×

உலக கோப்பையை வெல்ல இந்தியா தயார்… கபில் தேவ் உறுதி

புதுடெல்லி: சொந்த மண்ணில் நடைபெற உள்ள ஐசிசி உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்ல இந்திய அணி தயாராகிவிட்டதாக முன்னாள் கேப்டன் கபில் தேவ் கூறியுள்ளார். கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் உலக கோப்பை தொடர் இந்தியாவில் அக்.5ம் தேதி தொடங்கி நவ.19 வரை நடைபெற உள்ளது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்ரிக்கா, இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், நெதர்லாந்து ஆகிய 10 அணிகள் களமிறங்க உள்ளன. இந்த தொடருக்கு முன்னோட்டமாக அமைந்த ஆசிய கோப்பை ஒருநாள் போட்டித் தொடரில், ரோகித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி 8வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தது.

பரபரப்பான பைனலில் இலங்கையை வெறும் 50 ரன்னில் சுருட்டி வீசிய இந்தியா, 6.1 ஓவரில் விக்கெட் இழப்பின்றி இலக்கை எட்டி அசத்தியது. வேகப் பந்துவீச்சாளர் முகமது சிராஜ் ஒரே ஓவரில் 4 விக்கெட் கைப்பற்றி சாதனை படைத்ததுடன் மொத்தம் 6 விக்கெட் வீழ்த்தி ஆட்ட நாயகன் விருதையும் தட்டிச் சென்றார். 263 பந்துகளை மீதம் வைத்து பெற்ற இந்த இமாலய வெற்றியால் இந்திய வீரர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர். இந்த நிலையில், உலக கோப்பையை வெல்ல இந்திய அணி தயாராகிவிட்டதாக முன்னாள் கேப்டன் கபில் தேவ் கூறியுள்ளார். கபில் தலைமையிலான இந்திய அணி 1983ல் முதல் முறையாக உலக கோப்பையை வென்று சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

ஜம்மு மற்றும் காஷ்மீர் ஓபன் கோல்ப் சாம்பியன்ஷிப் தொடரை நேற்று தொடங்கி வைத்த கபில், இந்திய அணிக்கான வாய்ப்பு குறித்து கூறியதாவது: லீக் சுற்றின் முடிவில் முதல் 4 இடங்களுக்குள் வந்து அரையிறுதிக்கு முன்னேறுவது முக்கியம். அதன் பிறகு கோப்பையை வெல்வதில் அதிர்ஷ்டத்தின் பங்கும் நிச்சயமாக விளையாடும்!. இப்போதே நாம் தான் கோப்பையை வெல்வோம், அதற்கான வாய்ப்பு எங்களுக்கே அதிகம் என்று அடித்து சொல்ல முடியாது. அதே சமயம் இந்திய அணி மிக வலுவானது என்பதிலும் சந்தேகம் இல்லை. இதயம் ஒன்றை சொன்னாலும், நாம் கடினமான உழைக்க வேண்டியது அவசியம் என்கிறது மனம். எனக்கு நமது அணியை பற்றி நன்றாகத் தெரியும். ஆனால், மற்ற அணிகளை பற்றி முழுமையாகத் தெரியாத நிலையில் கருத்து சொல்வது சரியாக இருக்காது.

இந்திய அணியை பொறுத்தவரை, பெரிய தொடர்களில் சிறப்பாக விளையாடி சாம்பியன் பட்டம் வெல்வதற்கு தயாராக உள்ளது. நமது வீரர்கள் தன்னம்பிக்கையுடனும், உற்சாகமாகவும் அனுபவித்து விளையாட வேண்டும். ஆசிய கோப்பை பைனலில் சிராஜ் பந்துவீச்சு அமர்க்களமாக இருந்தது. உலகம் முழுவதும் உள்ள ஆடுகளங்களில், நமது வேகப் பந்துவீச்சாளர்கள் ஒட்டுமொத்தமாக பத்து விக்கெட்டையும் சாய்க்கும் அளவுக்கு மிகச் சிறப்பாக செயல்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது.

நமது அணி சுழற்பந்துவீச்சாளர்களை மட்டுமே நம்பியிருந்த காலம் ஒன்று இருந்தது. அந்த காலம் இப்போது மலையேறிவிட்டது. அதனால் தான் இந்திய அணியின் வலிமை பன்மடங்காக அதிகரித்துள்ளது. எந்த ஒரு அணியாக இருந்தாலும், முன்னணி வீரர்கள் சிலர் காயம் அடையும்போது நிச்சயமாக பின்னடைவு ஏற்படும். அப்படி எதுவும் நிகழாமல் இருப்பதற்கு தான் அதிர்ஷ்டத்தின் துணை தேவைப்படுகிறது. தொடக்க வீரர் கில் அற்புதமாக விளையாடி வருகிறார். இந்திய அணியின் எதிர்காலம் அவர் தான். இவ்வளவு திறமை வாய்ந்த ஒரு வீரர் இந்திய அணியில் இருப்பது பெருமையாக உள்ளது.

சில வீரர்கள் தேர்வு செய்யப்படாதது குறித்து சொல்வதற்கு எதுவும் இல்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான கருத்து இருக்கும். தேர்வுக் குழுவினர் அவர்களது பணியை செய்கின்றனர், அதில் தலையிடக் கூடாது. இவ்வாறு கபில் தேவ் கூறியுள்ளார். உலக கோப்பை தொடர் அக்.5ம் தேதி தொடங்க உள்ள நிலையில், அதற்கு முன்பாக 3 ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி ஆஸ்திரேலியாவுடன் மோத உள்ளது. அதைத் தொடர்ந்து, உலக கோப்பைக்கான 2 பயிற்சி ஆட்டங்களில் செப்.30ம் தேதி இங்கிலாந்து அணியையும் (கவுகாத்தி), அக்.3ம் தேதி நெதர்லாந்து அணியையும் (திருவனந்தபுரம்) சந்திக்கிறது.

The post உலக கோப்பையை வெல்ல இந்தியா தயார்… கபில் தேவ் உறுதி appeared first on Dinakaran.

Tags : India ,World Cup ,Kabil Dev ,New Delhi ,ICC World Cup ODI ,Dinakaran ,
× RELATED டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட்...