
சென்னை: ஆதித்யா எல்-1 விண்கலம் சுற்று வட்டப்பாதையில் சுற்றி வரும் நிலையில், தற்போது அறிவியல் தரவுகளை சேகரிக்க தொடங்கியுள்ளது என இஸ்ரோ தெரிவித்துள்ளது. சூரியனை ஆய்வு செய்யும் நோக்கத்துடன் ஆதித்யா எல் -1 திட்டத்தை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ தற்போது செயல்படுத்தியுள்ளது. லெக்ராஞ்சியன் பாயிண்ட் என்ற இடத்தை மையமாக கொண்டு ஹெலோ ஆர்பிட் எனப்படும் ஒளிவட்ட பாதையில் பயணித்து ஆதித்யா விண்கலம் ஆய்வுகளை மேற்கொள்ளும்.
தற்போது புவி வட்டப்பாதையில் சுற்றி வரும் ஆதித்யா விண்கலம் 4 சுற்றுகளை முடித்து 4வது கட்ட உயரம் அதிகரிக்கும் பணிகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. மொத்தம் 5 முறை விண்கலத்தின் சுற்று வட்டப்பாதை உயரத்தப்பட்டு, 5வது முறையாக பூமியை சுற்றி முடித்த பின் தன் இலக்கை நோக்கி விண்கலம் பயணத்தை தொடங்கும். ஆதித்யா எல்-1 விண்கலம் சுற்று வட்டப்பாதையை சுற்றி வரும் நிலையில் தற்போது, விண்கலம் அறிவியல் தரவுகளை சேகரிக்கத் தொடங்கியுள்ளது.
இதுகுறித்து இஸ்ரோ வெளியிட்ட டிவிட்டர் பதிவு: ஆதித்ய சோலார் விண்ட் பார்ட்டிகல் எக்ஸ்பெரிமென்ட் (ASPEX) பேலோடின் ஒரு பகுதியான சூப்ரா தெர்மல் & எனர்ஜிடிக் பார்ட்டிகல் ஸ்பெக்ட்ரோமீட்டர் (STEPS) கருவி அறிவியல் தரவுகளை சேகரிக்க தொடங்கியுள்ளது. எஸ்டிஇபிஎஸ் (STEPS) கருவியின் சென்சார்கள் பூமியில் இருந்து 50,000 கிமீ தொலைவில் உள்ள அதிவெப்ப மற்றும் ஆற்றல் அயனிகள் மற்றும் எலக்ட்ரான்களை அளவிட தொடங்கியுள்ளன. இந்த தரவு விஞ்ஞானிகள் பூமியைச் சுற்றியுள்ள துகள்களின் நடத்தையை ஆய்வு செய்ய உதவும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
The post அறிவியல் தரவுகள் சேகரிக்கும் ஆதித்யா எல்-1 விண்கலம்: இஸ்ரோ தகவல் appeared first on Dinakaran.