
* சிறப்பு செய்தி
திருப்பூர் என்றால் அனைவருக்கும் நினைவிற்கு வருவது பனியன் என்றாலும், திருப்பூர் மாவட்டம் மற்ற தொழில்களுக்கும் பிரதானமாக இருந்து வருகிறது. ஊத்துக்குளி வெண்ணெய், திருமுருகன்பூண்டி சிற்பங்கள், பல்லடம் கறிக்கோழி, தாராபுரம், உடுமலை விவசாயம் மற்றும் காங்கயம் அரிசி மற்றும் எண்ணெய் உற்பத்தி தொழில் ஆகியவையும் முக்கியத்துவம் பெறுகிறது. காங்கயத்திற்கு பெருமை சேர்ப்பது, காங்கயம் இன காளைகள், அதுபோல் தேங்காய் எண்ணெய் மற்றும் கொப்பரை உற்பத்தியும் இங்கு அதிகம். காங்கயம் பகுதி தேங்காய் எண்ணெய் உற்பத்தியில் தமிழ்நாடு அளவில் முன்னிலையில் உள்ளதோடு அண்டை மாநிலமான கேரளாவின் தேங்காய் எண்ணெய் தேவையையும் பூர்த்தி செய்கிறது. மேலும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் தேங்காய் எண்ணெய் சப்ளை செய்து வருகிறது.
இங்கு 125 தேங்காய் எண்ணெய் தயாரிக்கும் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. தினமும் 50 டேங்கர் லாரிகள் மூலம் 500 டன் தேங்காய் எண்ணெய் கேரளா உள்பட அனைத்து மாநிலத்திற்கும் அனுப்பப்படுகிறது. இதனால், தினமும் ரூ.5 கோடி அளவில் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. 10 மில்லி முதல் பல்வேறு அளவுகளில் பாக்கெட் செய்யப்பட்டு சில்லரை விற்பனைக்கும் கொடுக்கப்படுகிறது. காங்கயம் பகுதிகளில் 1000 கொப்பரை உலர்களங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றிற்கு தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, கேரளா மாநிலங்களில் இருந்து தேங்காய் கொண்டு வரப்பட்டு அவை கொப்பரையாக மாற்றப்படுகிறது. இதில், தரமான கொப்பரை பருப்பு வெளிமாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் உணவுக்காக அனுப்பப்படுகிறது. ஆண்டுக்கு 3 ஆயிரம் டன் அளவில் ஏற்றுமதி நடைபெறுகிறது.
இந்த தொழிலில் நேரிடையாகவும், மறைமுகமாகவும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் நிரந்தர வேலைவாய்ப்பு பெற்று வந்தனர். தேங்காய் எண்ணெய் உற்பத்திக்கு காங்கயத்தில் நிலவி வரும் வெயில், மிதமான காற்றுடன் கூடிய தட்ப வெப்பநிலை உதவிகரமாக இருந்து வருகிறது. இவ்வாறாக சிறப்பான முறையில் தொழில் நடந்து வந்தது. இந்நிலையில், காலத்திற்கு ஏற்ப பாமாயில் பயன்பாடு அதிகரிக்க துவங்கி உள்ளது. இதனால், தேங்காய் எண்ணெய் விற்பனையும் குறைய தொடங்கியது. நாளுக்கு நாள் தேங்காய் எண்ணெயில் இருந்து பாமாயிலுக்கு செல்பவர்கள் அதிகரிப்பதால், தேங்காய் எண்ணெய் உற்பத்தியும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதுபோல், கொப்பரைக்கு சரியான விலை கிடைக்காததால் தென்னை விவசாயிகளும் கடும் பாதிப்பை சந்தித்து வருகிறார்கள். இவ்வாறு தொடர் சங்கிலிபோல தென்னை விவசாயிகள், கொப்பரை பெற்று தேங்காய் எண்ணெய் உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர்கள் என பலரும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். எனவே, ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இது குறித்து காங்கயம் தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் கூறியதாவது: பாமாயில் இறக்குமதியை ஒன்றிய அரசு ஊக்குவித்து வருகிறது. ஒரு லிட்டர் பாமாயிலுக்கு ரூ.110 வரை மானியம் வழங்குகிறது. இறக்குமதிக்கான வரியும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, சர்வசாதாரணமாக ரேஷன் கடைகள் உள்பட அனைத்து பகுதிகளிலும் பாமாயில் விற்கப்பட்டு வருகிறது. லிட்டர் ரூ.30க்கு விற்பனை செய்வதால், பலரும் பாமாயிலை பயன்படுத்த தொடங்கிவிட்டனர். உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்காத தேங்காய் எண்ணெய்யை புறக்கணிக்க தொடங்கிவிட்டனர். கடந்த காலங்களில் பிஸ்கட், மருந்து பொருட்கள், ஐஸ்கிரீம் மற்றும் பல பொருட்கள் தேங்காய் எண்ணெய் மூலம் தயாரிக்கப்பட்டு வந்தன. தற்போது, பாமாயிலை பயன்படுத்தி பொருட்களை தயாரிக்க தொடங்கிவிட்டனர். இதனால், பல பகுதிகளில் ஆர்டர்கள் இல்லாத நிலை உள்ளது. தற்போது, நாள் ஒன்றுக்கு 5 டேங்கர் லாரிகளில் மட்டுமே தேங்காய் எண்ணெய் அனுப்பி வைக்கப்படுகிறது.
தேங்காய் எண்ணெய் உற்பத்தி ஆலைகளும் கடந்த காலங்களைபோல் இயங்காமல், சில நாட்களே இயங்கும் நிலை உள்ளது. தொழிலாளர்களும் வேலை இழக்கும் நிலை உள்ளது. எனவே, தேங்காய் எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்கும் வகையிலும், தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் மற்றும் தென்னை விவசாயிகளை பாதுகாக்கும் வகையில், ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோகிக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தேங்காய் உற்பத்தி தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்களில்தான் உள்ளது.
இந்த மாநிலங்களில் பாஜ ஆட்சியில் இல்லாததன் காரணமாக, தென்னை தொழிலை ஊக்குவிக்க ஒன்றிய அரசு மறுக்கிறது. இதுபோல், விவசாயிகளின் கோரிக்கைகளையும் கண்டுகொள்வதில்லை. ஒன்றிய அரசால் வஞ்சிக்கப்படும் தென்னை விவசாயிகள், தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் கண்ணீரை துடைக்கும் வகையில், ரேஷன் கடைகளில் இதனை விநியோகிக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தற்போதைய நிலவரப்படி 15 கிலோ கொண்ட ஒரு டின் தேங்காய் எண்ணெய் ரூ.1,690க்கு விற்பனை செய்யப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
The post பாமாயிலை ஒன்றிய அரசு இறக்குமதி செய்வதால் தேங்காய் எண்ணெய் தொழில் கடும் பாதிப்பு: பொது விநியோக திட்டத்தில் வழங்கப்படுமா? appeared first on Dinakaran.