×

கூட்டுறவு சங்க தேர்தல் முடிவுகள் வெளியான நாளிலிருந்தே உறுப்பினர்களின் பதவி காலம் தொடங்குகிறது: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்களுக்கு கடந்த 2018ம் ஆண்டு ஏப்ரல், ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் தேர்தல் நடத்தப்பட்டது. இருப்பினும், வழக்குகள் காரணமாக, சில கூட்டுறவு சங்கங்களில், 10 முதல் 14 மாதங்கள் தாமதமாக 2019ம் ஆண்டு ஜூன் மாதம் தான் நிர்வாகிகள் தேர்தல் நடத்தப்பட்டது. இந்நிலையில், ஐந்து ஆண்டுகள் பதவிக்காலம் முடிவடைந்து விட்டதாக கூறி கூட்டுறவு சங்கங்களை நிர்வகிக்க அதிகாரியை நியமித்து கடந்த ஆகஸ்ட் மாதம் அரசு உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவை எதிர்த்தும், நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்ட பின் பதவிக்காலம் அமலுக்கு வரும் என கூறி, 2024ம் ஆண்டு வரை கூட்டுறவு சங்க நடவடிக்கையில் தலையிட அரசுக்கு தடை விதிக்கக் கோரியும், கூட்டுறவு சங்கங்களை கலைக்க தடை கோரியும் கூட்டுறவு சங்கங்களின் நிர்வாகிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்தனர். இந்த வழக்குகள் நீதிபதி எஸ்.சவுந்தர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில், கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் தேர்தல் நடந்து நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்ற பிறகே, சங்கங்கள் செயல்பட தொடங்குகின்றன. அதிலிருந்து ஐந்து ஆண்டுகள் பதவிக்காலம் தொடங்குகிறதே தவிர, உறுப்பினர் தேர்தல் முடிவுகள் வெளியான நாளில் இருந்து அல்ல என்று வாதிடப்பட்டது.

இந்த வாதங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்த அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம், தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் சட்டம், இந்திய அரசியல் சட்டப் பிரிவுகளில் சங்கங்களின் தேர்தல் முடிவுகள் வெளியான நாளில் இருந்து தான் ஐந்து ஆண்டுகள் பதவிக்காலம் தொடங்குகிறது என்றார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் சட்டத்தில், உறுப்பினர்களின் பதவிக்காலம், எந்த தேதியில் இருந்து ஐந்து ஆண்டு பதவிக்காலம் துவங்குகிறது என்று கூறப்படவில்லை. தேர்தல் முடிவுகள் வெளியான நாளில் இருந்தே பதவிக்காலம் தொடங்குவதாகவே கருத முடியும். நிர்வாகிகள் தேர்தலுக்கு பிறகு தான் தொடங்குகிறது எனக் கூற முடியாது என்று கூறி கூட்டுறவு சங்க நிர்வாகிகளின் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

The post கூட்டுறவு சங்க தேர்தல் முடிவுகள் வெளியான நாளிலிருந்தே உறுப்பினர்களின் பதவி காலம் தொடங்குகிறது: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Association ,Chennai High Court ,Chennai ,Tamil Nadu ,-operative Association ,
× RELATED சென்னை உயர்நீதிமன்றம் நாளை இயங்கும்: பதிவாளர் அறிவிப்பு