இம்பால்: மணிப்பூரில் ராணுவ வீரரை கடத்திச்சென்ற மர்ம நபர்கள் அவரை சுட்டு கொன்று சடலத்தை வீசிச்சென்றுள்ளனர். மணிப்பூர் இம்பால் கிழக்கு மாவட்டத்தின் குனிங்தேக் கிராமத்தில் ஒரு சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற அவர்கள் சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். பின்னர் போலீஸ் விசாரணையில் சுட்டு கொல்லப்பட்டவர் ராணுவ பாதுகாப்பு படைப்பிரிவில் சிப்பாயாக பணியாற்றிய செர்ட்டோ தாங்தாங் காம் என்று தெரிய வந்தது. அவர் மேற்கு இம்பால் தாரங் பகுதியை சேர்ந்தவர்.
விடுமுறையில் வீட்டுக்கு சென்றிருந்த சிப்பாய் காம் நேற்று முன் தினம் காலை வீட்டில் ஓய்வாக இருந்தபோது, அடையாளம் தெரியாத மூவர் வீட்டுக்குள் நுழைந்து அவரது நெற்றிப்பொட்டில் கைத்துப்பாக்கியை வைத்து வலுக்கட்டாயமாக ஒரு வாகனத்தில் அழைத்து சென்றுள்ளனர். அப்போது வெளியில் இருந்த அந்த சிப்பாயின் 10 வயது மகன் அதை பார்த்துள்ளான். கடத்தல் சம்பவத்தை நேரில் பார்த்த ஒரே சாட்சி அந்த சிறுவன் தான். அதன் பின் நேற்று காலை அவர் சடலமாக மீட்கப்பட்டார். அவரது மகனிடம் போலீசார் மேலும் விசாரித்து குற்றவாளிகளை பிடிக்க தீவிரமாக முயன்று வருகின்றனர்.
The post மணிப்பூரில் ராணுவ வீரர் கடத்தி கொலை appeared first on Dinakaran.
