×

இலங்கை தமிழர் நலன்

தமிழ்நாட்டை பொறுத்தவரை எப்போதுமே இலங்கை தமிழர்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை திமுக முன்னெடுத்துள்ளது. இலங்கையில் சிரமத்தில் வாடி தமிழகத்திற்கு வந்த அவர்களுக்கு முகாம் ஏற்படுத்தி, வாழ வைத்த பெருமையும் திமுகவிற்கே உண்டு. ‘இலங்கை தமிழர்கள் அகதிகளும் அல்ல, அவர்கள் அநாதைகளும் அல்ல, அவர்களுக்கு நாங்கள் இருக்கிறோம்’ என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தவுடன் ஓங்கி குரல் கொடுத்தார். அவர் ஆட்சி பொறுப்பேற்ற நாள் முதல் பலதரப்பு மக்களுக்கும் ஜீவாதார திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் முகாமில் வாழும் ஈழத்தமிழர்களுக்காக ரூ.317 கோடி மதிப்பீட்டில் பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தியுள்ளார்.

இலங்கை அகதிகள் முகாம் என்று இருந்ததை, இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் என பெயர் மாற்றிய பெருமையும் அவருக்கு உண்டு. மாவட்டங்கள் தோறும் காணப்படும் இலங்கை தமிழர்களுக்கான முகாம்களில் பழுதடைந்த நிலையில் உள்ள 7,469 வீடுகளை ரூ.231 கோடியே 54 லட்சம் செலவில் புதியதாக கட்டி தரப்படும் என முதல்வர் ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டிருந்தார். அதன் ஒரு பகுதியாக வேலூர், சேலம், தர்மபுரி உள்பட 13 மாவட்டங்களில் ரூ.79.70 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட 1591 இலங்கை தமிழர் குடியிருப்புகளை அவர் நேற்றும் திறந்து வைத்துள்ளார். அங்கு ஒரு வீட்டை திறந்து வைத்ததோடு, குடியிருக்கும் மக்களுடைய அடிப்படை வசதிகள் குறித்து கலந்துரையாடி மகிழ்ந்தார். இத்திட்டத்தின் கீழ் 19 இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்கள் பயன்பெறுகின்றன. இலங்கை தமிழர்களுக்கான முகாம்கள் அதிமுக ஆட்சிக்காலத்தில் அடிப்படை வசதிகள் அற்று மோசமாக காணப்பட்டன. குடியிருப்புகள் மழை வந்தால் ஒழுகும் நிலையிலும், குடிநீர், கழிவறை உள்ளிட்ட போதிய அடிப்படை வசதிகள் இன்றியும் இருந்தன. மக்கள் நலம் நாடும் திராவிட மாடல் அரசு ஆட்சிக்கு வந்தவுடன் அவற்றை சரி செய்திட உடனடி நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதன் விளைவாக தற்போது இலங்கை தமிழர்களுக்கு புதிய குடியிருப்புகள், உரிய வசதிகளோடு கட்டி கொடுக்கப்பட்டுள்ளன.

இலங்கை தமிழர்களின் குடும்பத்தினருக்கு இலவச எரிவாயு அடுப்பு மற்றும் இணைப்புகள், தொழிற்கல்வி படித்து வரும் இலங்கை தமிழ் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை, ரேஷனில் இலவச அரிசி என பல்வேறு நலத்திட்டங்களை திமுக அரசு செயல்படுத்தி வருகிறது. மேலும் முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள், முகாம்களுக்கு சாலை மற்றும் கழிப்பிட வசதிகளுக்காகவும் இந்த அரசு ஒதுக்கீடு செய்துள்ள நிதி ஏராளம். முகாமில் உள்ள தொழில் முனைவோர்களுக்கு தொழில் ரீதியிலான வாய்ப்புகளை இந்த அரசு நல்கி வருகிறது. முகாம்களில் உள்ள தமிழர்களுக்கு கோ ஆப் டெக்ஸ் மூலம் தரமான ஆடைகள் வழங்கிடவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒருமுறை சொன்னது போல், ‘‘தமிழக தமிழர்களையும், இலங்கை தமிழர்களையும் பிரிப்பது கடல் மட்டுமே. தமிழர்கள் எந்த நாட்டில் இருந்தாலும் ஒரு தாய் மக்களே’ என்ற நல்லெண்ணமே இலங்கை தமிழர்களை நம்மில் ஒருவராக மாற்றிக்கொண்டிருக்கிறது.

The post இலங்கை தமிழர் நலன் appeared first on Dinakaran.

Tags : Sri ,Tamil Nadu ,Dizhagam ,Tamils ,Sri Lanka ,
× RELATED ஒரு வாரத்திற்கு பிறகு கடலுக்குள் மீன்...