×

பாகிஸ்தானில் இருந்து காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

நகர்: பாகிஸ்தானில் இருந்து காஷ்மீருக்குள் ஊடுருவ முயன்ற 3 தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். ஜம்மு-காஷ்மீரில் அனந்த்நாக் மாவட்டத்தில் புதன்கிழமை தேடுதல் பணியின்போது வனப்பகுதியில் மறைந்து இருந்த தீவிரவாதிகள் பாதுகாப்பு படை வீரர்கள் மீது திடீர் தாக்குதல் நடத்தினார்கள். இதற்கு வீரர்களும் பதிலடி கொடுத்தனர். எனினும் தீவிரவாதிகள் சுட்டதில் ராணுவ உயரதிகாரி உட்பட 3 பேர் வீர மரணம் அடைந்தனர்.  இந்த சம்பவத்தை தொடர்ந்து தீவிரவாதிகளை பிடிக்கும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. நான்காவது நாளாக நேற்றும் இந்த பணி நீடித்தது. துப்பாக்கி சூடு நடந்த இடத்தில் வடக்கு ராணுவ கமாண்டர் லெப்டினன்ட் ஜெனரல் உபேந்திரா திவேதி நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

டிரோன்கள், ஹெலிகாப்டர்கள் மூலமாக மேற்கொள்ளப்பட்டு வரும் கண்காணிப்பு பணிகள் குறித்து வீரர்கள் அவருக்கு விளக்கமளித்தனர். இந்நிலையில் பாரமுல்லா மாவட்டத்தில் உரி செக்டாரில் ஹத்லாங்காவில் எல்லைக்கட்டுப்பாடு கோடு வழியாக தீவிரவாதிகள் இந்திய பகுதிக்குள் நேற்று ஊடுருவ முயன்றனர். பல முறை எச்சரித்தும் அவர்கள் முன்னேறியதால் வீரர்கள் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இதில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இரண்டு தீவிரவாதிகளின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் நிலை அருகே இருந்து துப்பாக்கி சூடு நடத்திய மற்றொரு தீவிரவாதியின் உடலை மீட்பதில் இடையூறு ஏற்பட்டுள்ளது. கொல்லப்பட்ட தீவிரவாதிகள் யார், எந்த அமைப்பை சேர்ந்தவர்கள் என்று அடையாளம் காணப்படவில்லை.

இதனிடையே ரியாசி மாவட்டத்தில் பவ்னி மற்றும் மஹோர் தாலுக்காவில் தேசவிரோத சக்திகளுக்கு தளவாட உதவி மற்றும் தகவல்களை வழங்குவதாக வந்த உளவுத்துறை அறிக்கையின் அடிப்படையில் சிறப்பு புலனாய்வு பிரிவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

The post பாகிஸ்தானில் இருந்து காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை appeared first on Dinakaran.

Tags : Kashmir ,Pakistan ,Jammu ,Anantnag ,Dinakaran ,
× RELATED காஷ்மீரில் நடந்த பயங்கரவாத...