×

இலை கட்சி நிர்வாகிகள் சேலம்காரர் மீது கொந்தளிப்பில் இருப்பதை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘என்னிடம் நேரடியாக வராதே என்று தொண்டர்களிடம் சொன்ன இலை தலைவரு யாரு…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.‘‘இலை கட்சியில் மாவட்ட செயலாளர்களை தாண்டி என்னிடம் வர வேண்டாமென கட்சிக்கு திரும்ப சென்றவர்களுக்கு கட்சியின் பொதுச்செயலாளராக உள்ள சேலம்காரர் ஷாக்கான பதில் கொடுத்திருக்கிறாராம். சென்னையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை நடத்திய சேலம்காரர், நம்மிடமிருந்து பிரிந்து சென்றவர்கள் திரும்ப வரும்போது அழைத்து கொள்ள வேண்டும் என்று மாவட்ட செயலாளர்களிடம் சொல்லி இருக்கிறாராம். கட்சிக்கு திரும்பி வர விருப்பம் தெரிவித்தாலும் இருக்கிற மாவட்ட செயலாளர்கள் அதற்கு தடை போட்டு வருகிறார்களாம். குறிப்பாக புரம் என்று முடியும் மாவட்டத்தில் தேனிகாரர், குக்கர் கட்சிக்கு சென்றவர்கள் திரும்பவும் இபிஎஸ் பக்கம் செல்ல காய் நகர்த்திய நிலையில், தனக்கு துரோகம் செய்தவர்களை உள்ளே நுழைய விடமாட்டேன், உள்ளே விட்டால் இவர்கள் நம்மை பதவிக்கு வேட்டு வைத்துவிடுவார்கள் என்று மாஜி அமைச்சர் தடை போட்டு வருகிறாராம்.

இதனால் கட்சி தலைமையில் நேரில் சந்தித்து இணைந்து கொள்ளலாம் என்று சேலம்காரரை நேரில் சந்தித்த நிர்வாகிகளுக்கு, கண்டிஷன் போட்டு திருப்பி அனுப்பிவிட்டாராம். மாவட்ட தலைமை நம்மை கட்சியில் சேர்க்க மறுக்கிறார்கள். கட்சியின் செயலாளர் என்னை நேரில் பார்க்க வேண்டாம். மாவட்ட செயலாளரை பார்க்க சொல்கிறார். ஆனால், மாவட்ட செயலாளரோ கட்சியில் இணைய வருபவர்களை தடுத்து வருகிறாராம். கட்சியில் என்ட்ரி கொடுத்தால் மட்டுமே அனுமதி என்று கண்டிஷன்போட்டு அனுப்பி விட்டாராம். கட்சி பொதுச்செயலாளராக இருந்தாலும் மாவட்ட செயலாளர்களின் பிடியில்தான் சேலம்காரர் சிக்கி உள்ளார். சொந்தமாக முடிவு எடுக்க தயங்குகிறார் என்று இலை கட்சியின் தலைவர் உள்ள சேலம் மாவட்டத்துக்கு சென்று திரும்பியவர்கள் புலம்புறாங்க…’’ என்றார் விக்கியானந்தா.

‘‘டெல்டாவில் புது முகங்களுக்கு வாய்ப்பு எந்த கட்சி வாய்ப்பு தரப்போகிறதாம்…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘இலைகட்சி தான்… அந்த கட்சி தனது கட்டுப்பாட்டுல வந்துருக்குற நிலையில சில மாற்றங்களை செய்யறதுக்கு சேலத்துக்காரர் முடிவு செய்திருக்காராம். மலைக்கோட்டை, கடலோரம், சின்ன மாவட்டம், நெற்களஞ்சியம் உள்ளிட்ட மாவட்டங்கள்ல கட்சியில மாற்றத்தை ஏற்படுத்த சேலத்துக்காரர் முடிவு செய்திருக்காராம். அதற்கான வேலையில கட்சியோட முக்கிய நிர்வாகிகள் ஈடுபட்டிருக்காங்களாம். மேற்கண்ட மாவட்டங்கள்ல புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுக்குறது குறித்து சேலத்துக்காரர் தீவிர ஆலோசனையில இருக்காராம். இதுக்கு காரணம் பழைய ஆட்களா இருக்குறதால அவங்க எப்ப வேணாலும் அணி மாறலாங்குற அச்சம் சேலத்துக்காரருக்கு இருக்குதாம். இதனாலேயே இந்த மாவட்டங்கள்ல கட்சியில் மாற்றத்தை ஏற்படுத்தற எண்ணம் வந்துருக்காம்…’’என்றார் விக்கியானந்தா.

