
போபால்: மத்தியபிரதேசம் போபாலில் நடைபெற இருந்த ‘இந்தியா’ கூட்டணியின் முதல் பொதுக்கூட்டம் ரத்து செய்யப்படுவதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது. 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜவை வீழ்த்தும் ஒரே நோக்கத்துடன் திமுக, காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், சமாஜ்வாடி, தேசியவாத காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம், ஆம் ஆத்மி, சிவசேனா உத்தவ் தாக்கரே அணி உள்ளிட்ட 28 முக்கிய எதிர்க் கட்சிகள் ஒன்றிணைந்து ‘இந்தியா‘ என்ற பெயரில் வலுவான கூட்டணியை உருவாக்கி உள்ளன. அண்மையில் மும்பையில் நடைபெற்ற ‘இந்தியா’ கூட்டணி கூட்டத்தில் 14 உறுப்பினர்களை கொண்ட ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டது.
‘இந்தியா’ கூட்டணியின் முதல் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் கடந்த 13ம் தேதி டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சரத் பவார் இல்லத்தில் கூடியது. அப்போது பல்வேறு மாநிலங்களில் ‘இந்தியா’ கூட்டணியின் பொதுக்கூட்டங்களை நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி விரைவில் சட்டப்பேரவை தேர்தலை நடைபெறவுள்ள மத்தியபிரதேச தலைநகர் போபாலில் ‘இந்தியா‘ கூட்டணியின் முதல் பொதுக்கூட்டத்தை வரும் அக்டோபர் 2ம் தேதி காந்தி பிறந்தநாளில் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது. இந்நிலையில் போபாலில் செய்தியாளர்களிடம் பேசிய மத்தியபிரதேச காங்கிரஸ் தலைவரும், முன்னாள் முதல்வருமான கமல் நாத், ‘இந்தியா’ கூட்டணியின் பொதுக்கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறினார். அதற்கான காரணங்கள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வௌியாகவில்லை.
The post இந்தியா’ கூட்டணியின் முதல் பொதுக்கூட்டம் ரத்து: காங்கிரஸ் அறிவிப்பு appeared first on Dinakaran.