தர வேண்டும்; இதுகுறித்து ஜமீர், அவரது தந்தை கேட்டபோது, பாபிசிம்ஹா ஜ‌மீரின் த‌ந்தையை தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது.

ஜமீரின் உறவினரான உசேன் என்பவரும், பாபி சிம்ஹாவும் பள்ளி நண்பர்கள். இதனாலேயே இந்த கட்டிட பணி ஒப்பந்தம் ஜ‌மீருக்கு கிடைத்துள்ளது. இதுகுறித்து உசேனிடம், ஜமீர், கட்டிட ஒப்பந்தப்படி பாபி சிம்ஹா மீதி தொகையை தரவில்லை. தனது ரூ.10 லட்சம் மதிப்புள்ள கட்டுமான பொருட்களை திருடி வைத்துள்ளார் என கூறியதாக தெரிகிறது. இதற்கிடையே உசேனுக்கு சொந்த‌மான செண்பகனூரில் உள்ள லாட்ஜில், கடந்த ஆக.20ம் தேதி பாபி சிம்ஹா, கேஜிஎப் பட வில்லன் நடிகரான ராமச்சந்திரா ராஜூ மற்றும் அடையாளம் தெரியாத இருவர் வந்து சென்றதாகவும், அப்போது உசேனிடம் கட்டுமான விஷயத்தில் தலையிட்டால் கொன்று விடுவேன் என மிரட்டல் விடுத்து அதிக சத்தம் எழுப்பியதாகவும் விடுதி ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து விடுதியின் மேலாளர், கொடைக்கானல் காவல் நிலையம், திண்டுக்கல் எஸ்பி, சரக டிஐஜிக்கு புகார் மனு அளித்துள்ளார். மேலும் உசேன் கடந்த 10ம் தேதி கொடைக்கானல் காவல் நிலையத்திற்கு தனது புகார் மனுவை தபாலில் அனுப்பியுள்ளார். புகாரில் ஜமீரின் ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்களை பாபிசிம்ஹா திருடி க‌ட்டிட‌த்திற்குள் வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்பேரில் போலீசார் பாபி சிம்ஹா, ராமசந்திரா ராஜூ மற்றும் இருவர் என 4 பேர் மீதும் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 1ம் தேதி பாபி சிம்ஹா அளித்த புகாரில் கொடைக்கானல் போலீசார், ஜமீர், அவரது தந்தை, உறவினர் உசேன், பேத்துப்பாறை மகேந்திரன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இரு தரப்பிலிருந்தும் மாறி, மாறி கொடுக்கப்படும் புகார்களால் போலீசார் குழப்பமடைந்துள்ளனர்.

The post கொடைக்கானலில் ஓட்டல் அதிபருக்கு கொலை மிரட்டல் பாபி சிம்ஹா, கேஜிஎப் வில்லன் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Kodaikanal ,Bobby Simha ,KGF ,
× RELATED ஊட்டி-கொடைக்கானல் செல்ல இ-பாஸ்...