×

வாகன தகுதி சான்று வாங்க தமிழ்நாட்டில் 47 தானியங்கி சோதனை மையங்கள்: சென்னையில் 4 இடங்களில் அமைக்கப்படுகிறது

சென்னை: தமிழ்நாட்டில் தற்போது நடைமுறையில் வாகனம் வாங்கிய முதல் 8 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கு் புதுப்பிக்க வேண்டும். 8 ஆண்டுகள் முடிந்த பின்னர், வாகனங்கள் வரி செலுத்திய பிறகு ஒவ்வொரு ஆண்டும் தகுதி சான்றிதழ் புதுப்பிக்க வேண்டும். தமிழ்நாட்டில் போக்குவரத்து வாகனங்களுக்கு தகுதிச்சான்று மோட்டார் வாகன ஆய்வாளர்களால் வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் அனைத்து கனரக போக்குவரத்து வாகனங்களுக்கும் தானியங்கி சோதனை நிலையத்தின் மூலமாகவே தகுதிச்சான்று வழங்க வேண்டும் என மத்திய மோட்டார் வாகன சட்டத்தில் மாற்றம் செய்து ஒன்றிய அரசு அறிவிப்பு வெளியிட்டது.

தமிழகத்தில் முதற்கட்டமாக 18 வட்டார போக்குவரத்து அலுவலக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தனியார் பங்களிப்புடன் தானியங்கி சோதனை நிலையங்கள் அமைக்கப்படும் என 2023-24ம் ஆண்டு மானிய கோரிக்கையில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு வெளியிட்டார். தற்போது இந்த சட்டத்தை செயல்படுத்தும் விதமாக கள ஆய்வு மேற்கொண்டு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய அனைத்து போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இது குறித்து போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழ்நாடு முழுவதும் 47 இடங்களில் தானியங்கி சோதனை மையங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதில் நான்கு மையங்கள் சென்னையில் அமைக்கப்படவுள்ளது. குரோம்பேட்டையில் உள்ள மாநகர போக்குவரத்து கழக பயிற்சி பள்ளி, தரமணியில் உள்ள சாலை போக்குவரத்து நிறுவன வளாகம், பல்லவன் சாலையில் உள்ள அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனை மற்றும் திருவொற்றியூர் அல்லது எண்ணூரில் உள்ள அரசு பேருந்து பணிமனை ஆகியவற்றில் தானியங்கி சோதனை மையங்கள் வர வாய்ப்புள்ளது.

ஒன்றிய சாலை போக்குவரத்து அமைச்சகத்தின் வழிகாட்டுதல்களின்படி, இந்த தானியங்கி சோதனை மையங்கள் பிரேக் அமைப்புகள், முகப்பு விளக்குகள், பேட்டரி, சக்கரங்கள், பிரதிபலிப்பு ஸ்டிக்கர்கள் மற்றும் வேகம் காட்டும் மீட்டர்கள் உள்ளிட்ட 40 வெவ்வேறு அளவுகோல்களை சோதிக்க முடியும். ஒருவேளை வாகனம் மூன்று சோதனைகளில் அதாவது இணைப்புகளின் செயல்பாடு, சக்கரங்களின் அமைப்பு, நிலை மற்றும் சஸ்பென்ஷன் உள்ளிட்ட சோதனைகளில் தோல்வியுற்றால், வாகனத்தை தகுதியற்றது என்று அறிவிக்கப்படும். பின்னர் வாகன உரிமையாளர் 30 நாட்களுக்குள் மறுபரிசோதனைக்கு விண்ணப்பிக்கலாம். இந்த சோதனை மையங்களை அமைக்க அரசு போக்குவரத்து கழகங்களுக்குச் சொந்தமான காலி நிலங்களைப் பயன்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. இதையடுத்து அனைத்து போக்குவரத்துக் கழகங்களின் மேலாண் இயக்குநர்களும் கள ஆய்வு நடத்தி விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

The post வாகன தகுதி சான்று வாங்க தமிழ்நாட்டில் 47 தானியங்கி சோதனை மையங்கள்: சென்னையில் 4 இடங்களில் அமைக்கப்படுகிறது appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Dinakaran ,
× RELATED கோடைகாலத்தில் சூரியனிலிருந்து வரும்...