‘‘ டெல்லியில் இருந்து வந்த ஒரே ‘போன் கால்’ கேட்டு ரயில்வே அதிகாரிகள் ஆடிப்போன கதையை சொல்லுங்க…’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘நாகர்கோவிலில் இருந்து மும்பை செல்லும் ரயில், 2 நாளுக்கு முன்னாடி மாங்கனி ஸ்ேடஷனுக்கு வந்திருக்கு. அப்போது தாமரை அடையாளங்களுடன் ரயிலில் பயணித்த வடமாநில கும்பல் ஒண்ணு பயங்கர அட்ராசிட்டி பண்ணி இருக்கு. அந்த நேரத்தில் அவர்களிடம் டிக்கெட் கேட்ட டிடிஆருக்கு நாலு பேர் சேர்ந்து கும்மாங்குத்து விட்டிருக்காங்க. இது தொடர்பா டிடிஆரு ரயில்வே போலீசில் புகார் அளிச்சிருக்காரு. ரயிலும் ஒரு மணி நேரமா புறப்படாமல் நின்னு போச்சு. இதற்கிடையில் ரயில்வே உயரதிகாரிகளுக்கு தலைநகரில் உள்ள ரயில்வே போர்டில் இருந்து ஒரு போன் கால் வந்ததாம். டிடிஆரை அடிச்சவங்க மேல எந்த புகாரும் குடுக்கக்கூடாது. உடனே அவர்களை அதே ரயிலில் ஏற்றி பத்திரமா அனுப்பி வையுங்க என்பது தான் அந்த போனில் வந்த தகவலாம். ஆனால் அதற்கு முன்னமே 4 பேரை பிடிச்சு விசாரணை நடத்தி அவங்க மேல எப்ஐஆரையும் போட்டுட்டாங்களாம். போன் கால் வந்ததும் பதறி அடிச்சிட்டு ஸ்பாட்டுக்கு வந்த உயரதிகாரி, அட்ரா சிட்டி பார்ட்டிகளை அப்படியே ரயிலில் அனுப்பி வச்சாராம். எப்ஐஆராவது மண்ணாவது… புகார வாபஸ் வாங்குய்யான்னு அடிபட்ட டிடிஆருகிட்ட சொல்லிட்டு ஆபிசரு போனாராம். அந்த போன் ஒன்றிய அமைச்சர் ஒருவரிடமிருந்துதான் வந்துள்ளது என்ற தகவல் இப்போ லீக் ஆகியிருக்காம்…’’ என்றார் விக்கியானந்தா.

‘‘இலைக்கும் தாமரை கட்சி தொண்டர்களுக்கும் இடையில் விரிசல் அதிகமாகிறதாமே, உண்மையா…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘தாமரைக்கட்சி மவுன்டன் தலைவர் தொடர்ந்து மறைந்த தலைவர்கள் குறித்து சர்ச்சைக்குரிய முறையில் பேசி வருகிறாராம். இது இலைக்கட்சி தொண்டர்களிடம் டென்ஷனை ஏற்படுத்தி இருக்காம். இதுகுறித்து இலைக்கட்சியின் மாஜி அமைச்சர்களே கண்டிச்சு இருக்காங்களாம். தென்மாவட்டத்தை பொறுத்தவரை தூங்கா நகரத்தின் நகர்ப்புற மாஜி அமைச்சர் மட்டுமே கடுமையாக பேசுறாராம். இதனால் தலைமையின் குட்புக்கில் இடம் பெற்றுள்ளார். புறநகர் மாஜி அமைச்சரோ அவ்வளவாக கண்டுகொள்வதில்லையாம். இதே நிலைதான் மற்ற மாவட்டங்களிலும் உள்ளது. எப்போதும் பரபரப்பாக பேசும் டாடி புகழ் மாஜி பால்வள மந்திரி, வழக்கத்துக்கு மாறாக ரொம்பவே கப்சிப் நிலையில் உள்ளார். பூட்டு மாவட்டத்தில் ஒரு மாஜி அமைச்சருக்கு கட்சி தலைமையே வாய்ப்பூட்டு போட்டுள்ளது. மற்றொரு மாஜியின் செயல்பாடுகளும் ‘நத்தை’ வேகத்திலேயே உள்ளது. இதனால், கட்சித்தலைமை தென்மாவட்டத்தின் மீது அதிருப்தியில் உள்ளாராம். ஏற்கனவே தூங்கா நகர மாநாட்டில் புளியோதரை மேட்டர் வலைத்தளங்களில் வைரலாகி கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தியது. இப்போது தாமரைக்கட்சி தமிழக தலைவர் சர்ச்சை பேச்சுக்கும், தகுந்த பதிலடி தராமல் போனால் தொண்டர்களே வெறுத்துப் போவார்கள் என சில மூத்த தலைவர்கள், தலைமையிடம் பேசியுள்ளார்களாம்…’’ என்றார் விக்கியானந்தா.

The post இலை கட்சி நிர்வாகிகள் சேலம்காரர் மீது கொந்தளிப்பில் இருப்பதை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : Leaf ,Salemkar ,Uncle ,Peter ,
× RELATED ரூ4 கோடி விவகாரத்தில் சொந்த கட்சி...