×

சேலத்தில் மகளின் காதலுக்கு உடந்தையாக இருந்த பாஜ மகளிரணி நிர்வாகி கழுத்தறுத்து கொலை: கொழுந்தனுக்கு வலை

சேலம்: சேலத்தில் மகளின் காதலுக்கு உடந்தையாக இருந்த அண்ணியை கழுத்தறுத்து கொலை செய்து விட்டு தப்பியோடிய கொழுந்தனை போலீசார் தேடி வருகின்றனர். சேலம் அன்னதானப்பட்டி மாரியம்மன் கோயில் பகுதியை சேர்ந்தவர் கண்ணன் (45). அஸ்தம்பட்டி பகுதியில் சலூன் கடை வைத்துள்ளார். இவரது மனைவி சாந்தி (40), பாஜ மகளிர் அணி சேலம் மாவட்ட செயற்குழு உறுப்பினராக இருந்தார். இவர், சேலம் மாநகராட்சி தேர்தலில் 48வது டிவிஷனில் கவுன்சிலர் பதவிக்கு பாஜ சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர். கண்ணனின் தம்பி கருணாநிதி (37). இவர், அண்ணன் கண்ணன் சலூன் கடையில் வேலை பார்த்து வருகிறார். கருணாநிதியின் மகள் ராஜேஸ்வரி (19). இவரும் அன்னதானப்பட்டி பகுதியை சேர்ந்த மோகன்லால் என்பவரும் காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் கடந்த 13ம் தேதி ராஜேஸ்வரியும், மோகன்லாலும் திருமணம் செய்து கொண்டனர். இதையறிந்த ராஜேஸ்வரியின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து கண்டித்தனர். இதனால் இருவரும் சேலம் அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் கடந்த வாரம் தஞ்சமடைந்தனர். பிறகு கருணாநிதி மற்றும் உறவினர்களை காவல் நிலையத்திற்கு போலீசார் வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, காதலன் மோகன்லாலுடன் செல்வேன் என ராஜேஸ்வரி, கூறியதால் அவருடன் அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், ராஜேஸ்வரி, காதலன் மோகன்லால் ஆகியோர் நேற்றிரவு கண்ணனின் வீட்டிற்கு வந்துள்ளனர். இதையறிந்த கருணாநிதி ஆத்திரமடைந்தார். ராஜேஸ்வரி காதல் திருமணம் செய்ததற்கு அண்ணி சாந்தி தான் காரணம் என்றும், தற்போது கண்ணனின் வீட்டிற்கு மகள், திருமணம் செய்து கொண்ட வாலிபருடன் வந்துள்ளதாலும் கருணாநிதி மிகுந்த கோபம் அடைந்ததாக கூறப்படுகிறது. பின்னர் கருணாநிதி, கண்ணனின் வீட்டிற்கு வந்து ராஜேஸ்வரி மற்றும் சாந்தியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

தகராறு முற்றிய நிலையில் ஆத்திரத்தில் அங்கிருந்த கத்தியை எடுத்து சாந்தியின் கழுத்தை அறுத்து விட்டு தப்பினார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த சாந்தியை அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் இறந்து விட்டார். தகவலறிந்த அன்னதானப்பட்டி போலீசார் விரைந்து வந்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தினார். மேலும் போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி, தலைமறைவான கருணாநிதியை கைது செய்ய தனிப்படை அமைத்தார். அந்த தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post சேலத்தில் மகளின் காதலுக்கு உடந்தையாக இருந்த பாஜ மகளிரணி நிர்வாகி கழுத்தறுத்து கொலை: கொழுந்தனுக்கு வலை appeared first on Dinakaran.

Tags : Salem ,Baja ,Kolundan ,
× RELATED சேலம் மேச்சேரியில் யானைகள்...