×

சிவசேனா எம்எல்ஏக்கள் மீதான தகுதி நீக்க மனுக்கள் மீது முடிவு எடுக்க மகாராஷ்டிரா பேரவை சபாநாயகருக்கு கெடு: உச்ச நீதிமன்றம் அதிரடி

மும்பை: சிவசேனா எம்எல்ஏக்களை பதவி நீக்க கோரும் மனுக்கள் மீதான விசாரணையை ஒரு வாரத்தில் தொடங்குவதோடு, இவற்றின் மீது எப்போது தீர்ப்பு வழங்கப்படும் என்ற தேதியையும் தெரியப்படுத்த வேண்டும் என, மகாராஷ்டிர சட்டப்பேரவை சபாநாயகருக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. சிவசேனா கட்சி உத்தவ் அணி, ஷிண்டே அணி என்று பிரிந்த பின்னர் இரு அணிகளும் மாற்று அணி எம்எல்ஏக்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் பரஸ்பரம் மனு தாக்கல் செய்தன. இவற்றின் மீது விசாரணை நடத்திய சுப்ரீம் கோர்ட், பதவி நீக்கம் செய்யக் கோரும் மனுக்கள் மீது சபாநாயகர் ராகுல் நர்வேர்கர் உடனடியாக விசாரணை நடத்தி தீர்ப்பு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது. நியாயமான கால வரையறைக்குள் இந்த தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் மே மாதம் 11ம் தேதி சுப்ரீம் கோர்ட் சபாநாயகருக்கு உத்தரவிட்டது.

ஆனால் சபாநாயகர் நீண்ட நாட்களாக இது தொடர்பான நடவடிக்கைகளை எடுக்கவில்லை.இந்த நிலையில் பதவி பறிப்பு மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு சபாநாயகருக்கு உத்தரவிடக் கோரி சிவசேனா உத்தவ் அணி கட்சியின் மூத்த தலைவர் சுனில் பிரபு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுக்கள் மீது தலைமை நீதிபதி டி.ஓய்.சந்திரசூட், நீதிபதி ஜே.பி.பர்டிவாலா மற்றும் நீதிபதி மனோஜ் மிஷ்ரா ஆகியோரை கொண்ட அமர்வு விசாரணை நடத்தி நேற்று உத்தரவு பிறப்பித்தது.

இதில் கூறியிருப்பதாவது: சிவசேனா கட்சியின் இரு அணி எம்.எல்.ஏ.க்களின் பதவி நீக்கம் தொடர்பான மனுக்கள் மீது விசாரணை நடத்தி நியாயமான கால அளவுக்குள் தீர்ப்பளிக்க வேண்டும் என்று மே மாதம் 11ம் தேதி கோர்ட் உத்தரவிட்டது. ஆனால் இதுவரை அது தொடர்பான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. இது தொடர்பாக சபாநாயகர் ஒரு வாரத்துக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் எப்போது தீர்ப்பு வழங்கப்படும் என்பதையும் கோர்ட்டுக்கு தெரிவிக்க வேண்டும். ஒரு வாரத்துக்குள் நடவடிக்கை எடுக்கப்பட்டதையும், எப்போது தீர்ப்பு வழங்கப்படும் என்பதையும் சபாநாயகர் சார்பில் ஆஜர் ஆன சொலிஸ்டர் ஜெனரல் துஷார் மேத்தா கோர்ட்டில் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

The post சிவசேனா எம்எல்ஏக்கள் மீதான தகுதி நீக்க மனுக்கள் மீது முடிவு எடுக்க மகாராஷ்டிரா பேரவை சபாநாயகருக்கு கெடு: உச்ச நீதிமன்றம் அதிரடி appeared first on Dinakaran.

Tags : Maharashtra Assembly ,Shiv ,Supreme Court ,Mumbai ,Shiv Sena ,
× RELATED திமுக அமைச்சர்களுக்கு எதிராக அதிமுக...