×

வேறு அரசியல் கட்சியில் சேர மாட்டேன்: டி.ராஜேந்தர் பேச்சு

 

சென்னை: சென்னை கிழக்கு மாவட்டம் அம்பத்தூர் தெற்கு பகுதி திமுக சார்பில், கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் பாடி யாதவா தெருவில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, திரைப்பட இயக்குனர் டி.ராஜேந்தர் உள்பட பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் திரைப்பட இயக்குனார் டி.ராஜேந்தர் பேசியதாவது: திமுக தான் என் வாழ்க்கை லட்சியம் என்று வாழ்ந்தேன், அதனால்தான் லட்சிய திமுக ஆரம்பித்தேன். யாரிடம் எப்படி இருக்க வேண்டும் என்ற பண்பை கற்றுத் தந்தவர் தலைவர் கலைஞர் தான். குறைகள் எல்லாம் நீங்கி கலைஞரிடம் அதிக நிறைகள் பார்த்திருக்கிறேன். என் வாழ்க்கையில் பார்த்த நிறைகுடம் கலைஞர். அரசியல்வாதி தாண்டி நான் ஆன்மீகவாதி, கடவுள் நம்பிக்கை உள்ளவன். என் பார்வையில் கலைஞர் என்றும் சித்தர் தான். கவிஞன் சூரியனை, நிலாவை வேறு பார்வையில் பார்ப்பான் அதுபோன்று நான் கலைஞரை சித்தர் பார்வையில் பார்க்கிறேன். அடுத்தவர் நம்பிக்கைகளில் குறுக்கிடாதவர் கலைஞர்.

என் தாய் எனக்கு அண்ணாவையும், கலைஞரையும் காட்டிதான் வளர்த்தார். கலைஞர்தான் என் அரசியல் வழிகாட்டி. திமுகவில் இருந்து விலகி இருந்தாலும் வேறு எந்த கட்சியிலும் சேர மாட்டேன், கொடி பிடிக்க மாட்டேன்.
கலைஞர் தான் என்னை உருவாக்கினார். கலைஞர் எனக்கு தாயுமானவன், தந்தையுமானவன், தலைவருமானவன். நல்லிணக்க நாயகராக அவரது வழித்தோன்றல் மு.க.ஸ்டாலின் நடக்கிறார். அமெரிக்கா பயணத்திற்கு பிறகு பல நாட்கள் கழித்து பொதுக்கூட்டத்தில் பேசுகிறேன் என்றார்.

The post வேறு அரசியல் கட்சியில் சேர மாட்டேன்: டி.ராஜேந்தர் பேச்சு appeared first on Dinakaran.

Tags : D. Rajender ,Chennai ,DMK ,Chennai East District Ambattur South ,Dinakaran ,
× RELATED சிறந்த மதசார்பற்ற பிரதமரை...