×

5 மாநில தேர்தல் முடிந்த பின்னர் தான் ‘இந்தியா’ கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு செய்யணும்!: காங்கிரஸ் காரிய கமிட்டியில் திடீர் போர்க்கொடி

ஐதராபாத்: 5 மாநில தேர்தல் முடிந்த பின்னர் தான் ‘இந்தியா’ கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் காரிய கமிட்டியில் பல தலைவர்கள் கூறியுள்ளனர். ெதலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் நேற்றும், நேற்று முன்தினமும் நடந்தது. அந்த கூட்டத்தில் ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

‘இந்தியா’ கூட்டணி கட்சிகளுடன் இணைந்து பாஜக அரசை வீழ்த்த வேண்டும் என்றும் தலைவர்கள் பேசினர். இந்நிலையில் அடுத்த சில மாதங்களில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர், தெலங்கானா, மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளதால், அந்த மாநில தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இதுகுறித்து கட்சியின் மூத்த தலைவர்கள் கூறுகையில், ‘லோக்சபா தேர்தலில் ‘இந்தியா’ கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு செய்து கொள்ளலாம். ஆனால் 5 மாநில சட்டப் பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிட வேண்டும்.

‘இந்தியா’ கூட்டணி கட்சிகளுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை நவம்பர் வரை தாமதப்படுத்தி வரவேண்டும். அதுவரை தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தக் கூடாது. ஒத்த கருத்துள்ள கட்சிகளுடன் தொகுதி பங்கீடு விசயத்தில் அவசரப்படக்கூடாது. டெல்லி, பஞ்சாப் தலைவர்கள், இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஆம் ஆத்மி கட்சிக்கு எதிராகப் பேசினர். எனவே ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் வரும் வரை காத்திருக்க வேண்டும். அதுவரை லோக்சபா தேர்தலுக்கான தொகுதி பங்கீடு குறித்து இந்தியா கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தக் கூடாது. பஞ்சாப், டெல்லி, மேற்குவங்கம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இந்தியா கூட்டணி கட்சிகளிடையே சீட் பங்கீடு தொடர்பாக கருத்து வேறுபாடுகள் உள்ளன’ என்றனர்.

The post 5 மாநில தேர்தல் முடிந்த பின்னர் தான் ‘இந்தியா’ கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு செய்யணும்!: காங்கிரஸ் காரிய கமிட்டியில் திடீர் போர்க்கொடி appeared first on Dinakaran.

Tags : India ,Congress Council ,Hyderabad ,
× RELATED தேர்தல் முடிந்த 3 மாநிலங்களில் இந்தியா...