×

காலிஸ்தான் விவகாரத்தில் கண்டனம் தெரிவித்ததால் இந்தியா-கனடா உறவில் விரிசல்: கனடா வர்த்தக அமைச்சரின் டெல்லி பயணம் ரத்து

புதுடெல்லி: கனடா வர்த்தகத்துறை அமைச்சர் மேரி எங்ஜியின் இந்திய பயணம் திடீரென்று ரத்து செய்யப்பட்டுள்ளதால் இந்தியா, கனடா வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை முடங்கி உள்ளது. இந்தியாவும், கனடாவும் கடந்த 2010ம் ஆண்டு முதலே ஒரு விரிவான வர்த்தக, பொருளாதார கூட்டு ஒப்பந்தம் குறித்து விரிவாக ஆலோசித்து வருகின்றன. 5 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 2022ல் மீண்டும் விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்கின. இருநாடுகளிடையே வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக இதுவரை 6 சுற்று பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன.

இருநாடுகளிடையே வர்த்தகம், முதலீடு தொடர்பான 6வது பேச்சுவார்த்தை கடந்த மே 8ம் தேதி கனடாவின் ஒட்டாவா நகரில் ஒன்றிய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், கனடா வர்த்தகத்துறை அமைச்சர் மேரி எங்ஜி ஆகியோர் இடையே நடந்தது. இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியா, கனடா வர்த்தக ஒப்பந்தத்தை முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதை இறுதி செய்யும் விதமாக கனடா வர்த்தகத்துறை அமைச்சர் மேரி எங்ஜி அக்டோபர் மாதம் இந்தியா வர திட்டமிட்டிருந்தார்.

இதனிடையே இந்தியா தலைமையில் ஜி20 நாடுகளின் உச்சி மாநாடு கடந்த 9, 10 ஆகிய தேதிகளில் டெல்லியில் நடைபெற்றது. இதில் கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கலந்து கொண்டார். மாநாட்டின் முதல்நாளில் பிரதமர் மோடி, ட்ரூடோ சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கனடாவில் இந்து கோயில்கள், இந்திய தூதரகங்கள் மற்றும் இந்தியர்கள் மீதான வன்முறை அதிகரித்து வருவதற்கு மோடி வேதனையையும், கண்டனத்தையும் தெரிவித்திருந்தார். இந்திய தூதரகம், இந்து கோயில்களில் மீது தொடரும் காலிஸ்தான் தீவிரவாத செயல்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்த மோடி, வன்முறைகளுக்கு எதிராக கனட அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ட்ரூடோவிடம் வலியுறுத்தினார். இதனால் மிகுந்த அதிருப்தியில் இருந்த ஜஸ்டின் ட்ரூடோ ஜி20 உச்சி மாநாட்டின் 2ம் நாள் அமர்வில் கலந்து கொள்ளவில்லை.

இந்நிலையில் கனடா வர்த்தகத்துறை அமைச்சர் மேரி எங்ஜியின் இந்திய பயணம் ஒத்தி வைக்கப்படுவதாக கனடா தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியா, கனடா வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்வதில் தடை ஏற்பட்டுள்ளதுடன், இருநாடுகளிடையேயான உறவிலும் விரிசல் ஏற்பட்டுள்ளது. கடந்த 2ம் தேதியே இந்தியாவுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தையை நிறுத்தி கொள்வதாக கனடா அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

The post காலிஸ்தான் விவகாரத்தில் கண்டனம் தெரிவித்ததால் இந்தியா-கனடா உறவில் விரிசல்: கனடா வர்த்தக அமைச்சரின் டெல்லி பயணம் ரத்து appeared first on Dinakaran.

Tags : Cracks ,India ,Calistan ,Canada ,trade ,Delhi ,New Delhi ,Commerce Minister ,Mary Engji ,Dinakaran ,
× RELATED மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு...