- விநாயகர் சதுர்த்தி
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- சென்னை
- விநாயகர் சதுர்த்தி விழா
- சதுர்த்தி
- அநவாணி
- புரட்டாசி
- விநாயகர் சதுர்த்தி சதுர்த்தி
- ஆவால் படையெடுப்பு
சென்னை: ஆவணி மாதத்தில் வரும் சதுர்த்தி அன்று விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு புரட்டாசி மாதம் முதல் தேதியில் இந்த சதுர்த்தி நட்சத்திரம் வந்தது. அதன்படி நேற்று நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதிகாலை முதலே விநாயகர் கோயில் உள்பட அனைத்து கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். இரவிலும் கோயில்களில் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது.
கோயில்களில் விநாயகருக்கு கணபதி ஹோமம் செய்து, விநாயகர் சிலைகளுக்கு பால், நெய், இளநீர், தேன், பஞ்சாமிர்தம் மற்றும் வாசனை திரவியங்கள் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. மேலும் சிறப்பு அலங்காரமும் செய்யப்பட்டிருந்தது. அதிகாலை முதல் கோயில்களில் ஆயிரக்கணக்கானோர் திரண்டதால் பக்தர்கள் சிரமமின்றி சாமி தரிசனம் செய்யும் வகையில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பல இடங்களில் பக்தர்களுக்கு சுண்டல், சர்க்கரை பொங்கல், தயிர் சாதம், சாம்பார் சாதம், பொங்கல், கொழுக்கட்டை உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்கப்பட்டன. அன்னதானமும் நடைபெற்றது. மேலும் பல்வேறு கோயில்களில் ஆன்மிக கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த நிகழ்ச்சியை ஒரு வாரத்துக்கு நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
அது மட்டுமல்லாமல் வீடுகளில் சிறிய வகையிலான களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளுக்கு அருகம்புல், எருக்கம்பூ மாலை அணிவித்து கொழுக்கட்டை, அவல் படையலிட்டு வழிபாடு நடத்தினர். இதற்கிடையே பூஜை பொருட்களை வாங்க சென்னை கோயம்பேடு, மயிலாப்பூர், புரசைவாக்கம், தி.நகர், திருவான்மியூர், பிராட்வே, ராயபுரம், தாம்பரம், வடபழனி, ஜாம்பஜார், சைதாப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் மக்கள் கூட்டம் நேற்று அதிகமாக காணப்பட்டது. சாலைகளிலேயே பொரி, ஆப்பிள், ஆரஞ்ச், சாத்துக்குடி, மக்காச்சோளம், கொய்யா பழங்கள், கரும்பு, தென்னங்கீற்று ஆகியவை விற்பனை செய்யப்பட்டன. விலை அதிகமாக இருந்த போதிலும் அதை பற்றி பொருட்படுத்தாமல் பொருட்களை பொதுமக்கள் வாங்கி சென்றனர்.
மேலும் நகரின் பல்வேறு இடங்களில் சிறியது முதல் பெரிய அளவிலான விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடுகள் நடத்தப்பட்டது. குறிப்பாக 3 அடி முதல் 15 அடி உயரமுள்ள விநாயகர் சிலைகள் பூஜைக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியிலும் ஏராளமானோர் பங்கேற்றனர். வித்தியாசமான முறையில் காய்கறிகள், பழங்கள் மற்றும் கடலை மிட்டாய், மைசூர்பா கொண்டு செய்யப்பட்ட விநாயகர் சிலை பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது. இதையடுத்து சென்னையில் நேற்று காலை முதல் விநாயகர் சதுர்த்தி விழா களைகட்டியிருந்தது. பிரதிஷ்டை செய்து வைக்கப்பட்டுள்ள 1343 சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. ஒரு வாரத்திற்கு பிறகு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட உள்ளது. சிலைகளை கரைக்க கொண்டு செல்ல பல்வேறு கட்டுப்பாடுகளை போலீசார் விதித்துள்ளனர். விநாயகர் சதுர்த்தி மற்றும் விநாயகர் சிலை பாதுகாப்பு பணியில் சென்னை முழுவதும் 10 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணிக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
The post தமிழ்நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கோலாகல கொண்டாட்டம்: சென்னையில் 1343 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது; வீடுகளில் கொழுக்கட்டை, அவல் படையலிட்டு வழிபாடு appeared first on Dinakaran.