
சென்னை: விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு சட்டம் -ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் தடுக்க உதவி ஐஜி ஒருவரை சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்து, டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். விநாயகர் சதுர்த்தி விழா நேற்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழாவை அமைதியான முறையில் கொண்டாடும் வகையில் தமிழ்நாடு காவல்துறையினர் பல்வேறு அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர். மாநிலம் முழுவதும் சென்னை உள்பட 38 மாவட்டங்களில் சிறிய சிலைகள் முதல் பெரிய சிலைகள் என 1 லட்சம் சிலைகள் வைத்து வழிபாடு நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படும் போது எந்தவித அசம்பாவிதங்களும் நடைபெறாமல் தடுக்கும் வகையில் மாநிலம் முழுவதும் 74 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அதேபோல், விநாயகர் சிலை ஊர்வலம் நிகழ்ச்சி முழுவதும் வீடியோ பதிவு செய்யப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட உள்ளது. முக்கியமான ஊர்வலங்களில் கண்காணிப்பு பணிக்காக ‘டிரோன்கள்’ மற்றும் நடமாடும் சிசிடிவி கேமராக்கள் உபயோகப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், விநாயகர் சிலைகள் நிறுவப்பட்டுள்ள இடங்கள் காவலர் செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டு ஜிபிஎஸ் உதவியுடன் ரோந்து காவலர்களால் தணிக்கை செய்யப்பட்டு வருகிறது. விநாயகர் சிலைகள் நிறுவுவதற்கு மற்றும் அவற்றினை நீர் நிலைகளில் கரைப்பதற்கும் உயர் நீதிமன்ற உத்தரவுகளை பொதுமக்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.
இந்நிலையில், தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவால் விநாயகர் சிலைகள் வைப்பதும் குறித்தும் பாதுகாப்பு தொடர்பாகவும் விதிமுறைகளை வெளியிட்டுள்ளார். முக்கிய விதிமுறைகள் விவரம் வருமாறு:
* சிலைகள் வேற்று மத வழிபாட்டு தலங்கள், மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் அருகில் நிறுவப்பட கூடாது.
* விழா அமைப்பாளர்கள் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை கொண்டு பந்தல் அமைப்பதை தவிர்த்திட வேண்டும்.
* சிலை கரைப்பு ஊர்வலம் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்கள் வழியாகவும், அனுமதிக்கப்பட்ட வாகனங்கள் மூலமாகவும் மட்டுமே எடுத்துச் செல்லப்பட வேண்டும்.
* விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டுள்ள இடங்கள் ஊர்வலம், வழித்தடங்கள் மற்றும் சிலை கரைப்பு இடங்களில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.
* விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டங்களின் போது மத துவேச கோஷங்களை எக்காரணத்தை முன்னிட்டும் எழுப்பக் கூடாது.
* ஒலிபெருக்கிகள் காலை 2 மணி நேரம் மற்றும் மாலை 2 மணி நேரம் மட்டுமே அனுமதிக்கப்படும். மேலும், கூம்பு வடிவ ஒலிபெருக்கிகள் பயன்படுத்தக்கூடாது.
* விநாயகர் சிலைகளை மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் விதிமுறைகளின்படி கரைக்க அனுமதிக்கப்படும்.
* விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பாக காவல்துறை சட்டம் -ஒழுங்கு டிஐஜி சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். விநாயகர் சதுர்த்தி தொடர்பான விளக்கங்கள் மற்றும் தகவல்களுக்கு 044- 28447701 என்ற எண்ணில் 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம்.
* விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டங்களின் போது பொதுமக்களுக்கு எவ்வித இடையூறு இல்லாமலும், சட்டம் -ஒழுங்கு பிரச்னை ஏற்படாமலும் அமைதியான முறையில் விநாயகர் சதர்த்தி விழா நடைபெற அமைப்பாளர்களுக்கு பொதுமக்களும் காவல்துறைக்கு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுகொள்ளப்படுகிறது.
The post விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு ட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் தடுக்க ஒரு உதவி ஐஜி சிறப்பு அதிகாரியாக நியமனம்: ‘டிரோன்’ மூலம் கண்காணிக்கவும் டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு appeared first on Dinakaran.