×

நடிகை விஜயலட்சுமி 7 முறை கருச்சிதைவு செய்த விவகாரம்; இயக்குநர் சீமான் போலீஸ் அதிகாரிகள் முன்பு ஆஜர்

சென்னை: நடிகை விஜயலட்சுமியுடன் குடும்பம் நடத்தி 7 முறை கருச்சிதைவு செய்த விவகாரம் தொடர்பாக வளசரவாக்கம் காவல் நிலையத்தில் இன்று காலை 11 மணிக்கு இயக்குநர் சீமான் நேரில் ஆஜரானார். அப்போது காவல் நிலையம் முன்பு குவிந்து இருந்த நாம் தமிழர் கட்சியினர் திடீரென போலீசாரிடம் வாக்குவாதம் செய்து தடுப்புகளை மீறி உள்ளே செல்ல முயன்றதால் அங்கு சிறிது நேரம் பதற்றம் ஏற்பட்டது. நடிகை விஜயலட்சுமி இயக்குநர் சீமான் மீது கடந்த மாதம் 28ம் தேதி சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்று அளித்தார்.

அதில், இயக்குநர் சீமான் தன்னை மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டார் என்றும், சீமானுடன் கணவன் மனைவியாக வாழ்ந்து வந்ததன் பயனாக 7 முறை கருவுற்றேன். பிறகு சீமான் என்னை கட்டாயப்படுத்தி கருச்சிதைவு செய்தார். அதன் பிறகு என்னை விட்டுவிட்டு கயல்விழி என்பவரை திருமணம் செய்து கொண்டு தன்னை ஏமாற்றிவிட்டார். நான் கொடுத்த புகாரின் படி வளசரவாக்கம் போலீசார் கடந்த 2011ம் ஆண்டு சீமான் மீது கற்பழிப்பு உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அப்போது அதிமுக ஆட்சி என்பதால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதற்கிடையே இயக்குநர் சீமான், தனது கட்சியின் முக்கிய நிர்வாகியான மதுரை செல்வம் மூலம் தன்னிடம் பேச்சுவார்த்தை நடத்தி சில மாதங்கள் ரூ.50 ஆயிரம் பணம் அனுப்பியதாகவும், அதற்கு பிறகு பணம் அனுப்பவில்லை. இதுகுறித்து கேட்ட போது, மதுரை செல்வம் என்பவர் மூலம் சீமான் ஆபாச வீடியோ அனுப்பி சமூக வலைத்தளங்களில் பரப்பிவிடுவதாக மிரட்டி வருவதாக புகார் அளித்திருந்தார். அந்த புகாரின் மீது விஜயலட்சுமியிடம் வளசரவாக்கம் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர். பிறகு 164 சட்டப்பிரிவின் படி நடிகை விஜயலட்சுமியை போலீசார், திருவள்ளூர் மாவட்ட மகளிர் நீதிமன்ற கூடுதல் நீதிபதி பவித்ரா முன்பு ஆஜர்படுத்தினர்.

அப்போது நடிகை விஜயலட்சுமி 3 மணி நேரம் தான் சீமானுடன் வாழ்ந்ததற்கான ஆவணங்களை சமர்ப்பித்து வாக்குமூலம் அளித்தார். அதைதொடர்ந்து இயக்குநர் சீமானுக்கு வளசரவாக்கம் அனைத்து மகளிர் போலீசார் விளக்கம் கேட்டு இயக்குநர் சீமான் நேரில் ஆஜராக கடந்த வாரம் சம்மன் அனுப்பினர். அப்போது வழக்கு ஒன்றில் ஆஜராக உள்ளதால் கடந்த 12ம் தேதி நேரில் ஆஜராகுவதாக சீமான் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. ஆனால் அதன்படி சீமான் அன்று வளசரவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆஜராகவில்லை. அவருக்கு பதில் அவரது வழக்கறிஞர் சங்கர் விசாரணை அதிகாரி ராஜலட்சுமி முன்பு ஆஜராகி சீமான் வராதது குறித்து விளக்கம் அளித்திருந்தார்.

பின்னர் இயக்குநர் சீமான் நேரில் ஆஜராகாததால் வழக்கு தொடர்பாக போலீசார் சட்ட நிபுணர்களுடன் அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசனை நடத்தினர். அந்த ஆலோசனையை தொடர்ந்து, வளசரவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையம் சார்பில் கடைசி வாய்ப்பாக மீண்டும் 2வது முறையாக இயக்குநர் சீமான் கடந்த 15ம் தேதி காலை 10 மணிக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று, சிறப்பு உதவி ஆய்வாளர் கோபி நீலாங்கரை சந்தீப் அவென்யூ பகுதியில் வசித்து வரும் இயக்குநர் சீமான் வீட்டில், அவரிடம் சம்மன் வழங்கினார். அந்த சம்மனை சீமான் தரப்பு பெற்றுகொண்டனர். பிறகு ஏற்கனவே திட்டமிட்ட கட்சி பணிகள் இருப்பதால் நாளை நேரில் ஆஜராக முடியாது என்றும், எனவே, வரும் 18ம் தேதி காலை 11 மணிக்கு நேரில் ஆஜராவதாக சீமான் தரப்பி தெரிவிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து திடீரென சீமான் மீது கொடுத்த வழக்கை கடந்த வெள்ளிக்கிழமை இரவு நடிகை விஜயலட்சுமி வளசரவாக்கம் காவல் நிலையத்திற்கு ெசன்று கடிதம் மூலம் திரும்ப பெறுவதாக மனு அளித்தார். அதை தொடர்ந்து ஏற்கனவே வளசரவாக்கம் போலீசார் அளித்த சம்மன் படி இன்று காலை 11 மணிக்கு சீமான் தனது மனைவி கயல்விழியுடன் நேரில் ஆஜரானார். சீமான் காவல் நிலையம் வருவதால் அவரது கட்சியை சேர்ந்த 500க்கும் மேற்பட்டவர்கள் குவிந்தனர். பின்னர் காவல் நிலையத்திற்கு சீமான் அவரது மனைவியுடன் வந்தார். அப்போது கூடியிருந்த நாம் தமிழர்கட்சியினர் கோஷம் எழுப்பியபடி காவல்நியைத்தை முற்றுகையிட்டனர்.

இதனால் அங்கு சிறிது நேரம் பதற்றம் நிலவியது. அப்போது உதவி கமிஷனர் கவுதம் தலைமையிலான போலீசார் தடுப்புகள் அமைத்து நாம் தமிழர் கட்சி தொண்டர்களை சிறிது தொலைவிலேயே தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருக்கும், நாம் தமிழர் கட்சியினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. அப்போது அங்கு பற்றமான நிலை ஏற்பட்டதால் நிலைமையை உணர்ந்த சீமான் தனது ெதாண்டர்களை கட்டுப்படுத்தினார். அதைதொடர்ந்து தனது மனைவியுடன் சீமான் விசாரணை அதிகாரியான இன்ஸ்பெக்டர் ராஜலட்சுமி முன்பு ஆஜராகி விளக்கம் அளித்தார்.

The post நடிகை விஜயலட்சுமி 7 முறை கருச்சிதைவு செய்த விவகாரம்; இயக்குநர் சீமான் போலீஸ் அதிகாரிகள் முன்பு ஆஜர் appeared first on Dinakaran.

Tags : Vijayalakshmi ,Seeman Police ,Ajar ,Chennai ,Cultivaravakam Com Station ,Seeman Police Officers ,
× RELATED மார்க் ஆண்டனி படத்திற்காக மும்பை சிபிஐ அலுவலகத்தில் நடிகர் விஷால் ஆஜர்..!!