
ஐதராபாத்: ‘ஒன்றியத்தில் ஆட்சி மாற்றத்தை மக்கள் விரும்புகிறார்கள். இதற்கான தேர்தலை சந்திக்க காங்கிரஸ் தயாராக உள்ளது’’ என காங்கிரஸ் கட்சியின் விரிவான காரிய கமிட்டி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் 2 நாள் காரிய கமிட்டி கூட்டம் ஐதராபாத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் நாள் கூட்டத்தில், ‘மக்களை பிளவுபடுத்தும் அரசியலில் இருந்து நாட்டை விடுவிக்கவும், மக்களை புரிந்து கொள்ளும், பொறுப்பேற்கும் அரசை பெறுவதை உறுதி செய்வதற்கும், இந்தியா கூட்டணியை வெற்றிக் கூட்டணியாக்கும்’ என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து, 2வது மற்றும் கடைசி நாளான நேற்று விரிவான காரிய கமிட்டி கூட்டம் நடந்தது.
இதில் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவர் சோனியா, முன்னாள் தலைவர் ராகுல், பொதுச் செயலாளர் பிரியங்கா உள்ளிட்ட காரிய கமிட்டி உறுப்பினர்கள் மட்டுமின்றி, கட்சியின் மாநில தலைவர்கள், சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில், இந்த ஆண்டு இறுதியில் நடக்க உள்ள தெலங்கானா, ராஜஸ்தான், சட்டீஸ்கர், மத்தியபிரதேசம், மிசோரம் மாநில சட்டப்பேரவை தேர்தல் குறித்து விவாதிக்கப்பட்டது. அம்மாநில தலைவர்கள் தேர்தல் வியூகம் மற்றும் முன்னேற்பாடுகள் குறித்த விரிவான அறிக்கையை சமர்ப்பித்தனர். மேலும், 2024 மக்களவை தேர்தலுக்கான கட்சியின் தயார்நிலை குறித்தும் விவாதிக்கப்பட்டது. அப்போது பேசிய கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ‘‘ஓய்வு தடைசெய்யப்பட்டுள்ளது என்ற நேருவின் வார்த்தைகளின்படி, ஜனநாயகத்தையும் அரசியலமைப்பையும் பாதுகாக்க அனைவரும் உழைக்க வேண்டும். பாஜ அரசு அடிப்படைப் பிரச்னைகளில் இருந்து மக்களின் கவனத்தைத் திசை திருப்புகிறது. இதுபோன்ற கவனச்சிதறல்களிலிருந்து விலகி உண்மையான பிரச்னைகளில் கட்சித் தலைவர்கள் கவனம் செலுத்த வேண்டும். அடுத்து வரும் 5 மாநில தேர்தல் மற்றும் மக்களவை தேர்தலில் பாஜவை தோற்கடிக்கும் இலக்கை நோக்கி ஓய்வின்றி உழைக்க வேண்டும்’’ என்றார்.
இதைத் தொடர்ந்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், ‘விரைவில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் சட்டீஸ்கர், மத்தியப் பிரதேசம், மிசோரம், ராஜஸ்தான் மற்றும் தெலங்கானா மக்களிடம் இருந்து காங்கிரஸ் தீர்க்கமான வெற்றியை பெறும் என நம்பிக்கை கொண்டுள்ளோம். தேர்தலை சந்திக்க காங்கிரஸ் முழுமையாக தயாராக உள்ளது. நாட்டு மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர். சட்டம், ஒழுங்கு, சுதந்திரம், சமூக மற்றும் பொருளாதார நீதி, சமத்துவம் பற்றிய அவர்களின் எதிர்பார்ப்புகளை நாங்கள் நிறைவேற்றுவோம்’ என கூறப்பட்டுள்ளது.
* தெலங்கானா மக்களுக்கு 6 தேர்தல் வாக்குறுதி
காரிய கமிட்டி கூட்டத்தைத் தொடர்ந்து, துக்குகுடாவில் காங்கிரசின் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடந்தது. இதில் பேசிய, கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, தெலங்கானா சட்டப்பேரவைக்கான காங்கிரசின் 6 தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்தார்.
* மகாலட்சுமி திட்டத்தின் கீழ் தெலங்கானா பெண்களுக்கு மாதம் ரூ.2,500 நிதி உதவி, மாநிலம் முழுவதும் அரசு நகர பேருந்துகளில் இலவச பயணம் மற்றும் ரூ.500க்கு காஸ் சிலிண்டர் வழங்கப்படும்.
* விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.15,000 நிதி உதவி
* மாணவர்களுக்கு ரூ.5 லட்சம் கல்வி உதவித் தொகை
* வீடில்லாதவர்களுக்கு வீட்டு மனை மற்றும் ரூ.5 லட்சம் நிதி உதவி
* அனைத்து வீடுகளுக்கும் 200 யூனிட் இலவச மின்சாரம்
* முதியோருக்கு மாதம் ரூ.4000 ஓய்வூதியம். வாக்குறுதிகளை அறிவித்து பேசிய சோனியா, ‘‘இந்த 6 வாக்குறுதிகளையும் நாங்கள் நிச்சயம் நிறைவேற்றுவோம். தெலங்கானா மாநிலம் உதயமாவதில் ஒரு அங்கமாக இருப்பதற்கான வாய்ப்பு கிடைத்த எங்களுக்கு, இப்போது மாநிலத்தை புதிய உச்சத்திற்கு உயர்த்தும் கடமையும் வந்துள்ளது. சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்காகவும் உழைக்கும் காங்கிரஸ் ஆட்சி தெலங்கானாவில் அமைய வேண்டும் என்பது எனது கனவு’’ என்றார்.
* பாஜ வலையில் சிக்க வேண்டாம்
நேற்று நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் ஊடகம் மற்றும் விளம்பரத் துறைத் தலைவர் பவன் கேரா, ‘‘காரிய கமிட்டியில் நேற்று முன்தினம் பேசிய ராகுல் காந்தி, கட்சி தலைவர்கள் அனைவரும் சித்தாந்தத் தெளிவைக் கொண்டிருக்க வேண்டியதன் அவசியத்தை குறிப்பிட்டார். பாஜவின் பொறியில் சிக்கிக் கொள்ளாமல் இருக்க வேண்டுமென எச்சரித்த ராகுல், சாமானிய மக்களின் பிரச்னையில் கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தினார்’’ என்றார்.
The post ஒன்றியத்தில் ஆட்சி மாற்றத்தை மக்கள் விரும்புகிறார்கள் தேர்தலை சந்திக்க காங்கிரஸ் தயார்: காரிய கமிட்டி கூட்டத்தில் தீர்மானம் appeared first on Dinakaran.