×

இபிஎஸ் டெண்டர் முறைகேடு: ஒரு வாரத்தில் விசாரிக்கப்படும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு

டெல்லி: கடந்த அதிமுக ஆட்சியின்போது நெடுஞ்சாலைத் துறையில் டெண்டர் கோரியதில் ரூ.4,800 கோடி அளவிற்கு முறைகேடு நடந்துள்ளதாக முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அளித்த புகார் மீது சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து விசாரிக்க உத்தரவிடக்கோரி திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இவ்வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ‘’முறைகேடு நடைபெற்றதற்கான முகாந்திரம் இல்லை. இந்த முறைகேடு புகார் குறித்து சிபிஐவிசாரணை நடத்தும்படி கடந்த 2018ம் ஆண்டு உத்தரவிட்டது.

இதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த மேல்முறையீடு வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ‘’உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ததுடன் வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் மீண்டும் விசாரித்து முடிவெடுக்க வேண்டுமென உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி மீதான ரூ.4,800 கோடி டெண்டர் முறைகேடு விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் அனிருத்தா போஸ், பி.எம்.திரிவேதி ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் கபில் சிபல், அமித் ஆணந்த் திவாரி, ஜோசப் அரிஸ்டாட்டில் ஆகியோர், “எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது அவரது உறவினர்களுக்கு டெண்டர் வழங்கி முறைகேடு செய்துள்ளார். அப்போது லஞ்ச ஒழிப்புத்துறை அவரது கைவசம் இருந்ததால் இதுதொடர்பான வழக்கை விசாரிக்காமல் கிடப்பில் போடப்பட்டது. அதனால் எடப்பாடி பழனிசாமி தொடர்பான டெண்டர் முறைகேடு வழக்கை விரிவாக விசாரித்து உச்ச நீதிமன்றம் ஒரு உத்தரவை பிறப்பிக்க வேண்டும்’’ என்றனர்.

எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அரிமா சுந்தரம், “ஏற்கனவே இதே வழக்கில் திமுக சார்பாக மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜராகி இருந்தார். அப்படி இருக்கும்போது தற்போது தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை சார்பாக ஆஜராக எப்படி அனுமதிக்க முடியும்? அதனை ஏற்க முடியாது’ என்றார். இதையடுத்து இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ‘’எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் முறைகேடு வழக்கை ஒரு வாரத்தில் மீண்டும் பட்டியலிட்டு விரிவாக விசாரிக்கிறோம்’ என்றனர். உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவால் ரூ.4,800 கோடி டெண்டர் முறைகேடு தொடர்பாக எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறையின் மேல்முறையீட்டு வழக்கை விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது உறுதியாகி உள்ளது.

The post இபிஎஸ் டெண்டர் முறைகேடு: ஒரு வாரத்தில் விசாரிக்கப்படும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Delhi ,Chief Minister ,Dinakaran ,
× RELATED நாங்கள் உத்தரவு பிறப்பிக்க வேண்டுமா?.....