×

ஜெயலலிதாவை தொடர்ந்து அண்ணா குறித்து சர்ச்சை: அதிமுக-பாஜ கடும் மோதல்

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் பிளவு ஏற்பட்டு எடப்பாடி, ஓபிஎஸ், சசிகலா, டிடிவி.தினகரன் என்று பல அணிகளாக செயல்பட்டனர். இதை பயன்படுத்திய பாஜ மேலிடம் அவர்களின் மேல் உள்ள ஊழல் வழக்குகளை காட்டி மிரட்டி தங்கள் எடுக்கும் முடிவுக்கு பணிய வைத்து வருகிறது. இருப்பினும், தேர்தல் நேரங்களில் கூட்டணி விவகாரம் தொடர்பாக பேச்சு எடுக்கும்போதெல்லாம் அதிமுக-பாஜ தலைவர்கள் மோதி கொள்வது வாடிக்கையாக உள்ளது. தமிழக பாஜ தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றது முதல் அதிமுக கூட்டணி வேண்டாம் என்பது போல பேசத்தொடங்கினார். அண்ணாமலையும், எடப்பாடி பழனிசாமியும் கொங்கு மண்டலத்தை சேர்ந்தவர்கள் என்பதால் யாருக்கு செல்வாக்கு அதிகம் என்று காட்டுவதற்காக மறைமுகமாக கட்சியை வைத்து தனிநபர் மோதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஒரு கட்டத்தில் ‘ஜெயலலிதாதான் மிகப்பெரிய ஊழல் முதல்வர். ஜெயலலிதாவைவிட என் மனைவி வலிமையானவர்’ என்று அண்ணாமலை விமர்சனம் செய்ய, அதிமுகவினர் பொங்கி எழுந்தனர். அண்ணாமலையை அடக்கி வைக்காவிட்டால் பாஜவுடன் கூட்டணி கிடையாது என்று மாஜி அமைச்சர்கள் ஆவேசமாக பேட்டியளித்தனர். இதையடுத்து அண்ணாமலையை கூப்பிட்டு டோஸ்விட்ட அமித்ஷா, எடப்பாடியுடன் இணைக்கமாக செல்ல அறிவுறுத்தினார். அதன்பின் அதிமுகவை பற்றி பேசாமல் இருந்த அண்ணாமலை சமீபத்தில் அண்ணாவைப் பற்றி அவதூறாக பேசியதால் மீண்டும் மோதல் தொடங்கியது. இதற்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ‘மறைந்த தலைவர்கள் பற்றி இழிவாக பேசுவதா? அண்ணாமலை இதோடு நிறுத்தி கொள்ள வேண்டும்’ என்று கண்டனம் தெரிவித்தார். ஒருபடி மேலே போய் செல்லூர் ராஜூ, ‘அண்ணாவைப்பற்றி அவதூறாக பேசுபவர்கள் நாக்கு வெட்டப்படும்’ என்று கடுமையாக எச்சரித்தார். இந்நிலையில் முன்னாள் அமைச்சரும் எம்பியுமான சி.வி.சண்முகம், ‘அண்ணாமலை வசூல் யாத்திரை நடத்துகிறார். இதுதான் அவருக்கு இறுதி எச்சரிக்கை’ என்று கடுமையாக சாடியுள்ளார். இதற்கு பதிலடியாக அண்ணாமலையும் அதிமுக மாஜி அமைச்சர்கள்தான் வசூல் வேட்டை நடத்தினார்கள் என்று கூறினர். இதனால் அதிமுக- பாஜ மோதல் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது.

The post ஜெயலலிதாவை தொடர்ந்து அண்ணா குறித்து சர்ச்சை: அதிமுக-பாஜ கடும் மோதல் appeared first on Dinakaran.

Tags : AIADMK ,BJP ,Jayalalitha ,Edappadi ,OPS ,Sasikala ,DTV.Thinakaran ,Anna ,Jayalalithaa ,Dinakaran ,
× RELATED இன்னும் மூன்று மாதங்களில் அதிமுக...