×

இலைகட்சியினரின் வற்புறுத்தலுக்கு பயந்து தலைமறைவாகும் மாஜி அமைச்சரை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘இ லை கட்சியின் மாஜி அமைச்சரு எந்த விஷயத்துகாக திணறுகிறாராம்…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘தூங்காநகர் மாவட்டத்தில் மதுவை நினைவுபடுத்தும் ஊரின் இலை கட்சி ஒன்றியச் செயலாளர் சமீபத்தில் மறைந்தாராம். எனவே, புதிய ஒன்றியச் செயலாளரை தேர்வு செய்யமுடியாமல் முன்னாள் அமைச்சர் உதயமானவர் திணறுகிறாராம். பல ஆண்டுகளாக ஒன்றியமாக இருந்து மறைந்த காக்கும் கடவுளின் பெயரை கொண்டவரின் வாரிசுகள், அந்த பதவி தங்களுக்கே வேண்டும் எனக் கேட்டு மாஜியை திணறடித்து வருகிறார்களாம். மேலும் ஒன்றியத்தை 2 ஆக பிரிக்கவேண்டும் என இலை கட்சியின் மூத்த நிர்வாகிகள் குரல் கொடுக்கவே பிரச்னை தலைமை வரையில் சென்றுவிட்டதாம். பேசாமல் ஒன்றியத்தினை மூன்றாக பிரித்து இலை கட்சியின் முக்கிய நிர்வாகிகளை சமாளித்துவிடலாம் என மாஜி அமைச்சருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளார்களாம். ஒரு ஒன்றியத்தையே சமாளிக்க முடியாமல் மாஜி அமைச்சர் திணறுவதை பார்த்து, இலை கட்சி தொண்டர்கள் சிரிக்கிறாங்களாம்… சில நாட்கள் இலை கோஷ்டியினர் வருவதை கேள்விப்பட்டு தலைமறைவாகி விடுகிறாராம்…’’ என்றார் விக்கியானந்தா.

‘‘யானை வரும் பின்னே..மணியோசை வரும் முன்னே என்ற பழமொழியை வெயிலூர்ல ஒரு அரசியல்வாதி உண்மையாக்கி வருகிறாராமே, அப்படியா…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.‘‘தமிழ்நாட்டில் இலை கட்சி கூட்டணியில் யாருக்கு எந்த தொகுதி என்பதே இன்னும் முடிவாகவில்லை. ஆனால் வெயிலூர் மக்களவை தொகுதியில இந்த முறை மீண்டும் தாமரை சார்பில மூன்று எழுத்து பெயர் கொண்டவர் போட்டியிட முடிவு செய்துள்ளாராம். இதற்காக கடந்த சில நாட்களாக வெயிலூரில் முகாமிட்டு கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தி… தொகுதியில் கூட்டங்கள் நடத்தி தேர்தல் பணியை தொடங்கிட்டாராம். இது இலை கட்சிக்காரங்களுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்காம். ஏற்கனவே தாமரை கட்சியோட 4ம் ஆண்டு சாதனை கூட்டத்தில மூன்று எழுத்து பெயர் கொண்டவர் கலந்துகிட்டாராம். அப்போது அவர் பேசும்போது, கடந்த தேர்தலில் நான் தோற்றதற்கு இலை கட்சியினர்தான் காரணம்னு பகிரங்கமாகவே குற்றச்சாட்டை வச்சாராம். குறிப்பா மணியான நான்கு எழுத்து மாஜி அமைச்சர வறுத்தெடுத்துட்டாராம். இதனால அவரு மீண்டும் போட்டியிட்டா எப்படி தேர்தல் பணி செய்வது… இப்படிேய பேசிக்கொண்டிருந்தால் எப்படி இலை கட்சிக்காரன் வேலை செய்வான்னு தங்களோட அதிருப்திய வெளிப்படுத்தி வர்றாங்களாம். அதோட இலை கட்சியில உள்ள முக்கிய நிர்வாகிகளும் போட்டியிட சீட் கேட்டு காய் நகர்த்தி வர்றாங்களாம்… ஆனால் தாமரை கட்சி வெயிலூர்ல நமக்குதான் சீட் என மார்தட்டி வருகிறதாம்…’’ என்றார் விக்கியானந்தா.

‘‘பெட்டிஷன்தாரர்களிடம் கட்டாய வசூல் செய்யும் காக்கி அதிகாரி யாரு…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘புதுக்கோட்டை நகர் பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் முருகன் பெயர் கொண்ட காக்கி அதிகாரி இருக்கிறாராம். அவர், காவல் நிலையத்துக்கு பெட்டிஷனோடு வரும் புகார்தாரர்களுக்கு ஆதரவாக நடவடிக்கை எடுக்காமல் எதிர் மனுதாரர்களிடம் ‘விட்டமின் ப’ வாங்கி கொண்டு பெட்டிஷனை கிழித்து போட்டுவிடுவதாக ஏகப்பட்ட புகார்கள் மலைபோல குவிந்துள்ளதாம். அப்புறம், தனக்கு கீழ் பணியாற்றி வரும் சக காக்கிகளையும் ஆபாச வார்த்தைகளால் மிரட்டி வருவதாக மாவட்ட உயரதிகாரியின் கவனத்துக்கு பாதிக்கப்பட்ட காக்கிகள் மூலம் தகவல் கொண்டு செல்லப்பட்டதாம். இதனையடுத்து அந்த காக்கி அதிகாரி, மன்னர் மாவட்டத்தின் நகர் பகுதியில் இருந்து மலைக்கோட்டை மாவட்டம் செல்லும் வழியில் உள்ள காவல் நிலையத்திற்கு சில தினங்களுக்கு முன் தூக்கியடிக்கப்பட்டாராம். அங்கேயும் சென்ற அந்த காக்கி அதிகாரி புகார்தாரர் மனுதாரர்களிடம் கட்டாய வசூல் வேட்டையில் இறங்கியுள்ளாராம். திருந்தாத அந்த காக்கி அதிகாரியை ஆயுதப்படைக்கு அதிரடியாக தூக்கி அடிசுட்டாங்களாம்…’’ என்றார் விக்கியானந்தா.

‘‘ குடிக்கும் தண்ணீர் ‘கவனிப்பு’ குறித்த அரசியலை சொல்லுங்களேன்…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘கோவை மாவட்டத்தில் உள்ள குடிநீர் வாரியத்தில் ஒரு வருஷத்துக்கான குடிநீர் பராமரிப்பு பணிக்காக ஒப்பந்தம் விட்டாங்க. ஆனால் விதிமுறைகளை காற்றில் பறக்கவிட்ட அதிகாரிகள் ஓராண்டுக்கு பதிலாக திட்டத்தை 3 ஆண்டுகளாக மாற்றிட்டாங்களாம். ஆனால், ஒப்பந்தத்தை இதுவரை இறுதி செய்யலையாம். ஏற்கனவே யாரு பராமரிப்பு பணி செஞ்சாங்களோ அவுங்க தொடர்ந்து பணி செய்றாங்க. பில் போடறது, செலவு கணக்கு காட்டுறதுல ஏகப்பட்ட தில்லுமுல்லு நடக்குதாம். பராமரிப்பு பணி செய்யற ஒப்பந்தக்காரங்க தொழிலாளர்களுக்கு தர்ற கூலிய கூட முழுசா தர்றதில்லையாம். அதிலும் பங்கு போட்டு கொள்ளையடிக்கிறாங்க. இந்த விஷயம் நகரத்தில் உள்ள தொழிலாளர்களுக்கு நன்றாகவே தெரியுமாம். தொழிலாளர் சங்கத்துல இருந்து புகார் தந்தாங்களாம். அந்த புகாரும் குப்பைக்கு போயிடுச்சாம். 3 ஆண்டு ஒப்பந்த விவகாரம் முடங்கி போனதாலதான், வாரியத்தில ஏகப்பட்ட குழப்பம் இருக்காம். தன்னிச்சையாக இதுபோல ஓராண்டை 3 ஆண்டாக மாற்றியது செல்லுபடியாகுமா என்று இப்போதுதான் அதிகாரிகள் ரூம் போட்டு யோசிக்கிறாங்களாம். பில்லூர், சிறுவாணி, ஆழியாறு என மொத்த குடிநீர் திட்ட பராமரிப்பு பணியும் இலை கட்சி காண்டிராக்டர்கள் கிட்டதான் இருக்குது. இவுங்கள மீறி கோவையில ஒரு சொட்டு தண்ணீர்கூட சப்ளையாகாதாம். ஒப்பந்தம் போடாம ேவலை செய்ய யாரு அனுமதி கொடுத்தாங்க என்ற கேள்வி நியாயமான அதிகாரிகளை குடைந்தெடுக்குதாம். ஆனால் பதில் சொல்ல தான் ஆட்கள் இல்லையாம்…’’ என்றார் விக்கியானந்தா.

‘‘தொகுதியில் எதுவுமே செய்யாமல், பழைய பாசத்தை காட்டி புது தொகுதி மக்களை ஏமாற்றும் இலை கட்சியின் மக்கள் பிரதிநிதியை பற்றி சொல்லுங்க…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.‘‘குமரி மேற்கு மாவட்டம் குலசேகரம் சந்தை சந்திப்பில் இலை கட்சியின் பொதுக்கூட்டம் நடந்ததாம். அதில் பேசிய இலை கட்சியை சேர்ந்த குமரியின் மக்கள் பிரதிநிதியான தளபதி என்ற பெயரை கொண்டவர், வரும் சட்டமன்ற தேர்தலில் நான் பத்மநாபபுரம் தொகுதியில் போட்டியிடுவேன் என்று கூறி தொண்டர்களை அலற வைத்தாராம். குமரி தொகுதியில் நம்பிக்கை இழக்கவில்லை. பத்மநாபபுரம் தொகுதி ஏற்கனவே இலை கட்சி வென்ற தொகுதி. இங்குள்ள தொண்டர்களை உற்சாகப்படுத்த வேண்டும்…’’ என்றார் விக்கியானந்தா.

The post இலைகட்சியினரின் வற்புறுத்தலுக்கு பயந்து தலைமறைவாகும் மாஜி அமைச்சரை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : Laikites ,Maji Minister ,wiki Yananda ,Maji ,Lai Party ,Peter Uncle ,Champagne ,Dunganagar district ,wiki ,Yananda ,
× RELATED மாஜி அமைச்சர் ஜெயக்குமார் அளித்த...