×

காஷ்மீர்: தீவிரவாதிகளுக்கு எதிரான ராணுவ வேட்டை 5வது நாளாக நீடிப்பு

அனந்தநாக்: காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள கடோலி வன பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து,கடந்த 13ம் தேதி ராணுவம், போலீஸ் படை அங்கு விரைந்தது. தீவிரவாதிகளின் மறைவிடத்தை நெருங்கிய போது பாதுகாப்பு படையினரை நோக்கி தீவிரவாதிகள் துப்பாக்கிசூடு நடத்தினர். தீவிரவாதிகளுக்கும்,பாதுகாப்பு படைக்கும் இடையே நடந்த பயங்கர சண்டையில் 2 ராணுவ அதிகாரிகள், ஒரு டிஎஸ்பி ஆகியோர் வீரமரணமடைந்தனர். மேலும் 2 வீரர்கள் படுகாயமடைந்தனர்.இன்னொருவர் மாயமானார்.

வன பகுதியில் மறைந்து இருந்து தீவிரவாதிகள் துப்பாக்கிசூடு நடத்தியதால் பலியான அதிகாரிகளின் உடல்களை மீட்டு வருவதற்கு ராணுவத்துக்கு கடும் சவால் ஏற்பட்டது. மறைவிடத்தில் பதுங்கி கொண்டு தாக்குதல் நடத்தும் தீவிரவாதிகளை பிடிக்க ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் கடோலி பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர். தீவிரவாதிகளின் மறைவிடத்தை நோக்கி மோர்ட்டார்கள் குண்டுகள்,ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. தீவிரவாதிகளை பிடிக்க டிரோன்களும் பயன்படுத்தப்பட்டன. நேற்றுமுன்தினம் பலத்த மழை பெய்ததால் தேடுதல் வேட்டை நிறுத்தப்பட்டது. நேற்றுடன் 5 நாட்கள் ஆன நிலையில் தீவிரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். மறைந்து இருந்து தாக்குதல் நடத்தும் 3 தீவிரவாதிகளை என்கவுன்டரில் சுட்டு வீழ்த்துவதற்கான நடவடிக்கையில் பாதுகாப்பு படை தீவிரம் காட்டி வருகிறது.

 

The post காஷ்மீர்: தீவிரவாதிகளுக்கு எதிரான ராணுவ வேட்டை 5வது நாளாக நீடிப்பு appeared first on Dinakaran.

Tags : Kashmir ,Anantnag ,Kadoli ,Dinakaran ,
× RELATED காஷ்மீரில் பேருந்து மீது தீவிரவாத தாக்குதல்: 10 பேர் பலி