×

இந்தியா – மொராக்கோ சமநிலை: டேவிஸ் கோப்பை டென்னிஸ்

* சுமித் நாகல் அசத்தல்

லக்னோ: டேவிஸ் கோப்பை டென்னிஸ் உலக பிரிவு-2 முதல் சுற்றில் இந்தியா – மொராக்கோ அணிகள் தலா ஒரு வெற்றியுடன் சமநிலை வகிக்கின்றன. லக்னோ மினி ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கிய இப்போட்டியின் முதலாவது ஒற்றையர் ஆட்டத்தில் இந்திய வீரர் சசிகுமார் முகுந்த், மொராக்கோவின் டிலிமி யாசினுடன் மோதினார். டை பிரேக்கர் வரை இழுபறியாக நீடித்து முதல் செட்டை 7-6 (7-4) என கடுமையாகப் போராடி வென்ற சசிகுமார் 1-0 என முன்னிலை பெற்றார். 2வது செட்டில் கடும் நெருக்கடி கொடுத்த யாசின் 7-5 என வென்று பதிலடி கொடுக்க சமநிலை ஏற்பட்டது.

மூன்றாவது செட்டில் காயம் காரணமாக அவதிப்பட்டதால் 1-4 என பின்தங்கிய சசிகுமார், தொடர்ந்து விளையாட முடியாமல் போட்டியில் இருந்து விலகினார். இதையடுத்து, யாசின் வென்றதாக அறிவிக்கப்பட்டதால் மொராக்கோ அணி 1-0 என முன்னிலை பெற்றது. அடுத்து நடந்த 2வது ஒற்றையர் ஆட்டத்தில் இந்தியாவின் சுமித் நாகல், மொராக்கோ வீரர் ஆடம் மவுண்டிரை எதிர்கொண்டார். ஆடம் சர்வீஸ் ஆட்டங்களை எளிதாக முறியடித்து புள்ளிகளைக் குவித்த நாகல் 6-3, 6-3 என்ற நேர் செட்களில் வெற்றியை வசப்படுத்தினார். முதல் நாள் நடந்த ஒற்றையர் ஆட்டங்களின் முடிவில் இரு அணிகளும் 1-1 என சமநிலை வகிக்கின்றன.

கடைசி நாளான இன்று இரட்டையர் ஆட்டம் மற்றும் 2 மாற்று ஒற்றையர் ஆட்டங்கள் நடைபெற உள்ளன. இரட்டையர் ஆட்டத்தில் இந்தியாவின் ரோகன் போபண்ணா – யுகி பாம்ப்ரி இணை மொராக்கோவின் எலியட் – லாலாமி ஜோடியை சந்திக்கிறது. இந்த போட்டியுடன் டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டிகளில் இருந்து போபண்ணா ஓய்வு பெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

The post இந்தியா – மொராக்கோ சமநிலை: டேவிஸ் கோப்பை டென்னிஸ் appeared first on Dinakaran.

Tags : India ,Morocco ,Draw ,Davis Cup Tennis ,Sumit Nagal ,Lucknow ,Davis Cup Tennis World Division ,Dinakaran ,
× RELATED களை கட்டிய மாம்பழ சீசன் பழக்கடைகளில்...